செவ்வாய், 26 ஜூலை, 2016

சாதனையாளர் விருது பெற்றார் எம்.எஸ். முஹம்மது யூனுஸ்!

சிறந்த மக்கள் சேவைக்காக பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ். இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை (21.07.2016) தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரெட்டி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ரோசய்யா, பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுசுக்கு, சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். ஏற்கனவே, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது ஆகியவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பரங்கிப்பேட்டையின் தற்போதைய பேரூராட்சி மன்றத்திற்கு 2-வது முறையாக தலைவராக இருக்கும் இவர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் 4 முறைகளாக தொடர்ந்து 12 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். அது மட்டுமின்றி கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவராகவும், பரங்கிப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருக்கிறார். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கடலூர் மாவட்ட பெண்கள் நலச் சங்கத்தின் கௌரவ தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜூன், 2016

வீரப்போர்!

பரங்கிப்பேட்டை வெள்ளாற்ற கரையிலும் ஊரை ஒட்டியும் வீர மகன் ஹைதரின் 18,000 வீரர்கள் சுற்றிலும் மணற்குன்றுகளை அமைத்து இரண்டு புறமும் துப்பாக்கி படையுடனும், நடுவில் குதிரை படையுடனும் முகாமிட்டு இருந்தனர்.
 
அன்று கிழக்கே உதித்த சூரியனும் கடலும் நடக்க போவதையெண்ணி சிவந்தும் அலையில்லாமலும் இருந்தன. பரங்கிப்பேட்டையின் ஆறும் கடலும் சேர்ந்த முகதுவாரத்தில் ஆங்கிலேயரின் 8,000 வீரர்கள் மற்றும் துருப்புக்களுடன் முகாமிட்டு இருந்தனர். கடலில் அவர்களுக்கு துனையாக போர்க்கப்பல் ஒன்றும் நின்று இருந்தது.
 
1 ஐூலை 1781 அன்று அதிகாலை 9 மணிக்கு ஹைதரின் துப்பாக்கி படையினர் முதல் துப்பாக்கி பிரயோகம் தொடங்கினர் உக்கிரமாக போர் தொடங்கியது.
 
ஹைதரின் படை கிர்ரம் சாயப் தலைமையில் போரிட்டது. கரையிலிருந்தும் கப்பலில்லிருந்தும் ஆங்கிலேயரின் பீரங்கி தாக்குதல் தொடங்கினர். நயவஞ்சக ஆங்கிலேயரின் பதுங்கு குழிகளில் இருந்து கொடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹைதரின் குதிரை படை சிதறியது. ஒரே சமயத்தில் துப்பாக்கி படையும் பிரங்கி தாக்குதலில் கிர்ரம் சாயப் கொல்லப்பட்டார். குதிரை படை சிதறியதும் கலாட்படை மிக மோசமாக அடிவாங்கி பின் வாங்கி ஹைதரின் படை கர்நாடகம் சென்றது.
 
இந்த போரை Cuddalore Dc Bussy page no 155, The battle of Portonovo was one of the most critical that was ever bought in India என்று விவரிக்கிறது.
 
ஹைதர் படை பரங்கிப்பேட்டையில் வெற்றி பெற்று இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஹைதர் அலி தன் அண்ணனுடன் சதாரண சிப்பாயாக மைசூர் படையில் சேர்ந்து படிப்படியாக தன் வீரத்தால் குதிரை படை தளபதியாக பதவி உயர்வுப்பெற்று தேவனஹல்லி போரில் சிறப்பாக போரிட்டதுக்கு பரிசாக திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொருப்பை பெற்றார்.
 
இயல்பிலேயே பெரும் வீரனான ஹைதர் பிரெஞ்சு ஆங்கிலேயர்களை போல் பிரங்கிக்கு தனிப்படை நிறுவி பயிற்ச்சி அளித்தார். வெடிமருந்தை இரும்பு குழாயில் தினித்து அதை ஏவும் நுட்பத்தை அறிமுகப்படு்த்தினார். (missile இதை ஹைதரின் மகன் திப்புசுல்தான் மேலும் மேம்படுத்தி ஆங்கிலேயரை நடுங்க செய்தார் அதில் வெடிக்காததை கைப்பற்றி முயற்சித்ததுதான் தான் இன்றைய நவீன ராக்கெட்).
 
மைசூர் அரசு பலம்குன்றி தன் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாத தருணத்தில் தலையிட்டு தன் பணத்தை வழங்கி மைசுர் அரசை அகற்றி தான் பொருப்பேற்று கொண்டார். அரசு பொருப்பேற்ற பிறகு ஏற்பட்ட முதலாம் மைசுர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்தார். பிரன்ச் அதிகாரிகளை கொண்டு பயிற்சி கொடுத்து ஆங்கிலேயருக்கு இனையாக ராணுவம் வைத்து இருந்தார். அப்போது அவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆங்கிலேயர்கள் அதை கடைபிடிக்காத காரணத்தால் இரண்டாவது மைசுர் தொடங்கி நான்கு வருடம் நடந்தது.
 
வெற்றி செய்திகள் கிடைத்து கொண்டு இருந்தபோதே நோயுற்று இருந்த ஹைதர் தனது 60 வது வயதில் டிசம்பர் 6ந்தேதி 1782 மைய்யத் ஆனார். அவர் இறந்தாலும் என்றும் மறவாத அவர் புகழ் பரங்கிப்பேட்டையர் நெஞ்சில் வாழும்நோம்பு மாதமாம் ரமலான் மாதத்தில் அவரது புகழை நினைவு கூறுவோம்.

கட்டுரை: தி.வேல்முருகன்
ஆதாரம்: விக்கி & Cuddalore Dc Bussy 
படம்:  போர்நி னைவு சின்னம் பின்னால் தெரிவது கொடி மரம் மற்றும் போர் நடந்த இடம்
 
ஊரின் சிறப்புகள் உங்கள் ஆதரவு இருந்தால் தொடரும்.....

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் புதிய கல்விக்கூட அடிக்கல் நாட்டு விழா

பரங்கிப்பேட்டை தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில், தில்லி ஸாஹிப் தர்கா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள முஸ்லிம் குழந்தைகள் மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி கற்பதற்கான மதரஸா மற்றும் பள்ளி கட்டிடம் ரூ 5.00 இலட்சம் செலவில் கட்டி தருவது என அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் அப்துர் ரஹ்மான் முடிவு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் கடந்து செவ்வாய்க்கிழமை (05.04.16) காலை 08.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், அறக்கட்டளை தலைவருமான டாக்டர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க, பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சையத் ஆரிஃப், பொருளாளர் அஷ்ரஃப் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தில்லி ஸாஹிப் தர்கா குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.