இரான், பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, மலேசியா மற்றும் கொரிய நாடுகளில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புபவர்களிடமிருந்து திருச்சி உற்பத்தித் திறன் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இதுபற்றி குழுவின் கெளரவப் பொதுச் செயலர் ராஜ முத்திருளாண்டி தெரிவித்திருப்பது:
"நிகழாண்டில் இரானில் ஜூலை 11-16 ஆம் தேதிகளில் வேளாண்மையில் நீர் வள மேலாண்மை பற்றிய பயிலரங்கம், பிலிப்பைன்சில் ஜூன் 15-19 ஆம் தேதிகளில் உணவு பதப்படுத்துதல் தொழிலில் தர மேலாண்மை பற்றிய ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.
நேபாளில் மே 25-29 ஆம் தேதிகளில் சமுதாய அடிப்படையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேலாண்மை பற்றிய ஆய்வரங்கம், சீனாவில் ஜூன் 22-26 ஆம் தேதிகளில் தொழில்முனைவோரியல், வேளாண் தொழில்நுட்பம், வேளாண் தொழில் வளர்ப்பகம் பற்றிய ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.
மலேசியாவில் ஜூன் 15-18 ஆம் தேதிகளில் சேவைத் துறையில் அறிவு மேலாண்மை பற்றிய ஆய்வுக் கூட்டம், கொரியாவில் மே 19-22 ஆம் தேதிகளில் பொதுத் துறை உற்பத்தித் திறன் பற்றிய ஆய்வுக் கூட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள் பணியாற்றும் இடத்துக்கு அருகில் உள்ள விமான நிலையத்திலிருந்து பயிலரங்கம், ஆய்வரங்கம், கூட்டம் நடைபெறும் நாடுகளுக்குச் செல்லும் செலவுகள் அனைத்தையும் ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு ஏற்றுக் கொள்கிறது.
பயிலரங்கம், ஆய்வரங்கம், கூட்டம் நடைபெறும் இடத்தில் தங்குவதற்கான விடுதி செலவையும் இந்த அமைப்பு ஏற்கிறது.
திருச்சி உற்பத்தித் திறன் குழுவால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்களை புது தில்லியில் உள்ள தேசிய உற்பத்தித் திறன் குழு இறுதி செய்யும்.
குறைந்தபட்ச தகுதியாகப் பட்டப்படிப்பும், சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதியுடையோர் திருச்சி உறையூர் நாச்சியார் கோயில் சாலையில் உள்ள திருச்சி உற்பத்தித் திறன் குழு செயலகத்தை 0431 - 2762320 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது tpcsecretariat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்" என ராஜ முத்திருளாண்டி தெரிவித்தார்.
Source: சத்தியமார்க்கம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக