ஞாயிறு, 24 மே, 2009

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையதள வசதி : அரசு ஏற்பாடு!

கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இணைய தள வசதி உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு, தனி இணையதள வசதி ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளின் விவரம், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் தரம், தேர்ச்சி விகிதம், தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கிடைக்கும் வகையில் அந்த இணைய தளம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி பெற, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளுக்கு இணைய தள வசதியை அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மறு கூட்டல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை இந்த இணைய தளத்திலேயே பெற்று விண்ணப்பிக்கலாம்.

பொதுத் தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.

முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க கடனுதவி

முன்னாள் படை வீரர்கள் புதியதாக தொழில் மற்றும் வியாபாரம் செய்ய கடனுதவி செய்ய ரெப்போ வங்கி முன் வந்துள்ளது.

இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் புதியதாக தொழில் மற்றும் வியாபாரம் செய்து தங்களது குடும்ப வருமானத்தினைப் பெருக்கி தன்னிறைவு கண்டிட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது ஈடுபட்டு வரும் சுய தொழில் மற்றும் வியாபாரத்தினை அபிவிருத்தி செய்திட முன்னாள் படை வீரர்களுக்கு கடனுதவி அளித்திட ரெப்போ வங்கி முன் வந்துள்ளது.

இவ்வங்கியில் கடனுதவி பெற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர், கடலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரை நேரில் அணுகி விபரம் பெற்று பயனடையுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

போலீஸ் ஜீப் -கார் மோதல்: எஸ்.ஐ. உள்பட 7 பேர் காயம்

சிதம்பரம் அருகே ரோந்து சென்ற போலீஸ் ஜீப்பும், காரும் புதன் கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் எஸ்.ஐ. உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

புவனகிரி காவல் நிலை குற்றப்பிரிவு எஸ்.ஐ. புஷ்பராஜ் தலைமையில் காவலர்கள் கார்த்திகேயன், யோகானந்தம், சிவசெந்தில் ஆகியோர் ஜீப்பில் புதன்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது. பி.முட்லூர் தீர்த்தாம்பாளையம் என்னுமிடத்தில் போலீஸ் ஜீப்பில் ஆக்சில் கட்டாகி கட்டுப்பாட்டை இழந்து சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த கார் மீது மோதியது.

இதில் போலீஸ் ஜீப்பில் இருந்த எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாரும், கார் டிரைவர் ராஜேஷ் (22), காரில் பயணம் செய்த ராஜா (55), ராஜாத்தி (22) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.