ஞாயிறு, 22 மே, 2011

பரங்கிப்பேட்டையில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம்: சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தகவல்!


பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  சிதம்பரம் தொகுதியில் பாகுபாடின்றி அனைவருக்கும் அனத்து திட்ட பயன்களும் கிடைக்க பாடுபடுவேன். எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்குவதோடு மக்கள் குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். மின் வெட்டு பிரச்னை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

என்.எல்.சி., யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகா வாட் முதல் 300 மெகாவாட் வரை பெற்று மின் பற்றாக்குறையை முற்றிலும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக முதல்வர் ஜெயலலிதா, என்.எல்.சி., அதிகாரிகள், துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் பேசி தீர்வு காணப்படும். சிதம்பரம் நகரில் செயல்படுத்த முடியாமல் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம், 7 கோடி ரூபாயில் கொண்டு வரப்பட்ட புதிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போன்று பஸ் நிலையம், மீன் மார்க்கெட், அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் என மக்கள் பணிகள் நிறைவேற்றித்தரப்படும்.

பரங்கிப்பேட்டை, குமராட்சி, கிள்ளை பகுதியில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டா பகுதியாக இருந்தும் சிதம்பரம் டெல்டா பகுதிக்கான எந்த சலுகையும் கொடுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. அந்த நிலையை மாற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் தொகுதிக்கு வரும் எந்த திட்டமாக இருந்தாலும், எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளாக இருந்தாலும் கமிஷன், லஞ்சம் எதுவுமின்றி ஒதுக்கப்படும் நிதி முழுவதும் செலவழிக்கப்பட்டு நேர்மையான, வெளிப்படையாக நிர்வாகம் நடத்தப்படும். இவ்வாறு பாலகிருஷ்ணன்  கூறினார்.


சனி, 21 மே, 2011

பரங்கிப்பேட்டையில் பலத்த இடி..!


கடந்த சில நாட்களாகவே, பரங்கிப்பேட்டையில் கடும் வெயிலின் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்., இந்நிலையில் மாலை முதல் நிலவி வந்த மேகமூட்டத்தின் காரணமாக இரவு 7.30 மணியளவில் லேசான தூறலாக தொடங்கி, மிக பலத்த இடியோசையுடன் பலத்த மழையாக இரவு 8.20 வரை பெய்தது. தொடர்ச்சியாக 45 நிமிடத்திற்கும் மேலாக மின்னல் - இடியோசையின் ஆதிக்கம் மிகுந்திருந்த காரணத்தினால் நகரில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்துடனே காணப்பட்டனர். முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின்சாரம் வினியோகம் மீண்டும் இரவு 9 மணிக்கு தொடங்கியது.

பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்களர்களை சந்தித்து நன்றி கூறுவதற்காக புதுக்குப்பம் - சின்னூர் - மாதக்கோயில் தெரு வழியாக பரங்கிப்பேட்டைக்கு வருகை தர திட்டமிட்டிருந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் தனது சுற்றுப்பயணத்தை பலத்த மழை - இடி - மின்னல் காரணமாக மாதக்கோயில் பகுதியிலேயே நிறைவு செய்தார். பலத்த இடியின் காரணமாக பெரும்பாலோர் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை அந்நேரத்தில் உபயோகிக்கவில்லை, இருந்தபோதிலும் நகரிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களின் மின்னணு சாதனங்கள் பழுதுக்குள்ளாகியது.

மீண்டும் நள்ளிரவு சுமார் 2.30 முதல் பெய்யத்தொடங்கிய மழை பலத்த மழையாக உருவெடுத்து அதிகாலை வரை பெய்தது. இந்நேரத்தில் இடியோசை இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. கோடையின் வெப்பத்தை தவிர்க்க இம்மழை பேருதவியாக இருந்தது என்றாலும் மிகக்கடுமையான இடியோசையின் காரணமாக மக்கள் மிரட்சியுடனே இருந்தனர்.

வெள்ளி, 20 மே, 2011

இந்த பதவி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை: அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்துள்ள பேட்டியில், '"நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொடுத்திருப்பதற்கு காலமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்" என்றார்.
 
அவர் மேலும் கூறியதாவது: இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த 10 வருடமாக  பஞ்சாயத்து தலைவராகவும், சட்டமன்ற உறுப்பிளராகவும் பணியாற்றினேன். இப்போது முதல்-அமைச்சர் எனக்கு அதை விட முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதற்கு நான் தகுதி உள்ளவராக செயலாற்றுவேன்.
 
3-வது முறையாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். பின்தங்கிய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
 
படித்த, ஏழை பெண்கள், பட்டதாரி, டிப்ளமோ படித்த பெண்கள் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.சத்துணவு, அங்கன்வாடி ஊட்டச்சத்து துறை பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.  
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப் படவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கவும், பின்னர் காப்பகங்களில் பராமரித்து வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு தேவையானவற்றை செய்து மேம்படுத்தப்படும்.
 
இவ்வாறு செல்வி ராமஜெயம் கூறினார்.