செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கத்தாரில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிறுவன் ஃபஹீம் மரணம்

நமது தளத்தின் ஆசிரியர் எம்.ஐ.சிராஜூத்தீனுடைய மகன், ஐந்து வயதான ஃபஹீம் ஒரு வாரத்திற்கு முன்பு கத்தாரில் திறந்திருந்த சாக்கடை ஒன்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11மணியளவில் மரணம் அடைந்தார்  என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

எங்களில் ஒருவரான சகோ. சிராஜ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு   mypno.com சார்பில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஃபாஹிமுடைய மறுமை நல்வாழ்வுக்கும், சிராஜ் குடும்பத்தாரின் மனவலிமைக்கும் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஈத் மிலன் விழா! மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!!

ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாயத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் மனிதநேய விழாவும், மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும் மீராப்பள்ளித் தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றன.
 
நிகழ்ச்சியினை M.H. கபீர் அஹமது மதனி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர் K.V.S  ஹபீப் முஹம்மது அவர்களும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் M. அப்துஸ் ஸமது மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K. பால கிருஷ்ணன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
மாற்று மதத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல் பரிசும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன.  வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது .
 
விழாவினை  நிகழ்ச்சி அமைப்பாளர் L. ஹமீது மரைக்காயர்  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.








வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். அமைக்குமா..?!



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளில் ஈடுபடாத ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் ஏ.டி.எம் நிறுவியுள்ளனர். இதில் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். சமீப காலமாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ஏ.டி.எம் சேவை இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வியப்பினையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இது குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பதே பதிலாக கிடைத்தது. தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாமல் கருத்து தெரிவித்த  வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,"வங்கியுடன் இணைந்தவாறு (ON SITE) இயங்கும் வகையில் செயல்படக்கூடிய ஏ.டி.எம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை அமைப்பதற்கான இடப்பற்றாக்குறையின் காரணமாகவே இப்பணியில் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.  

ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வங்கி அலுவலகத்தோடு இணையாமல்  தனியாக (OFF SITE) ஏ.டி.எம்  அமைத்து முன்னோடியாக வழிகாட்டியுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி உடனடியாக ஏ.டி.எம் அமைக்க வேண்டும் என்பதே பரங்கிப்பேட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு அதற்கேற்ப வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்களும்  இந்தியன் வங்கி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.


MYPNO.COM  செய்திக்காக  ஹம்துன் அப்பாஸ்
படங்கள்: ஹஸன் அலி