திங்கள், 14 ஜூலை, 2008

குடிநீர்: பரங்கிப்பேட்டை அருகே மக்கள் அவதி




குடிநீர் தட்டுப்பாடு! பரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி கிராமத்தில் பணிமுடிக்கப்பட்டும் திறக்காததால் மக்கள் அவதி



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்காததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்டது மஞ்சக்குழி கிராமம். இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இக் கிராமத்திலிருந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்படும் குடிநீர் கீழே கொட்டியது. அத்துடன் மேல்நிலைத்தொட்டி எப்போது விழுமோ என்கிற அச்சம் கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. அதன் காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் குடிநீர் ஏற்றப்படாமல் நேரடியாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் போர்வெல் மற்றும் பைப்லைன் பழுது அடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வந்தனர். வசதி படைத்தவர்கள் புதியதாக கைப்பம்பு போட்டு அதன் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஏழை, எளிய மக்கள் வேறுவழியின்றி குடிநீருக்காக பல தொலைவிலுள்ள இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மஞ்சக்குழி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் செய்தனர்.


இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அத்துடன் பழுதான பைப் லைன் சரி செய்து கொடுக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிக்கப் பட்டு பல மாதங்களாகியும் இன்னும் குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து அல்லல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கலெக்டர் உடனடியாக புதிய குடிநீர் தொட்டியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர். (தினமலர்)
தகவல்: அபு ஃபாஹிம்...