புதன், 17 ஜூன், 2009

கூடுதல் பஸ் இயக்கக் கோரி மறியல் பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து பாதிப்பு

பரங்கிப்பேட்டை அருகே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கொடிப்பள்ளம், மேலச்சாவடி, அண்ணாப்பாலம், வடக்குச்சாவடி வழியாக நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிதம்பரத்திற்கு வந்து செல்வதற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக தற்போது இயக்கப்படும் பஸ் நேரத்தை மாற்றவும், கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

இப் பிரச்னையை வலியுறுத்தி ஏற்கனவே சாலை மறியல் நடத்தப்பட்டபோது, சிதம்பரம் தாசில்தார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நஞ்சைமகத்து வாழ்க்கை பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு சிதம்பரம்-கிள்ளை சாலையில் மேலச்சாவடி பஸ் நிறுத்தத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

கிள்ளை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை சிதம்பரம் அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த பகுதியில் நடந்த திடீர் மறியலால் சிதம்பரம்- கிள்ளை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பரங்கிப்பேட்டையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டையில் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் தலைமையில் 9 பேரும், சிதம்பரத்தில் நடனம் தலைமையில் 120 பேரும், பண்ருட்டியில் ராதாகிருஷ்ணன் தலைமையில் 90 பேரும், நெய்வேலியில் மூவேந்தர் தலைமையில் 45 பேரும் கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.

கடலூரில் வக்கீல்கள் சங்கத் தலைவர் லோகநாதன் தலைமையில் 250 பேரும், திட்டக்குடியில் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் 27 பேரும், காட்டுமன்னார்கோவிலில் செந்தில்குமார் தலைமையில் 15 பேரும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் கோர்ட் வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். செயலாளர் ரங்கநாதன், ஆனந்தக் கண்ணன் முன்னிலை வகித்தனர். பின் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரையில் வக்கீல்கள் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 16 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 எஸ்.ஐ.,க்கள் இட மாற்றம்

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 சப் இன்ஸ்பெக்டர்கள், 37 போலீசாருக்கு இட மாறுதல் அளித்து எஸ்.பி., பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி ௩௬௫ போலீசாருக்கு பொது பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 37 போலீசாருக்கும் 17 சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இட மாறுதல் பெற்றுள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:

  1. குமராட்சியில் பணியாற்றிய (கிரைம்) கருணாநிதி சிதம்பரம் தனிப் பிரிவிற்கும்,
  2. சிதம்பரம் (தனிப் பிரிவு) சிங்காரவேலு ரெட்டிச்சாவடிக்கும்,
  3. மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு ஆசைத்தம்பி சோழத்தரத்திற்கும்,
  4. சோழத்தரம் மணிவாசகம் சிதம்பரம் தாலுகாவிற்கும் (குற்றப் பிரிவு),
  5. ரெட்டிச்சாவடி மதிவாணன் சிதம்பரம் டவுனுக்கும் (சட்டம் ஒழுங்கு),
  6. ரெட்டிச்சாவடி தீபா மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவிற்கும்,
  7. பரங்கிப்பேட்டை கவிதா கடலூர் துறைமுகத்திற்கும் (மகளிர் பிரிவு),
  8. கடலூர் துறைமுகம் மகேஸ்வரி பரங்கிப்பேட்டைக்கும்,
  9. சிதம்பரம் டவுன் சேக்கிழார் கடலூர் துறைமுகத்திற்கும்,
  10. சிதம்பரம் தாலுகா (ஓ.டி., சிறைத் துறை) அரங்கநாதன் காட்டுமன்னார்கோவிலுக்கும் (கிரைம்),
  11. கடலூர் (கட்டுப்பாட்டு அறை) சண்முகம் தனிப்பிரிவு தலைமையிடத்திற்கும்,
  12. கடலூர் தனிப்பிரிவு தலைமையிடம் ரத்தினவேல் புதுப்பேட்டைக்கும் (ஓ.டி., தனிப் பிரிவு கடலூர்),
  13. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கிருஷ்ணவேணி சிதம்பரத்திற்கும்,
  14. சிதம்பரம் கலாவதி கடலூருக்கும்,
  15. கடலூர் புதுநகர் வசந்தகுமாரி சிதம்பரத்திற்கும்,
  16. சிதம்பரம் சித்ரா கடலூருக்கும்,
  17. புதுச்சத்திரம் குணசேகரன் மாவட்ட குற்றப் பிரிவிற்கும்

இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை எஸ்.பி,. பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.

Source: தினமலர்