சனி, 11 ஜூன், 2011

ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பின்னர் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு எதிரான முதல் தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திமுகவினரைப் பற்றிய பிரசாரத்துக்கு பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்திட்டத்தைத் தள்ளிப்போடும் வகையில் சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி முறை (திருத்தச்) சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மே மாதம் 22-ம் தேதிதான் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் மே 23-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களுக்குப் பதிலாக, பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஒரே நாளில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது எப்படி? இதுபோல் நிபுணர்கள் குழு ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் அனைத்துக்குமான பாடத் திட்டங்களை ஒரே நாளில் ஆய்வு செய்து சமர்ப்பிப்பது என்பதும் இயலாத காரியம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

மேலும், சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதா கொண்டுவருவதற்கான காரணம், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் 9 கோடி சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவிடப்பட்ட ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும், 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கும், 50 ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கும், 25 ஓரியன்ட்டல் பள்ளிகளுக்கும் விநியோகிப்பது என்பது இயலாத காரியமாகும்.

ஏற்கெனவே 2010-11-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதை நீக்கிவிட்டு பழைய கல்வி முறையை கொண்டுவருவது என்பது, சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதுதான் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கே எதிரானதாக அமைந்துவிடும்.

எனவே, மாணவர் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, பழைய கல்வி முறையை அமல்படுத்துவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, 2011-12 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும்.அதே நேரம், சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த பாட புத்தகங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது தனி நபரையோ முன்னிருத்தும் வகையிலான பகுதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான முக்கிய வழக்கில், அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...