கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூன், 2011

சிறந்த பள்ளிகளில் பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகைக்கு அணுகலாம்

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்,தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வி. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும்.

தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

புதன், 12 ஜனவரி, 2011

LKG படிப்புக்கு என்ட்ரன்ஸா? - கல்வித்துறை 'தடா' போட்டது


எல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது. 


இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,

ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். 



பாலக மாணவர்களுக்கு  நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவவோ, . அடிக்கவோ கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளோம்.   
என்று தெரிவித்துள்ளார். 


6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி குறிக்கத்த்க்கது

ஞாயிறு, 7 ஜூன், 2009

கலை, அறிவியல் கல்லூரிகளில் வித்தியாசமான படிப்புகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., வரலாறு, பி.எஸ்சி., கணிதம் உள்ளிட்ட பலரது கவனத்தைக் கவர்ந்த பட்டப்படிப்புகள் மட்டுமின்றி, மாணவர்களின் தற்போதைய தேவைக்கு ஏற்ப பல புதிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்றவுடன் அனைவரது ஞாபகத்திற்கும் வருவது பி.காம்., பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகள்தான்.

பி.காமில் பொது, விளம்பரம், விற்பனை மேலாண்மை, வங்கி மேலாண்மை, கார்ப்பரேட் செகரெட்டரிஷிப் என பல பிரிவுகள் உள்ளன.

பி.ஏ., படிப்பில் ஆங்கில மொழித் தொடர்புத் திறன், வர்த்தக பொருளாதாரம், பல மொழிக் கல்விப் படிப்புகளும் உள்ளன.

பி.எஸ்சி.,யில் நவீன விலங்கியல், தாவர உயிரியல், மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட பல பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பல கல்லூரிகளில் புதிய வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அவற்றில் சில:

  • காது கேளாதோருக்கான பி.சி.ஏ., மற்றும் பி.காம்., படிப்பு:

இதற்கு முன், காது கேளாதவர்களுக்கு பிளஸ் 2 வரை மட்டுமே படிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

2007-08ம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில், காது கேளாதோருக்கென தனி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்ற காது கேளாதவர்கள், இப்படிப்பில் சேரலாம்.

இந்த இரு படிப்புகளிலும் தலா 15 இடங்கள் உள்ளன.

  • பி.ஏ., சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேலாண்மை:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் டிராவல் ஏஜென்சிகள், டூர் ஆபரேட்டர் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம்.

அரசு சுற்றுலாத் துறையிலும் பணிபுரிய முடியும்.

இதில் மேற்படிப்புகளும் உள்ளன.

  • பி.எஸ்சி., நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்டு டயடிக்ஸ்:

பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்த மாணவர்கள் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பணிபுரியலாம்.

நியூட்ரிஷன் சிறப்பு நிபுணராகவும் பணியாற்றலாம்.

  • பி.எஸ்சி., ஹோட்டல் அண்டு கேட்டரிங் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்களுக்கு நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

கப்பல், விமானம், ராணுவம், ஹோட்டல் என பல துறைகளில், இப்படிப்பை முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

  • பி.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் பி.ஐ.எஸ்.எம்., (பேச்சுலர் ஆப் இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்):

சாப்ட்வேர் பொறியியல் படிப்பிற்கு இணையாக கலை, அறிவியல் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியலாம்.

  • பி.எஸ்சி., இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் அறிவியல் மற்றும் கணிதம் அல்லது அக்கவுன்ட்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன.

எனவே, இப்படிப்பை முடித்தவர்கள் இரு துறைகளிலும் பணிபுரிய முடியும்.

  • பி.எஸ்சி., இன்டீரியர் டிசைன் அண்டு டெகரேஷன்:

பிளஸ் 2 தேர்ச்சியுடன், படம் வரையத் தெரிந்தவர்கள் மற்றும் கற்பனை வளம் மிக்கவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இதை முடிக்கும் மாணவர்கள், இன்டீரியர் டிசைனராக பணிபுரிய முடியும்.

மேலும், ஜவுளித் துறையிலும் டிசைன் வடிவமைப்பாளராக பணியாற்றலாம்.

  • பி.ஏ., லேபர் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியலாம்.

மேலும் அரசாங்கத்தில் பணியாளர் துறையிலும் பணிபுரிய முடியும்.

திங்கள், 1 ஜூன், 2009

விமானம் ஓட்ட பயிற்சி!

விமானம் ஓட்டும் பயிற்சி பால்கன் விமானப் பள்ளியில் அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால்கன் பள்ளி பதிவு செய்யப்பட்ட பயிற்சிப் பள்ளி.

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் உள்ளன.

இந்தப் பள்ளியில் விமானத்தில் இருப்பது போன்ற உணர்வுள்ள (சிமுலேட்டர்) வசதியுடன் கூடிய வகுப்பு அறை, பயிற்சி உபகரணங்கள் ஆகியவை இருக்கின்றன.

தவிர, விடியோ நூலக வசதி, கம்ப்யூட்டர் உதவியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி போன்றவையும் உண்டு.

விமானப் பயிற்சிக்குத் தேவையான தொழில்திறன், தரம், பாதுகாப்பு அவசியம். அத்தகைய வசதியை பால்கன் பள்ளியில் உண்டு.

மாணவர்களுக்கு தரைவழி பயிற்சி, தனியார், வணிக விமானம் ஓட்டுநர் உரிமம், இன்ஸ்ட்ருமென்ட் ரேடிங், மல்டி இன்ஜின் ரேடிங், சான்றளிக்கப்பட்ட விமான பயிற்சியாளர் ஆகியவை பற்றி பயிற்சியில் சொல்லித்தரப்படுகிறது.

இதில் விமானம் ஓட்டும் பயிற்சி முதல் வேலைக்கான நேர்காணல் வரை எல்லாவற்றுக்கும் சிறப்பாக வழிகாட்டப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: 044-43534312, 43534484/85/86.

ஞாயிறு, 31 மே, 2009

+1 & +2 வகுப்பில் சேரப்போகிறீர்களா? இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனித நேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித நேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.

அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 28 மே, 2009

கல்வியா? செல்வமா?

மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி.

எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும் பொருள்செல்வம் இல்லாமல் முடியாது என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.



செவ்வாய், 26 மே, 2009

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடலூர் மாவட்டத்தில் 71 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 711 பேர் எழுதினார்கள்.

22 ஆயிரத்து 758 பேர் தேர்வு பெற்றனர்.

இது 71.69 சதவீதம். கடந்த ஆண்டைவிட 0.45 கூடுதல் ஆகும்.

கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைபள்ளி மாணவி கலைவாணி 492 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

அதே பள்ளியைச் சேர்ந்த இந்துமதி 491 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், காட்டுமன்னார் கோவில் பி.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்து 489 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் திருப்பாபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

கடலூர் முதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 485 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

பண்ருட்டி புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கோமதி 484 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் 806 பேர் எழுதினார்கள்.

இதில் 787 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர் கணேஷ்குமார் 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அதே பள்ளியை சேர்ந்த முனீஸ்வரன், சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி ஜீவிதா, நெய்வேலி செயின்ட் பால் பள்ளி மாணவர் பாலமுருகன், அதே பள்ளியை சேர்ந்த பிரவின்குமார், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி அனுபாரதி ஆகிய 6 பேரும் தலா 481 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்கள்.

நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி மாணவி ஜனனி, அனுஷா, செரின் சல்மா, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி மாணவி சாந்தி ஆகிய 4 பேரும் தலா 480 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்தார்கள்.

இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி தெரிவித்தார்.

வியாழன், 21 மே, 2009

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை...! தொடக்க கல்வியில் 'இங்கிலீஷ் மீடியம்' வருமா?

இன்றைக்கு கல்வி ஒரு மிகப் பெரிய வர்த்தக விஷயமாகிவிட்டது.

படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரர்களும் கூட, தங்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர்.

உயர் கல்வி பெற்றால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை வளம் பெறும் என, பெரும்பாலான பெற்றோர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

இதனால், தங்கள் குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே, தரமான கல்வி பெறும் வகையில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சேர்க்கின்றனர்.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக்களில் கூட சேர்க்கைக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களை பொறுத்த வரையில், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அவை சிறப்பாக ஆங்கில அறிவு பெறும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

துவக்கத்தில் இருந்தே ஆங்கில அறிவு பெற்றால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் உயர் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்; நல்ல நிறுவனங்களில் பணி கிடைக்கும்; அதன் மூலம் கூடுதல் சம்பளம் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு வகையில், அவர்களின் எண்ணம் சரியானது தான்.

இன்றைக்கு, ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக உள்ளது.

முன்னைப் போல அல்லாமல், இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று, பணிபுரிய வேண்டியுள்ளது.

எனவே, அலுவலக பணிக்கும், தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனாலும், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சராசரி மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாகவே மாறிவிடுகிறது.

குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், தொடக்க கல்வியில் இங்கிலீஷ் மீடியத்தை கொண்டு வந்தால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ் மீடியம் உள்ளது.

சிறப்பு கட்டணம் செலுத்தினால், இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகள் படிக்கலாம். இந்நிலையில், தொடக்க கல்வியில் இருந்து இங்கிலீஷ் மீடியத்தை அறிமுகப்படுத்தினால், குழந்தைகள் முன்கூட்டியே ஆங்கில அறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக கட்ட வேண்டிய கட்டாயமும் பெற்றோருக்கு ஏற்படாது.

'கமிஷன்' அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் விற்பனை : ஏஜன்ட்டுகளாக மாறிய மெட்ரிக் பள்ளிகள்

கட்டணக் 'கொள்ளை' மட்டும் போதாமல், கமிஷன் அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் போன்றவற்றையும், 'கமிஷன் ஏஜன்ட்'களைப் போல் விற்று 'சம்பாதிக்கும்' முயற்சியில் இறங்கி விட்டன சில தனியார் பள்ளிகள்.

தெருவுக்குத் தெரு தனியார் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருக்கெடுத்து வருகின்றன.

கின்டர் கார்டன் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரை மெட்ரிக் பள்ளிகள் எனப் பெருகிவிட்டன.

ஒவ்வொரு பள்ளிகளும் தனித்தனியாக சீருடைகளை வடிவமைத்துள்ளன.

ஷூ, சாக்ஸ், டை, பெண் குழந்தைகள் என்றால் 'பெனேபாம்' என கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் வகையில் தான் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் என ஆயிரக்கணக்கில் வசூலிப்பதுடன், நோட்புக்களுக்கு என தனிக் கட்டணமும் வசூலித்துக் கொள்கின்றன.

இது மட்டுமின்றி, ஒரு சில பள்ளிகள் தங்களிடம் தான் ஷூ, யூனிபார்ம் துணிகளை வாங்க வேண்டும், டெய்லர்களிடம் கொடுக்க பெற்றோர் விரும்பினால் அதற்கும் 'கட்'. 'நாங்கள் கை காட்டும் டெய்லரிடம் தான் யூனிபார்ம் தைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டளை வேறு.

'சரி, சென்ற ஆண்டு வாங்கிய யூனிபார்ம் நன்றாக உள்ளது. இம்முறை வேண்டாம்' என்று கூறினால், அதை பள்ளி நிர்வாகம் செவி சாய்க்காமல், 'நோ, நோ... நீங்கள் கண்டிப்பாக யூனிபார்ம் வாங்கியாக வேண்டும். கடந்தாண்டு வாங்கிய யூனிபார்ம் அளவு சிறிதாகி விட்டால் என்ன செய்வது' என 'கண்டிஷன்' போடுகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு யூனிபார்ம், ஒரு செட் ஷூ வாங்கியாக வேண்டும் என நிர்பந்திக்கின்றது பள்ளி நிர்வாகம்.

ஆனால், அவர்கள் வழங்கிய ஷூ, சீருடைகள் கொடுக்கும் பணத்திற்குத் தரமானதாக இல்லை என்பதே பெற்றோரின் ஆதங்கம்.

பள்ளியில் சேர்த்தாகி விட்டது, இனி வேறு பள்ளியில் சேர்த்தால் அங்கும் டொனேஷன், பீஸ் எனச் செலுத்தியாக வேண்டுமே என்பதால், பெற்றோர் பலரும் வேறு வழியின்றி தரமில்லாத ஷூ, யூனிபார்ம்களை வாங்கிச் செல்கின்றனர்.

'எதில் தான் இப்படிப் பணம் பார்ப்பது என்ற வரைமுறை கூட இல்லாமல் போய்விட்டது என்று ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர்.

தற்போது அதிக வேலை வாய்ப்பு மற்றும் சில சிக்கல்களில் உள்ள பெற்றோர், ஆண்டுதோறும் மே மாதம் வந்தாலே பயப்படும் அளவுக்கு இப்பள்ளிகள் வசூலை அதிகப்படுத்தி பயமுறுத்துகின்றன.

இந்த நிலை மாறுவது எப்போது என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகும்.