செவ்வாய், 26 ஏப்ரல், 2011

வீடு தேடி வரும் மருத்துவ உதவிகள்: சிங்கை நல்வாழ்வு சங்கத்துடன் இணைந்து ஜமாஅத் உதவிக்கரம்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல் வாழ்வு சங்கம், சிங்கை நிதியுதவி மற்றும் ஆலோசனை கொண்டு பெறப்பட்ட இரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் இரத்த சர்க்கரையளவு காணும் கருவி இவைகளை பரங்கிப்பேட்டை பொது மக்களின் மருத்துவத்திற்காக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தால் நியமிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் பணியிலிருக்கும் செவிலியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தேவையானவர்களுக்கு ஊசி போடுதல், இரத்த அழுத்தம், இரத்தப்பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற மருத்துவ சேவைகள் நமதூர் மக்களின் பெரு வரவேற்பை பெற்றுள்ள சூழ்நிலையில், இப்பணி அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகின்றன. சர்க்கரை அளவு காணுவதற்கு மட்டும் 40 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய ஐக்கிய ஜமஅhத், இம்மருத்துவ சேவைகளை சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்க நிதி மூலம் சிறப்பாக செய்ய உதவி புரிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல் வாழ்வு சங்கம்-சிங்கை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு பரங்கிப்பேட்டை பொதுமக்களின் சார்பில் நன்றியினையும், மனமார்ந்த பிரார்த்தனைகளை இறைவன் முன் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

பரங்கிப்பேட்டை மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்!

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அருகே, வெளியூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்ததால், மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 6 மினி வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் பிடித்து வரும் மீன்களை சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். பரங்கிப்பேட்டை விசைப்படகு சங்கத்தினர், மீன்பிடி தடைக்காலம் முழுவதும் உள்ளூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை மட்டும் வாங்க வேண்டும். வெளியூர் மீனவர்களின் மீன்களை வாங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
நேற்று காலை கடலூர் ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், அன்னங்கோவில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கச் சென்றனர். இதை எதிர்த்து, ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,000 பேர், ஆறு மினி வேன்களை அடித்து நொறுக்கி, மீன் நிறுவனங்களில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். கடலில் சென்ற மீனவர்கள், இத்தகவலைக் கேட்டதும், கரைக்கு வந்து, அன்னங்கோவில் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கினர்.

photos: TNTJ-PNO


 


வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மத்திமீன் அதிகரிப்பு


தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் லாஞ்சில் சென்று மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிய படகில் மீனவர்கள் கடலோரம் மீன்களை பிடிப்பது வழக்கம்.இந்நிலையில் வியாழக்கிழமை பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் அருகே உள்ள பகுதியில் மத்திமீன் வருகை அதிமாகி தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று பிடித்தனர். அப்பகுதி மீனவர்கள் ஒரு படகில் சுமார் 3 முதல் 4 டன் வரை மத்திமீன்களை பிடித்தனர்.

இந்த மத்திமீன் ஒரு டன் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்த மீன்கள் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. இவையல்லாமல் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தீவனத்துக்காக இந்த மத்திமீனை வாங்கி காயவைத்து உலர்த்தி வைத்துள்ளனர். வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக இந்த மத்திமீன்கள் பரங்கிப்பேட்டை பகுதிக்கு படையெடுத்திருக்கலாம் என கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் டி.டி.அஜீத்குமார் தெரிவித்தாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
படம்: மாடல்