திங்கள், 25 மே, 2009

பிச்சாவரம் போகலாம் வாங்க!








சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.






சிதம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி.






பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீட்டர்.






மேற்கே உப்பனாறும், தெற்கே கீழ்திருக்கழிப்பாலையும், வடக்கே காடுகளும் எல்லைகளாக உள்ளன.






பிச்சாவரத்தின் சதுப்பு நிலக் காடுகள் கடலோரம் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.






இந்த சதுப்பு நிலக்காடுகளில் (சுந்தரவனக் காடுகள்) உப்பங்கழிகள் மற்றும் அடர்த்தியான மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் உள்ளன.






இந்த காடுகளில் சுமார் 4400 கால்வாய்கள் உள்ளன.







இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.






இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்வையிடலாம்.






கடலோரம் உள்ள எழில்மிகு அழகிய தீவுகளையும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.






பிச்சாவரம் வனப்பகுதியை சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.






2004 டிசம்பர் 26ந் தேதி சுனாமி பேரலை வந்த போது இந்த மாங்குரோவ் காடுகள் பேரலையின் வேகத்தை குறைத்து பிச்சாவரம் பகுதியில் பெரும்பாதிப்பை தடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக்குழாம் மற்றும் உணவகம் ஆகியவற்றை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது என சுற்றுலா அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.






இங்கு பிச்சாவரத்தில் கடலோரப் பகுதியில் எம்ஜிஆர் திட்டு, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு ஆகிய எழில்மிகு தீவுகள் உள்ளன.






எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படப்பிடிப்பு அங்குள்ள தீவில் நடத்தப்பட்டதால் அந்த தீவிற்கு எம்ஜிஆர் திட்டு என பெயரிடப்பட்டுள்ளது.






மேலும், பிச்சாவரத்தில் சூரியன் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.






மேற்கண்ட தீவுகளில் மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தனர்.






சுனாமி பேரலைக்கு பிறகு அத்தீவில் மீனவர்கள் குடியிருக்க அரசு தடைவிதித்துள்ளது.






தற்போது சின்ன வாய்க்கால் தீவில் குடில்கள் அமைக்கப்பட்டு பகல் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரும்.






ஆனால், தற்போது வெளிநாட்டு பறவைகள் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.






"ஹெச்ஐவி என்ற உயிர்க்கொல்லி மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோயை அழிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் மற்றும் கொசுக்களை விரட்டக்கூடிய ரசாயனப் பொருட்கள் மாங்குரோவ் காடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது'' என அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியியல் உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.






"பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகவும், தில்லை மரம் மருத்துவகுணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும்.






எனவே, இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் தில்லை தாவரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்கிறார் கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன்.






இத்தகைய அழகுமிக்க வனப்பகுதியுடன் கூடிய பிச்சாவரத்துக்கு ஒருமுறை சென்று வரலாமே!






பஸ் கட்டணம்






சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம்.






சிதம்பரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் உள்ளது.






பஸ் கட்டணம் ரூ.5.






பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாம் உள்ளது.






ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 கட்டணம்






குறைந்தது 5 பேர் ஒரு படகில் பயணம் செய்ய ரூ.125 வசூலிக்கப்படுகிறது.






காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகு சவாரி.






சிதம்பரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக எண்: 04144- 238739.






கிள்ளை பேரூராட்சி அலுவலகம் எண்: 04144-249227.











Source: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...