பரங்கிப்பேட்டை : மீன் வியாபாரிகளுக்கு, விசைப்படகு சங்கத்தினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்துவாரம் பகுதியில் வெளியூர் மீன்களை வாங்க விசைப்படகு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீன் வியாபாரிகளுக்கும், விசைப்படகு சங்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இதுகுறித்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டி.எஸ்.பி., நடராஜன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடந்தது.விசைப்படகு சங்கம் சார்பில் சங்கர், சுப்ரமணியன், நாகராஜன், சீனிவாசன், ஜெகதீசன் ஆகியோரும், மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலு, துணைத் தலைவர் ராமலிங்கம், அரவிந்தன், செழியன், ராஜேந்திரன் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் மே மாதம் 6ம் தேதி வரை அந்தந்த பகுதியில் பிடிக்கும் மீன்களை அந்தந்த பகுதிகளிலும் அதன் பிறகு வழக்கம் போல் பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் விற்பனை செய்யலாம். மீன் வியாபாரிகளுக்கு, விசைப்படகு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக