வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

அசர் மல்லி - நறுமணங்களின் முகவரி

 நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை அல்லது இரவுக்குள் மடிந்து விடும், வதங்கி விடும். 

ஆனால் பொழுது சாயும் நேரத்தில் பூக்கும் பூ ஒன்று உள்ளது தெரியுமா?

ஊரே உறங்கும் நேரத்தில் இரவு வாட்ச் மேனாக,ஆந்தை விழித்திருப்பது போல், அந்தி சாய்ந்து அனைத்தும் மலர் வகைகளும் உறங்கும் நேரத்தில் அடர்த்தியான ரோஸ் ,வெள்ளை மற்றும் மஞ்சள் என்று அழகிய மூன்று வித வண்ணங்களிலும், அந்த மூன்று வித வண்ணங்களும் கலந்து ஒட்டுச் சாதி போன்று ஒன்றும் என நான்கு விதங்களில் பூக்கும்.

இரவெல்லாம் கொட்ட, கொட்ட விழித்திருந்து காலையில் உறங்கி போகும்.

தமிழில் அந்திமல்லி அல்லது அந்திமந்தாரை என்று அழைப்பார்கள். மலையாளத்தில் 'அசர் முல்ல' (முல்லை தான் அது அந்த மொழியில் 'லை' என்ற பதத்தை அழுத்தி  சொல்ல மாட்டார்கள்) நம்ம ஊரில் அசருக்கு பிறகு பூப்பதால் அசர் மல்லி என்று அழைக்கிறார்கள்?! என்று நினைக்கிறேன்.


சிறு வயது முதல் அப்படி அழைத்தே பழகி விட்டது அதனால் வேறு காரணங்கள் தெரியவில்லை. அதன் தாவரவியல் பெயர் Mirabilis Jalapa Linn என்கிற வகையை சார்ந்தது.

அன்று எனது சிறுவயதில் நம் வீட்டுக் கொல்லையிலும், நமது அண்டை வீட்டிலும் மிகைத்துப் பூத்து இருந்தது. 

டிசம்பர் மாதம் பூக்கும் டிசம்பர் பூக்கள் போன்று இந்த பூ'வுக்கென்று தனித்துவமான சீசன் இருந்ததாக நினைவில்லை. வருடம் முழுவதும் பூத்ததாக தான் நினைவு.

இதனிடையே சிறு வயதில் டிசம்பர் மாத பூக்கள் தோட்டம் அமைத்து விற்பனை செய்யும் ராத்தாக்களுக்கு உறுதுனையாக இருந்து நாமும் உதவி செய்தது ஒரு அழகான நினைவு.

அந்த தோட்டத்தினிடையே அசர் மல்லி பூக்களையும், கனகாம்பரம், முள்ளு உள்ள கேந்தி பூ(அதன் விதையை எச்சில் பட்டு வெடிப்போம்) செடிகளையும் சேர்த்து வளர்த்தோம்.

அன்று விடியற்காலையே எழுந்து வாசலில் வந்து விற்கும் புட்டுக்காரம்மாவிடம் சர்க்கரை, சீனி அரிசிப்புட்டு சர்க்கரை ஆப்பம், உ(ரு)ண்டை என வாங்கி விட்டு, பால் பாக்கெட்கள் இல்லா காலமான அன்று பசும்பால் தேநீருடன் புட்டுக்களையும் சேர்ந்து குழைத்து அடித்து விட்டு, குர்ஆன் ஓத  பள்ளிக்கு போகும் முன்பு பனி படர்ந்த பூக்களை பறிக்க செல்வோம்.

அன்று டிசம்பர் பூக்களுக்கு என்று பெரிய மார்கெட் இருந்தது. இன்று வாட்ஸ் அப்பில் சேலை வியாபாரம் செய்யும் பெண்கள் போல ஒவ்வொரு வீட்டிலும் போட்டிப் போட்டுக்கொண்டு டிசம்பர் பூ செடிகள் வளர்த்து விற்பனை செய்தார்கள்.

இதை கேள்விப்பட்டு சகோதர மதத்தார்களும், வாங்கி விட்டு செல்வார்கள். (அன்றே சுயசார்பு பொருளாதாரத்தில் பெண்கள் வருமானம் ஈட்டினார்கள். அதன் ஊடாக வரும் பணத்தில் தனக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் வாங்கியும், செட்டித்தெரு பாயம்மாவிடம்  'தணக்கு' வாங்கி தாவணியில்  வளைத்துப் போட்டுக் கொண்டும், ராணி வார இதழுக்கும், நர்கிஸ் மாத இதழுக்கும் சப்ஸ்கிரைப் செய்துக் கொண்டார்கள்.)

மணம் வீசும் சிறு அரும்பு குண்டுமல்லி, செண்டு மல்லி பூக்களை விட எந்த ஒரு மணமும் இல்லாத இளம் ரோஸ் வைலட் ஊதா மற்றும் ராமம் (வெள்ளை ஊதா) வண்ணங்களை மட்டும் கொண்ட பூக்கள், ரெட்டைப்படை எண்ணிக்கை கணக்கில் விற்பனை ஆனது. ஐம்பது என்கிற  எண்ணிக்கையிலும், நூறு என்கிற எண்ணிக்கையிலும் 

குறிப்பிட்ட பைசா வைத்து விற்பனை ஆனது.

வருடத்தின் இறுதியிலும் ஆரம்பித்து, அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் முடியும் சீசன் பூக்கள் என்பதால் பள்ளிக்கூடம் படிக்கும் பிள்ளைகள் விரும்பும் பூக்கள்களாக டிசம்பர் பூக்கள் இருந்தது.

"புதிதாக பறித்த பூக்களின் காம்பில் தேன் குடிப்பதும், அதே பூக்கள் தலையில் வைத்து காய்ந்தால் பிய்த்து ஊதி வெடிப்பதும் அன்றைய பெண் பிள்ளைகளின் பொழுதுபோக்கு."

அதே போல்

மாலை மஹ்ரிப் நேரத்தில் ஒரு நல்ல தேநீருடன், கொசுக்கடிகளின் இடையே அசர் மல்லி பூவை பறிக்க கொல்லைக்கு செல்வோம். இதன் நறுமணம் மெலிதாக வீசும் ஆனால் பூக்களை பார்க்க அத்தனை கவர்ச்சியாக இருக்கும். நிறைய வீட்டில் அடர்ந்த ரோஸ் வண்ணமே கூடுதலாக இருக்கும். மஞ்சள், வெள்ளை என்பது மிகவும் அரிதாக தான் இருக்கும். எந்த வண்ணம் எவரிடம் இல்லையோ,அந்த விதைகளை பரஸ்பரம் பரிமாறி கொள்வோம்.

அதன் விதை கருப்பு மிளகு, பப்பாளி விதையை ஒத்து இருக்கும் ஆனாலும் அதை விட ஒரு பங்கு பெரிதாக இருக்கும்.

அன்றைய திருமண வீட்டின் மாலை நேரத்து அழைப்பான மருவுண்டி (மருதாணி), மஞ்சளுக்கு அசர் மல்லி பூக்கள் சிறிய பிள்ளைகளின் தலையில் அழகாக ஜொலிக்கும். 

நூல் கொண்டு மல்லிகை பூவின் நடுவில் ஊடுருவி கட்டினாலும், தனியாக கட்டினாலும் அந்த பூவின் அழகு தனித்துவமாக தெரியும்.

அந்த செடியின் வேரின் அடியில் கிழங்கு விட்டு  இருக்கும்.அந்த கிழங்கை பார்க்க ஆவலில் ஆழமாக தோண்டியது உண்டு. கிழங்கின் கீழே ஆணி வேர் நீண்டு இருக்கும் அதனால் அதை பிடுங்க அவ்வளவு கஷ்டமாக இருக்கும் 'ஆணியை புடுங்க வேண்டாம்' என்று சிலசமயம் தோன்ற வைக்கும். ஒருவழியாக 'சக்சஸ்' என்று  பிடுங்கினாலும், அதை சுட்டு அவித்து திண்ண வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். செரிமான கோளாறு வரும் என்று பயம் காட்டுவார்கள்.

தற்போது அதை தின்பதால் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை  நன்மை பயக்கும் சக்தி உண்டு என்று மருத்துவ குறிப்பு கூறினாலும், நாம் சிறிது கூட அந்த கிழங்கை அன்று ருசி(பார்)த்ததில்லை. 

அசர் மல்லி செடி ஒன்று வளர்த்தால், வாழையடி வாழையாக அதன் பூக்களுக்கு பிறகு விழும் விதை அருகருகில் செடிகளை வளர வைக்கும். ஆனால் தற்போது மாடி வீடுகள், வரிசை வீடுகள் மற்றும் அபார்ட்மென்ட்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் அசர் மல்லி செடிகளை காண்பது மிகவும் அரிதாகி போய்விட்டது.

சில இடங்களில் மட்டும், ஆங்காங்கு  கண்ணில் படுவது சற்று ஆறுதலாக உள்ளது.


-

ஊர் நேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக