புதன், 14 ஜனவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா


கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முதன் முறையாக குவைத் வந்தபோது ‘இளம் ஊடகப் போராளி’என்ற விருதையும், 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழாவில் ‘ஆவணப்பட ஆளுநர்' என்ற விருதையும் வழங்கி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சிறப்பித்துள்ளது.


அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.


இந்த ஆவணப்படத்தை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) வெளியிடுவதற்கான காரணங்களையும், அவசியத்தையும், காயிதே மில்லத் அவர்களின் வரலாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராவலை நிறைவேற்றுவதற்காக சங்கம் பாடுபடுவதையும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பட வெளியீட்டிற்கு முன், சிறப்புரையாற்றிய ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய உரையில், இப்படம் வெளியாக தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்வை விளக்கும் படங்கள் உள்ளபோது காயிதே மில்லத்துக்கென்று ஆவணங்கள் ஏதும் இல்லாததே தாம் இப்படம் எடுக்க உந்து சக்தியாக இருந்தது என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் காவிக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததற்கு பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் மாத்திரமல்ல, காயிதே மில்லத் போன்றோர்கள் பிற சமய, அரசியல் தலைவர்களோடு நெருங்கி பழகியதோடு அவர்கள் மூலம் இஸ்லாத்தை பேச வைத்ததும் காரணம் என்றார். அண்ணா, பெரியார், ராஜாஜி, மபொசி என எல்லோருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்ட காயிதே மில்லத்தின் வரலாறு இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்று கூறினார்.


குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், சமுதாய ஆர்வலர்கள் முன்னிலை வகிக்க கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட குறுந்தகடை ஆளூர் ஷா நவாஸ் வெளியிட, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ பெற்று கொண்டார். பின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.


நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்ற, இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.


குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சகோதர சமுதாய பெருமக்களும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இந்த குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

திங்கள், 12 ஜனவரி, 2015

Follow-up: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)


சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரி வழியாக செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பிலும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று காலை சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புவனகிரி பாலம் முகப்பில் முகாமிட்டு, அந்த வழியாக வந்த சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் 'வழி புவனகிரி' எனும் ஸ்டிக்கர் ஒட்டினார்.

இதுபோன்று பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் 'வழி பரங்கிப்பேட்டை' என்று பெயர்ப்பலகை வைப்பதுமில்லை.  பயணிகள் விசாரித்தாலும் இது நேர்வழி என்று சொல்லி ஏமாற்றிக ஏற்றிக் கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் 'வழி பரங்கிப்பேட்டை' என்று ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி எடுப்பாரா?
இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம். பார்க்க: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரிடமிருந்து வந்த பதில்....


வியாழன், 18 டிசம்பர், 2014

மனித நேய விருது பெறுகிறார் MYPNO ஆசிரியர் ஃபக்ருத்தீன்

இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India - DYFI)  எதிர்வரும் டிஸம்பர் 30ந் தேதி பு. முட்லூரில் "போதைக்கு எதிராக ஊரைக்கூட்டுவோம்" என்ற கருப்பொருளில் கலை இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
 
இந் நிகழ்ச்சியில், "டாஸ்மாக் கடைகளால் அதிகம் சீரழிவது தனி நபர்களே! சமுதாயமே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமுதாயத்தில் சிறப்பாக பணியாற்றும் நபர்களுக்கு "மனித நேயர்" விருதுகளும் வழங்கப்படுகின்றன.
 

இவ்விருது பெறும் பட்டியில் நமது MYPNOன் ஆசிரியர் எம்.ஜி. ஃபக்ருத்தீன் அவர்களும் இடம் பெற்றுள்ளார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு கே. பாலகிருஷ்ணன் அவர்கள் விருதுகளை வழங்க இருக்கின்றார்.