சனி, 26 நவம்பர், 2022

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தல் 2022 - ஒரு பார்வை..!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையிலான நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக , ஐக்கிய ஜமாஅத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற உள்ளாட்சி நிதித் தணிக்கையாளருமான I.முஹம்மது இல்யாஸ் தலைமையில், ஓய்வு பெற்ற தாசில்தார் O.முஹம்மது கவுஸ், NLC India-வில் பணியாற்றி ஓய்வு பெற்ற A.அஷ்ரப் அலி, M. மெய்தீன் அப்துல் காதர் (பசுமை ஹாஜி) , M.கஃப்பார் அலி கான் ஆகியோர் உள்ளிட்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டது.

தேர்தல் அலுவலர்கள் 

27-11-2022-ல் நடைபெற இருக்கும் தேர்தலில் கேப்டன் M.ஹமீது அப்துல் காதர், B.ஹமீது கவுஸ் ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இதில் கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஏற்கனவே ஜமாஅத் தலைவராகவும், B.ஹமீது கவுஸ் பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பொறுப்புகள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வேட்பாளர்கள்: B.ஹமீது கவுஸ், கேப்டன் M.ஹமீது அப்துல் காதர்

வேட்புமனுத் தாக்கல் 

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் கப்பல் சின்னத்திலும், B.ஹமீது கவுஸ் ஏரோப்ளேன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் இஸ்லாமியப் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு கோரினர்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மிகுந்து இருக்கும் இக்காலத்தில், இந்த தேர்தல் நடைபெறுவதால், தேர்தலுக்கான பரப்புரையிலும், இரு தரப்பு ஆதரவாளர்களின் வாத – பிரதிவாதங்களிலும் வாட்ஸப் பிரதான ஊடகமாக இருந்து வருகிறது.

NRIக்களின் பல வருடக் கோரிக்கையான NRIக்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பாகவும் NRI க்கள் தரப்பில் இந்த முறையும் முறையிடப்பட்டது எனினும் இந்த முறையும் அது சாத்தியப்படாமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

NRIக்கள் தேர்தல் அலுவலர்கள் சந்திப்பு 

தேர்தலைத் தவிர்த்து தேர்வு மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கோரி சமரசக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களிடத்தில் தேர்தலைத் தவிர்க்கக் கோரி நேரில் சந்திப்பு நடத்தி வலியுறுத்தப்பட்டது. எனினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. 

சமரசக்குழு 

சமரசக்குழுவில் , M.I. முஹம்மது முஹைய்யதீன் (தம்பிராஜா),  M. ஹஸன் பஸரி, N. முஹம்மது தாஹா G.K. தௌலத் அலி, M.K. ஜெய்னுலாபுதீன் மாலிமார் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த M.S.காஜா ஹபீபுல்லா,  பின்னர் போட்டியிலிருந்து விலகினார்.

 இனி வரக்கூடிய காலங்களில் NRI க்களுக்கு ஓட்டுரிமையும், தேர்வு கமிட்டி மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கும் இரு வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இரு தரப்பு தேர்தல் வாக்குறுதிகள் 

நாளை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவிற்கு பின்னர் முடிவுகள் நாளை இரவே அறிவிக்கப்பட இருக்கிறது.

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் தரப்பில், மருத்துவர் S. நூர் முஹம்மது துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், மேலும் கேப்டன் தரப்பு ஆதரவாளர்களாக, ஷாஜஹான், ஹாமீம், கவுஸ் மரைக்காயர், காஜா மெய்தீன் (தம்பி), வழக்கறிஞர் அன்சாரி, முஹம்மது அப்துல் காதர் (சேட்டு), வழக்கறிஞர் முஹம்மது ஹனிபா, ஹபீபுல்லா உள்ளிட்டோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் தரப்பு

B.ஹமீது கவுஸ் தரப்பில் முதன்மை ஆலோசகராக தற்போதைய ஜமாஅத் தலைவரும் – பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான M.S. முஹம்மது யூனுஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார், மேலும் B.ஹமீது கவுஸ் ஆதரவாளர்களாக நஜீர் உபைதுல்லாஹ், ஜெய்னுல்லாபுதீன், முனவர் உசேன், முத்துராஜா, ஹஸன் அலி, ஹபீப் ரஹ்மான் ஜாபர் ஷரீப் , சாலிஹ் மரைக்காயர் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

B.ஹமீது கவுஸ் தரப்பு 

இந்தத் தேர்தலில் சமூக வலைத்தளம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுவதால் இரு தரப்பிலும் சிலர் சமூக வலைத்தளங்களில் செய்யும் பதிவுகள் முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாகவும், ஒற்றுமையைக் குலைப்பது போல அமைவதாகவும் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அமைய இருக்கும்  நிர்வாகம் அடுத்த முறை தேர்வுக்குழு (சூரா கமிட்டி) மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யவேண்டும், அதற்கேற்றார் போல் அமைப்புவிதிகளில் (பைலா-வில்) முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், பைத்துல்மால் முறையாக சீர்படுத்தப்பட வேண்டும் போன்றவையே இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம்  மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கு இதற்கு முன் 2009 மற்றும் 2016- ஆண்டு என இருமுறை தேர்தல் நடந்தேறிய நிலையில் இந்த தேர்தல் மூன்றாவது தேர்தல் ஆகும்.

ஞாயிறு, 31 ஜூலை, 2016

பரங்கிப்பேட்டைக்கும் சேலத்துக்கும் என்ன தொடர்பு?

சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்கு பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்கு புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது 'ஹெமடைட்'. அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது..
 
கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம் அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ. இந்த மலை முழுவதுமே, பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன.
 
புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாக சரிந்துள்ளன, ஒரு தோணியைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும் காணப்படுகிறது (கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).
 
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும்  பெயரும் உண்டு. போர்த்துகீசிய  மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH எனும் வெள்ளையரின் பெரும் முயற்சியால் 1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின் 1877ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS எனும் பெயரில் இரும்பு ஆலை நடத்தப்பட்டது. அந்த ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட்டது. மலையை சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாக தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு  செல்வது.  
 
ஆச்சர்யப்படாதீர்கள். காவேரி - கொள்ளிடம் - வெள்ளாறு வழியே பரிசல்களில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி”யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது (கே.ஆர். சாகர், கபினி அணை, மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா). ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முன்னூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.
 
சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப்பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப்பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “MADE IN PORTONOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில், சேலம் இரும்புதாதுவிலிருந்து, பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR மற்றும் STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டது என்று S.B. JOSHI எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (Page 97) தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
 
Inline image 1
சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையை சுற்றியு கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.
 
படம் 1: POTONOVO IRON WORKS இரும்பு ஆலை, பரங்கிப்பேட்டை
படம் 2: சேலம் - பரங்கிப்பேட்டை வழிப்பாதை
படம் 3: கஞ்சமலையின் செந்நிற தோற்றம் 
 
-சிங்க நெஞ்சன் - "மின்தமிழ்" கூகுள் குழுமம் - https://groups.google.com/forum/#!msg/MinTamil/M37WqdJ2pYs/Hfxu9tNsAQAJ

செவ்வாய், 26 ஜூலை, 2016

சாதனையாளர் விருது பெற்றார் எம்.எஸ். முஹம்மது யூனுஸ்!

சிறந்த மக்கள் சேவைக்காக பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ். இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை (21.07.2016) தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரெட்டி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ரோசய்யா, பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுசுக்கு, சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். ஏற்கனவே, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது ஆகியவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பரங்கிப்பேட்டையின் தற்போதைய பேரூராட்சி மன்றத்திற்கு 2-வது முறையாக தலைவராக இருக்கும் இவர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் 4 முறைகளாக தொடர்ந்து 12 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். அது மட்டுமின்றி கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவராகவும், பரங்கிப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருக்கிறார். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கடலூர் மாவட்ட பெண்கள் நலச் சங்கத்தின் கௌரவ தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.