வியாழன், 25 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை: விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை வழங்குமாறு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் 18 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

திருமண உதவி தொகை, கர்ப்பிணி பெண்கள் உதவி தொகை, இயற்கை மற்றும் விபத்தினால் மரணமடைந்தால் உதவி தொகை உட்பட பல திட்டங்கள் கிடைக்க சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை தேவைப்படுகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிழக்கு பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை கிடைக்கவில்லை.

இதனால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை வழங்க வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இறப்புச் செய்தி


காஜியார் சந்தில், கோர்ட்டில் பணிபுரிந்தவரும், கலில் அகமதுவின் தகப்பனாருமான ஹமீது சாஹிப் அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று(25-06-2009) மாலை நல்லடக்கம் மீராப் பள்ளியில்

புதன், 24 ஜூன், 2009

காலி சிலிண்டர்களை ஏற்றி சென்ற மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது

பரங்கிப்பேட்டை அருகே சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற மினிலாரி தலை குப்புற கவிழ்ந்தது.

மயிலாடுதுறையில் இருந்து புதுச்சேரிக்கு 50 ஆக்சிஜன் காலி சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிலாரி நேற்று புறப்பட்டுச் சென்றது.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி அருகே நேற்று காலை 8.30 மணியளவில் மினிலாரி முன்னாள் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது திடீரென எதிர்புறத்தில் பஸ் வந்ததால் டிரைவர் பிரேக் போட்டதால் மினிலாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறி ஓடியதால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.