வியாழன், 14 ஜனவரி, 2016

கலிமா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சத்தமில்லாமல் ஒரு அறிவு புரட்சி நிகழ்ந்து வருகிறது நமதூர் கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில். மதிப்பெண்கள்தான் உண்மையான மதிப்பு எண்கள் என்ற மாயையில் சமுதாயம் சிக்கித் தவிக்க, கல்வி என்பது மதிப்பெண் வேட்டை மட்டுமல்ல; அறிவு தேடலே அதன் சாரம் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர் அதன் மாணவர்கள். 

விஷயம் ஒன்றுமில்லை... சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் கலிமா பள்ளிக்கூட மாணவர்கள் H. நூர்தீன் அஹமத், மற்றும் A. ஷாஹுல் ஹமீது ஆகிய இரண்டு அறிவு சுட்டிகள் முதலிடம் பிடித்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பும் வித்தியாசமானது. அந்த நிகழ்வு தந்த தாக்கத்தில் தனது மாணவர்களின் அறிவியல் தாகத்தினையும், ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் முகமாக பள்ளி நிர்வாகம் ஒரு அறிவியல் கண்காட்சி நடத்திக்காட்டிட முடிவெடுத்தது. சமீபத்தில் மறைந்த கலிமா பள்ளியின் நிறுவனர் பெரியவர் கலிமா K. ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் நினைவாக அன்னாரது பெயரிலேயே பள்ளியின் ஒரு பகுதியில் "அறிவியல் கண்காட்சி அரங்கத்தினை" நிறுவியது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த அறிவியல் கண்காட்சியினை திட்டமிட்டு அறிவிப்பு செய்தது. ஆனால் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் அந்த நிகழ்வு கடந்த 09.01.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கலிமா பள்ளி மாணவர்களின் படைப்பு அங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் தங்களின் விருப்பம் போல படைப்புக்களையும், கண்டுபிடிப்புக்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். தங்களது படைப்புக்களை விளக்க வேண்டியபோது தெளிவாகவும், அழகாகவும் விளக்கினர். வழக்கம்போல் மாணவிகள் தங்களது அறிவியல் திறனை வெளிப்படுத்துவதில் மாணவர்களுக்கு சவாலாக விளங்கினர்.  

அங்கு நிலவிய சூழலே ஒரு அறிவுசூழலாக விளங்கியது. சூரிய ஒழி மூலம் மின்சாரம் பெறுவது, தொழிற்சாலைகளால் ஏற்படும் கெடுதி, நோய்கள் அதன் காரணங்கள், விளைவுகள் பற்றி .., சில சுவையான கணித விளையாட்டுக்கள், உலக அதிசயங்கள் பற்றி ஒரு மாணவன்... உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபா பற்றி.. என்று சுவையான அம்சங்களுடன் களை கட்டி இருந்தது கலிமா பள்ளியின் இந்த அறிவியல் கண்காட்சி. அதைவிட சிறப்பு மாணாக்கர்களிடம் தெறித்த ஆர்வம்... இதை நான் எக்ஸ்ப்ளைன் பண்ணவா? என்று முன்வந்து விளக்கியதை காணும்போது நமக்கும் அந்த படைப்பை பற்றி ஆர்வம் தொற்றுகிறது.

மாநில அளவில், மாவட்ட அளவில் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது கொஞ்சம் எளிமையான விஷயம்தான். பரங்கிபேட்டை போன்ற சிறிய ஊரில் அதுவும் இதுபோன்ற அறிவுசார் தளங்களில் பொதுபுத்திக்கு அத்தனை இல்லாத ஒரு ஊரில் இத்தனை சிறப்பாக ஒரு அறிவியல் கண்காட்சியை அதன் இயல்பான அழகுடன் நடத்தி காண்பித்தது புதிது மட்டுமல்ல கலிமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு சாதனைதான். இதுபோன்ற அறிவு தளங்களில் ஆர்வமாக இயங்கும் போக்கு இனிவரும் காலங்களில் அதிகப்பட இந்த அறிவியல் கண்காட்சி ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்கிறது. 

MYPNOன் வாழ்த்துக்கள்!

செய்தி: அபூ பிரின்சஸ் / படம்: ஹம்துன் அஷ்ரஃப்

வெள்ளி, 12 ஜூன், 2015

பரங்கிப்பேட்டை பெற்றோர்களே! புகார் அளியுங்கள்!! ப்ளீஸ்....

தமிழக அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் பரங்கிப்பேட்டை தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 01-06-2015 அன்று தனியார் பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் நாளை(12-06-2015 வெள்ளி ) நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்திருந்த நிலையில், இன்று சாக்ரடீஸ் பள்ளியில், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பச்சையப்பன், மாவட்ட தொடக்க கல்வி திருஞானம், உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி, பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜி.ரமேஷ் பாபு தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ” அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் தனி நபர் புகார் அளித்தால். அப்புகாரை ஏழு பேர் கொண்ட குழு ஆய்வு செய்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் பள்ளிகளால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பரங்கிப்பேட்டை பெற்றோர்கள் பலரும் அதிக கட்டணம் வசூலித்துள்ள தனியார் பள்ளிகள் குறித்து அச்சமின்றி புகார் கொடுக்க முன் வர வேண்டும்.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்து MYPNO முன்பே செய்தி வெளியிட்டிருந்ததை நினைவு கூர்கிறோம்.


புகைப்படங்கள்: கிங் காலித்

வெள்ளி, 5 ஜூன், 2015

9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக்  (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள். 

விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.







படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி