ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஃபித்ரா ஆலோசனைக் கூட்டம்!


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  இந்தாண்டு நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 60 நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஜித்தாவில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!









ஜித்தா: சவூதி அரேபியா ஜித்தா மண்டல பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான பரங்கிப்பேட்டை முஸ்லிம் அசோஷியேஷன்  சார்பாக நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஜித்தா ஷரஃபிய்யாவில் இருக்கும் சென்னை தர்பார் உணவகத்தில் நடைபெற்றது. தலைவர் யூ.சாஹுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை ஐ.முஹம்மது ஜமீல் இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். 

கடந்த ஆறு மாத காலத்தில் கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் இவைகளுக்காக இவ்வமைப்பு நல்கிய பொருளாதார உதவிகள் குறித்து, அமைப்பின் பொருளாளர் கே.முஹம்மது மஸ்ஹுத் அறிக்கையினை தாக்கல் செய்தார். 

ஜித்தா பன்னாட்டு பள்ளியில் (+2 தேர்வில்) பள்ளியளவில் படித்து  இரண்டாம்  இடத்தை  பிடித்த  மக்கா-வில் பணிபுரியும் பரங்கிப்பேட்டை மொய்தீன் சாஹிப்  மகள் சபியுன்னிஷா-வை, பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
 பரங்கிப்பேட்டை முஸ்லிம் அசோஷியேஷன்  மூத்த  உறுப்பினர்   பொறியாளர் எம்.ஹெச்.முஹம்மது ஷாஃபி மரைக்காயர்  மாணவியின் சிறிய  தந்தை முஸ்தபா கமாலிடம் கேடயத்தினை வழங்கினார்.

இரவு உணவிற்கு பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், மற்றும் குடும்பத்தினர்களும் கலந்துக்கொண்டனர்.

படங்கள்: முஸ்தபா

வியாழன், 11 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டையில் ரமலான் தொடங்கியது


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு நேற்று இரவு தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு , ரமலான் பிறை நேற்று முன்தினம் தென்படாத காரணத்தால், இன்று முதல் (வியாழக்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று இரவு முதல் ரமலான் மாதம் பரங்கிப்பேட்டையில் துவங்கியது. இதனையொட்டி, அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று இரவு தராவீஹ் தொழுகை நடைப்பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இதே போன்றே ஷ'பான் மாதத்தை 30 ஆக கணக்கிட்டு இன்று முதல் ரமலான் முதல் நோன்கு தொடங்குகிறது என்று முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இன்று காலையில் சஹர் உணவு  சாப்பிட்டு அனைவரும் நோன்பை ஆரம்பித்தனர். அதிகாலை சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களாக இருக்கும்.

இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும்.