ஞாயிறு, 14 ஜூன், 2009

மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை இஸ்லாமிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இஸ்லாமிய சமூக மக்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம் சார்பில் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியது:

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.

இதற்கு காரணம் கருணாநிதி ஆட்சியின் சாதனை மக்களைச் சென்றடைந்ததுதான்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றரை சதவீதம் இடஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கியுள்ளார்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தினர் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

எனவே அவர்கள் அதிக கவனம் செலுத்தி இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2004 ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இப்பகுதியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களை மசூதியில் தங்க வைத்து உணவு அளித்து நிவாரண உதவிகளை வழங்கியது பாராட்டுக்குரியதாகும்.

கிராமமாக இருந்த பரங்கிப்பேட்டை திமுக அரசின் திட்டங்களால் நகரமாக ஜொலிக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

மூத்த மருத்துவர் டாக்டர் எஸ்.சேஷாத்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், மாநில அளவில் பதக்கம் பெற்ற குத்துச்சண்டை வீரர் ஹெச். ஹமீது கவுஸிற்கு விருதையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்

செல்வம் வழங்கி கெளரவித்தார்.

பேரூராட்சி தலைவரும், ஐக்கிய ஐமாஅத் தலைவருமான எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார்.

பேராசிரியர் ஏ. சித்திக் அலி பாகவி முன்னிலை வகித்தார்.

ஐ. முஹமது இசாம் வரவேற்றார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் முத்து பெருமாள், அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர் கே. கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

எல். ஹமீதுமரைக்காயர் நன்றி கூறினார்.

மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்.... www.mypno.com

வியாழன், 11 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி பாதித்த மீனவர்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்கள்

பரங்கிப்பேட்டை அருகே சுனாமியால் பாதித்த கிள்ளை பகுதி மீனவர்கள் மற்றும் இருளர்கள் 1,088 பேருக்கு கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சுனாமியின்போது பரங்கிப்பேட்டையை அடுத்த கிள்ளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இருளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு மீன் வளத்துறை சார்பில் சுனாமி பாதித்த மக்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்களாக மீன் பதனிடும் ஐஸ் பெட்டி 50 லிட்டர், 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா ஒரு பெட்டி முதற்கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி முடசல் ஓடை சூரியா நகரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

மேற்பார்வையாளர் புண்ணியராஜ் வரவேற்றார்.

மீன்துறை ஆய்வாளர் நாபிராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் முடசல் ஓடை, சூரியா நகர், நடு முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பட்டரையடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் நகர் பகுதிகளை சேர்ந்த இருளர்கள் உள்ளிட்ட 1,088 பேருக்கு ஐஸ் பெட்டிகளை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

புதன், 10 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே கோவிலில் நகைகள் திருட்டு

பரங்கிப்பேட்டை அருகே கோவில் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் கோணேரியம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த காசு மாலை, தாலி, குண்டு, பித்தளை குவளை உள்ளிட்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கோவில் பூசாரி தேவகி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடலூரிலிருந்து வந்த நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோலிலில் புகுந்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.