செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஹெலிகாப்டர் வெடித்தது...! பூகம்பம் ஏற்பட்டது...!! பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!!!

இன்று பகல் 12.45 மணியளவில் கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரு பலத்த சத்தம் கேட்டது. இது அருகில் எங்கேயோ பூமி அதிர்வோ என நினைத்து மக்கள் பதறும் வேளையில், கடலூர் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் எல்லா திசையிலும் பரவத் தொடங்கியது. சிலர் பரங்கிப்பேட்டை அருகே ஹெலிகாப்டர் வெடித்து சிதறிவிட்டது என பல தகவல்கள் புரளியாய் பரவத் தொடங்கியதில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

இந்நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி பூகம்பம் எதுவும் நடக்கவில்லை என்றார்.

ஆனாலும் சிதம்பரம் வயலூர் அருகில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

ஊன தினம்!


ரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் - ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த

கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!


காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!

கலவியென்று களித்தது

கற்காலக் காதல்...
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்

கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்

அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே

எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?

காதலர்தினம் எனும்

கண்றாவிப் புறக்கணிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு

இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்...

கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி!

கவிதை ஆக்கம் - சபீர்

மீலாது மாநாடு!

பரங்கிப்பேட்டை: நகர ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி மாநாடு பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ். ஓ. செய்யது ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்த மீலாது மாநாட்டிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ், கே. பாவாசா மரைக்காயர், கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், யூ. ஜமால் முஹமது, யூ. ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எ. லியாகத் அலி மன்பஈ வரவேற்புரை வழங்கினார். எம். ஷேக் ஆதம் மழாஹிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது. இறுதியமர்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் இ. ஷாகுல் ஹமீத் ஜமாலி சிறப்புரையாற்றினார்.

மீராப்பள்ளி இமாம் அஹ்மத் கபீர் காஷிபி, புதுப்பள்ளி இமாம் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி, இஸ்மாயில் நாஜி காஸ்மி, தவ்லத்துன்னிசா கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி, மஹ்முதிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் ரஷாதி, காதிரியா பள்ளி இமாம் நூருல்லாஹ் பையாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் கட்டுரைப் போட்டி மற்றும் வினா-விடைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நூர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர்.

இறுதியில் மாநாட்டு தீர்மானத்தை கவுஸ் பள்ளி இமாம் நிஜாமுத்தீன் காஷிபி வாசித்தார். மீலாது கமிட்டி செயலாளர் ஓ. முஹம்மது கவுஸ் நன்றியுரை வழங்கினார்.