வியாழன், 18 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டையில் பள்ளி இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு!

பரங்கிப்பேட்டை பகுதியில் பள்ளி இடை நின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் கண்டறிந்து கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள்
கண்டறியும் பணி நடந்தது. இதில் பரங்கிப்பேட்டை பகுதியை
சேர்ந்த ஊராட்சி பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் பரங்கிப்பேட்டை பகுதியில் 210 குடியிருப்புகளில் வீடு, வீடாக சென்று இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் குறித்து
விசாரணை செய்து கணக்கு எடுப்பு செய்தனர்.
இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அம்பிகாகுமாரி, உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்கள் தியாகராஜன், சரஸ்வதி லட்சுமி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், கிராம கல்விக்குழு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.

புதன், 17 ஏப்ரல், 2013

குமாஸ்தா கொலை: சஞ்சிவீராயர் கோயில் தெருவில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!



பரங்கிபபேட்டை: பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் குமாஸ்தா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரத்தில் புதைக்கப்பட்ட உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பரங்கிபபேட்ங்கிடை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக இருந்தார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடலூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரங்கிபபேட்டை அகரம் காலனி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை திரும்ப பெற்றனர்.
இதனையடுத்து நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மாட்டோம், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் மெத்தனம் காட்டுகிறது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அகரம் காலனி மக்கள் நேற்று மாலை 7 மணியளவில் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியில் திரும்பப்பெறப்பட்டது.

திங்கள், 15 ஏப்ரல், 2013

கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை போல் ஸ்டார் அமைப்பு மற்றும் கல்விக்குழு (இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்) இனைந்து நடத்திய 10, 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான மேற்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
 
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் (பொறுப்பு) அலி அக்பர் அவர்கள் தலைமை ஏற்றார். போல் ஸ்டார் அமைப்பின் தலைவர் ஹமீது அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார். போல் ஸ்டார் அமைப்பின் செயலாளர் செய்யது அலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்விக்குழுவின் முஹம்மத் அலி (ஜமீல்) குர்ஆன் கிராஅத் (தமிழாக்கத்துடன்) ஓதினார்.    
   
சிறப்பு விருந்தினர் மற்றும் வழிகாட்டல் உரை நிகழ்த்திய இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் சொல்வன்மை மிக்க முறையில் தனது உரையினை துவங்கி கல்வியின் அவசியத்தை மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவாக புரிந்துக்கொள்ளும் வண்ணம் உரையாற்றினார். 

இத்தனை வகையான படிப்புக்கள் உள்ளனவா என்று வந்திருந்த மாணவர்கள் வியக்கும் வண்ணம் கிட்டத்தட்ட 100 வகையான படிப்புக்களை பற்றி விளக்கமாக கூறினார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் பெரிய ஸ்லைட்டுடன் கூடிய பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தான். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விஷயங்கள் எளிதில் புரியும் வண்ணம் ஒவ்வொரு படிப்பையும் படங்களாக ஸ்லைட் மூலம் ஓடவிட்டு காட்டி தொகுத்து வழங்கியது சொல்லவந்த விஷயத்தை பற்றி தெளிவை வழங்கியது. 

பிறகு சில மாணவர்கள் கேள்விகள் கேட்டனர். அவற்றிக்கு பதிலளிக்கப்படது. நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் (FEEDBACK / SUGGESTIONS) கேட்டு வாங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானங்களும் பிஸ்கட்களும் வழங்கப்பட்டது.

-அபூ பிரின்சஸ்