சனி, 22 ஜனவரி, 2011

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளு-முள்ளு!

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள்- போலீசாரிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வேலி அமைக்கும் ஊழியர்கள் கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புதுக்குப்பம் பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.இதில் பஞ்சங்குப்பம் சுடுகாடு பகுதியில் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கருங்கற்கள் மூலம் நேற்று வேலி அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த முயன்றனர் இதற்கிடையில் தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களிடம் குறைவாக பணம் கொடுத்து விட்டு விலைக்கு வாங்கி விட்டனர். மேலும் இந்த நிறுவனம் வந்தால் நாங்கள் மணிலா போன்ற பயிர்களை இங்கு உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே இந்த மின் நிலையம் இங்கு தேவையில்லை என்று கூறினர்.

இதை கேட்ட போலீசார் உரிய அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் பேசி முடிவு செய்யலாம் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

அதற்குள் சிலர் தனியார் நிறுவன ஊழியர்களை வேலி அமைக்க விடாமல் தடுத்தனர். இவர்கள் கூட்டமாக வருவதை பார்த்ததும் தனியார் நிறுவன ஊழியர்கள் தப்பி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதை பார்த்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அனைவரும் நெற்பயிர்கள் முளைத்துள்ள நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விளை நிலங்களில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Daily Thanthi

வெள்ளி, 21 ஜனவரி, 2011

"ம்ம்....இந்தியேன்டா..."



விபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் : வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.

பத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாக படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.

சந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அல்ட்சியபடுத்திவிட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.

சரி முள்ளங்கி எவ்ளோன்னே... முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம் ஒன்றை கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

என்னன்னே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தை போய் இப்படிதரயில கொட்டி வெச்சிருக்கிங்க என்று கேட்டேன். "எத்தன பேர பாத்துட்டோம்...வாங்கறதுன்ன வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு ராசா" என்ற மாதிரி பார்வையை வீசினார் அவர்.
கால் கிலோ அஞ்சி ரூபாக்கு கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

சந்தைக்கு ரொம்ப பேர் சுருக்கு பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)

பல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிகொண்டார்கள்.
ஒரு கத்திரி இருபது ரூபாயாம், கேரட்ன்னு சொல்லாதிங்க காசி கேட்டுற போறாங்க என்று சகட்டு மேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.
ஹ்ம்ம். இடுக்கனிலும் நகைப்பு..

பாவம் இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்பு பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் மிஸ்டர் பள பளா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாக தெரிந்தது.

பிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கி கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டு கிளம்பினேன். எண்ணி வைக்க கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்து கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பண்ணினால் தலை சுற்றியது இரநூற்றி ஐம்பது ரூபாய்கள்..

வீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. " டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம் " என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நீடுர் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி : வஃக்ப் வாரியத் தலைவர் விளக்கவுரை




நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று(17-ஜனவரி-2011) பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது.

நீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத்தில் வக்ப் வாரியத் தலைவர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், சிக்கந்தர், சிதம்பரம் தாலுகா இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்:
கேரளாவில் ஏழு, ஆந்திராவில் நான்கு கர்நாடகாவில் நான்கு என முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்று கூட இல்லாத இழி நிலையை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் புரட்சியின் போது வாளாவிருந்து உலக முன்னேற்றத்தில் தங்கள் பங்கை இழந்த முஸ்லிம்கள் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் சோம்பி இருந்தால் வரலாறு அவர்களை புறந்தள்ளி விடும் என்று எச்சரித்தார்.

பல்வேறு முஸ்லிம் தனியார் நிறுவனங்கள் வக்ப் இடத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கேட்டு வந்த போதும் தான் அதனை சமுதாய நலனுக்காக மறுத்து விட்டதாகவும் தற்போது பொதுநலன் மற்றும் பொதுத்தளத்தில் நின்று இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது எனவும் கவிக்கோ கூறினார். இதனை ஒரு மருத்துவக் கல்லூரியாக மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளும் உள்ளடக்கிய ஒரு மருத்துவப் பல்கலைகழகமாக நிர்மாணிப்பதற்கே தான் விரும்பவதாகவும் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி பற்றிய ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் ஒளி ஒலி காட்சி ப்ரஜக்டர் மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மருத்துவகல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு நிலை, எதிர்பார்ப்பு, வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டிருந்தன.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் 160 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தனி நபர்கள், ஜமாஅத் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றிலிருந்தும் பங்குகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
MECCA (Muslim Educational Charitable with Care and Aid) Trust என்று ஒன்று உருவாக்கப்பட்டு அந்த டிரஸ்ட்டே (50 உறுப்பினர்கள் கொண்டது) இந்த மருத்துவ கல்லூரியை நிர்வகிக்கும் என்றும் அந்த ட்ரஸ்ட்டில் மிஸ்பாஹுல் ஹுதாவை சார்ந்த ஒரு நபரும் வக்ஃப் சார்பில் ஒரு நபரும் இருப்பர் மீதமுள்ள நாற்பத்திஎட்டு பேரும் இதற்காக பொருளுதவி செய்தவர்களிலிருந்தே தேர்வு செய்யப்படுவர் என்றார் கவிக்கோ. இதனை மிஸ்பாஹுல் ஹுதாவும் வக்ஃபும் இணைந்து செய்கின்றன என்பது இவ்விதமே என்று விளக்கினார். ஆட்சி மாற்றம் எந்த விதத்திலும் இதனைப் பாதிக்காது என்றும் விளக்கி கூறினார்.

ஹிதாயத்துல்லாஹ் பேசுகையில் ஸதகத்துல் ஜாரியா வகையில் வரும் இந்த உயரிய நற்செயலுக்குப் பொருளும் ஆதாரமும் வழங்குவதில் உள்ள மறுமைப் பலன்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியாக, பலர் தங்களது பங்களிப்பினை கவிக்கோ அவர்களிடம் செலுத்தினார்கள்.
பிறகு உணவு உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

கூட்ட அரங்கிலிருந்து Hameed Maricar
photos - இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் குழுமம்