செவ்வாய், 15 மார்ச், 2011

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் கடும் அதிருப்தியில் விவசாயிகள்

சிதம்பரம், மார்ச் 13: முழுமையான வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கப்படாதததால் ஆளும் திமுக அரசின் மீது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 2010 கடைசியில் பெய்த கன மழையினால், வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டதாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 தினங்களுக்கு மேலாக நீர் சூழ்ந்து இயல்பு நிலை பாதித்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நிவாரணமான உணவு மற்றும் அரிசி சரியாக வழங்கப்படவில்லை.

ஆள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம், உரத் தட்டுபாடு, நெல்லுக்கு போதிய விலை இல்லாததது இவைகளை மீறி விவசாயிகள் சம்பா சாகுபடி பயிரிட்டனர். இந்நிலையில் கன மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து பயிர்கள் மூழ்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது.

வெள்ள நீர் வடிந்த பிறகு எப்போதும் போல் மத்தியக் குழுவினர் வந்து வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என கோரினர். ஆனால் அரசு ஹெக்டேருக்கு ரூ.8ஆயிரம் என அறிவித்தது. அந்த தொகையும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 50 சதவீதம்தான், உதாரணமாக ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் என நிவாரணம் வழங்கப்பட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு குடிசைகளுக்கு தலா ரூ.1500 வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் வெள்ள நீர் புகுந்த குறிப்பிட்ட குடிசைகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தினந்தோறும் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதும், போலீஸார் அவர்களை சமரசப்படுத்துவதுமாக அப்பிரச்னை முடிவுற்றது.

ஆனால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1500 நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் போதிய நிவாரணம் வழங்கப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆளும் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை சரியாக வழங்கப்படவில்லை. இந்த அதிருப்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக திரும்பும் என தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் மா.கோ.தேவராசன் தெரிவித்தார்.
Source: Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...