வியாழன், 26 மே, 2011

நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்: MYPNO.COM-ல் காணலாம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. அதே போல மெட்ரிக் தேர்வு,ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் தேர்வுகள் முடிவுகளும் நாளை வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளை MYPNOவில் (www.mypno.com) உடனுக்குடன் காணலாம்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இந்தத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.

இந் நிலையில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.

இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியாகின்றன.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், MYPNO.COM மற்றும் அரசு இணையத் தளங்களிலும் உடனுக்குடன் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

புதன், 25 மே, 2011

TNTJ கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையில் கோடைகால பயிற்சி முகாம் 09.05.2011 ஆரம்பிக்கபட்டு 18.05.2011 நிறைவடைந்தது.  பத்து நாட்கள் நடைப்பெற்ற இந்த பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த  21.05.2011 சனிக்கிழமை அன்று மாவட்ட துனை செயலாளர் சகோ.தாஜூதீன் அவர்களின் தலைமையில் நகர தலைவர் சகோ.முத்துராஜா முன்னிலையில் "மஸ்ஜிதுத் தவ்ஹீத்" பள்ளியில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் பயிற்சி முகாமில் சிறப்பாக பயின்ற மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது..

source: tntj-pno

செவ்வாய், 24 மே, 2011

கட்டாயக் கல்விச் சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கட்டாய இலவசக் கல்வித் சட்டத்தை மீறிச் செயல்படும் கடலூர் மாவட்டத்  தனியார் பள்ளிகளை கண்டித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.

இச் சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை,  ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்

கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.

சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.  எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.

பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெண்புறா குமார்,  அருள்செல்வம், திருநாவுக்கரசு, லெனின், பி.பண்டரிநாதன், பாலசுப்பிரமணியன், கதிர் மணிவண்ணன், தெய்வகுரு, எஸ்.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.