புதன், 26 ஜனவரி, 2011

ஊரெங்கும் கொண்டாட்டம்...!










பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் புகழேந்தி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனை, மின்சார வாரியம், சுங்க அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி கொடியேற்றி வைத்ததார்.

படங்கள்: ஹம்துன் அப்பாஸ், முத்துராஜா

சனி, 22 ஜனவரி, 2011

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளு-முள்ளு!

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள்- போலீசாரிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வேலி அமைக்கும் ஊழியர்கள் கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புதுக்குப்பம் பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.இதில் பஞ்சங்குப்பம் சுடுகாடு பகுதியில் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கருங்கற்கள் மூலம் நேற்று வேலி அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த முயன்றனர் இதற்கிடையில் தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களிடம் குறைவாக பணம் கொடுத்து விட்டு விலைக்கு வாங்கி விட்டனர். மேலும் இந்த நிறுவனம் வந்தால் நாங்கள் மணிலா போன்ற பயிர்களை இங்கு உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே இந்த மின் நிலையம் இங்கு தேவையில்லை என்று கூறினர்.

இதை கேட்ட போலீசார் உரிய அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் பேசி முடிவு செய்யலாம் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

அதற்குள் சிலர் தனியார் நிறுவன ஊழியர்களை வேலி அமைக்க விடாமல் தடுத்தனர். இவர்கள் கூட்டமாக வருவதை பார்த்ததும் தனியார் நிறுவன ஊழியர்கள் தப்பி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதை பார்த்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அனைவரும் நெற்பயிர்கள் முளைத்துள்ள நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விளை நிலங்களில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Daily Thanthi

வெள்ளி, 21 ஜனவரி, 2011

"ம்ம்....இந்தியேன்டா..."



விபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் : வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.

பத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாக படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.

சந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அல்ட்சியபடுத்திவிட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.

சரி முள்ளங்கி எவ்ளோன்னே... முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம் ஒன்றை கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

என்னன்னே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தை போய் இப்படிதரயில கொட்டி வெச்சிருக்கிங்க என்று கேட்டேன். "எத்தன பேர பாத்துட்டோம்...வாங்கறதுன்ன வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு ராசா" என்ற மாதிரி பார்வையை வீசினார் அவர்.
கால் கிலோ அஞ்சி ரூபாக்கு கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

சந்தைக்கு ரொம்ப பேர் சுருக்கு பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)

பல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிகொண்டார்கள்.
ஒரு கத்திரி இருபது ரூபாயாம், கேரட்ன்னு சொல்லாதிங்க காசி கேட்டுற போறாங்க என்று சகட்டு மேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.
ஹ்ம்ம். இடுக்கனிலும் நகைப்பு..

பாவம் இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்பு பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் மிஸ்டர் பள பளா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாக தெரிந்தது.

பிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கி கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டு கிளம்பினேன். எண்ணி வைக்க கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்து கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பண்ணினால் தலை சுற்றியது இரநூற்றி ஐம்பது ரூபாய்கள்..

வீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. " டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம் " என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.