வியாழன், 11 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி பாதித்த மீனவர்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்கள்

பரங்கிப்பேட்டை அருகே சுனாமியால் பாதித்த கிள்ளை பகுதி மீனவர்கள் மற்றும் இருளர்கள் 1,088 பேருக்கு கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சுனாமியின்போது பரங்கிப்பேட்டையை அடுத்த கிள்ளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இருளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு மீன் வளத்துறை சார்பில் சுனாமி பாதித்த மக்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்களாக மீன் பதனிடும் ஐஸ் பெட்டி 50 லிட்டர், 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா ஒரு பெட்டி முதற்கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி முடசல் ஓடை சூரியா நகரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

மேற்பார்வையாளர் புண்ணியராஜ் வரவேற்றார்.

மீன்துறை ஆய்வாளர் நாபிராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் முடசல் ஓடை, சூரியா நகர், நடு முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பட்டரையடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் நகர் பகுதிகளை சேர்ந்த இருளர்கள் உள்ளிட்ட 1,088 பேருக்கு ஐஸ் பெட்டிகளை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

புதன், 10 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே கோவிலில் நகைகள் திருட்டு

பரங்கிப்பேட்டை அருகே கோவில் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் கோணேரியம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த காசு மாலை, தாலி, குண்டு, பித்தளை குவளை உள்ளிட்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கோவில் பூசாரி தேவகி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடலூரிலிருந்து வந்த நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோலிலில் புகுந்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செவ்வாய், 9 ஜூன், 2009

கடல் கொந்தளிப்பு எதிரொலி: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

கடல் கொந்தளிப்பு எதிரொலியாக பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தமிழகத்தில் சில இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

சூறாவளிக் காற்றும் பலமாக வீசி வருகிறது.

இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

வழக்கத்தை விட கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது.

கடலூரில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக் காற்று வீசியது.

இதில் வாழைகள் சரிந்து விழுந்து பலத்த சேதமானது.

கடல் அலை சீற்றத்தால் கடற்கரையோரம் உள்ள மணல் திட்டுகள் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியக்குப்பம் கிராமம் வரைகடல் தண்ணீர் சென்றது.

மணல் அரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்தது.

மீன் இனப் பெருக்கத்திற்காக 48 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் தடை முடிந்தும் மீன் பிடிக்க முடியாமல் உள்ளனர்.

கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதால் நேற்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

பரங்கிப்பேட்டை பகுதி கடலில் அலைகள் 10 மீட்டர் உயரத்திற்கு சீறிப்பாய்கிறது.

இதனால் பரங்கிப்பேட்டை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன் பேட்டை, சாமியார் பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், அய்யம்பேட்டை, அன்னப்பன் பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

அன்னங்கோவில் மீன்பிடி ஏலம் விடும் தளம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.