மாநிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2011

இறைவா..!, கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...




சமச்சீர் கல்வி குழப்பத்தால் ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிக்கூடம் ஜூன் 15 அன்று திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று பரங்கிப்பேட்டையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன, கடந்த 2 மாத காலமாக காலை நேரப்போக்குவரத்து இல்லாததின் காரணமாக அமைதியாக இருந்த பரங்கிப்பேட்டை நகர வீதிகளில் காலை 8 மணி முதல் பள்ளிக்கூட வேன்கள் - ஆட்டோக்கள் போக்குவரத்து மிகுந்ததால் வழக்கமான பரப்பரப்பு மீண்டும் காணப்பட்டது. பரங்கிப்பேட்டையின் " தி.நகர் ரங்கநாதன் தெரு" என்றழைக்கப்படும் மேட்டுத்தெரு வணிக வளாகங்களில், பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. மாணவ - மாணவிகளின் கல்வி சிறக்க mypno.com ஆசிரியர் குழு சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். மாணவ - மாணவிகளை வாழ்த்துகிறோம்.

செவ்வாய், 14 ஜூன், 2011

சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்துக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், நிபுணர் குழு அறிக்கை மீது ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை 2,3,4,5, 7,8,9,10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டாம். தீர்ப்புக்கு பின் பாடம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.

சனி, 11 ஜூன், 2011

ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பின்னர் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு எதிரான முதல் தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திமுகவினரைப் பற்றிய பிரசாரத்துக்கு பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்திட்டத்தைத் தள்ளிப்போடும் வகையில் சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி முறை (திருத்தச்) சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மே மாதம் 22-ம் தேதிதான் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் மே 23-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களுக்குப் பதிலாக, பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஒரே நாளில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது எப்படி? இதுபோல் நிபுணர்கள் குழு ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் அனைத்துக்குமான பாடத் திட்டங்களை ஒரே நாளில் ஆய்வு செய்து சமர்ப்பிப்பது என்பதும் இயலாத காரியம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

மேலும், சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதா கொண்டுவருவதற்கான காரணம், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் 9 கோடி சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவிடப்பட்ட ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும், 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கும், 50 ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கும், 25 ஓரியன்ட்டல் பள்ளிகளுக்கும் விநியோகிப்பது என்பது இயலாத காரியமாகும்.

ஏற்கெனவே 2010-11-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதை நீக்கிவிட்டு பழைய கல்வி முறையை கொண்டுவருவது என்பது, சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதுதான் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கே எதிரானதாக அமைந்துவிடும்.

எனவே, மாணவர் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, பழைய கல்வி முறையை அமல்படுத்துவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, 2011-12 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும்.அதே நேரம், சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த பாட புத்தகங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது தனி நபரையோ முன்னிருத்தும் வகையிலான பகுதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான முக்கிய வழக்கில், அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

வெள்ளி, 10 ஜூன், 2011

பூண்டியாங்குப்பத்தில் பஸ் கவிழ்ந்தது

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இன்று அதிகாலை கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

புதன், 8 ஜூன், 2011

ஆம்னி பேருந்து விபத்து: பலர் பலி?

சென்னையில் இருந்து திருப்பூருக்கு தனியார் ஆம்னி பஸ் 07-06-2011 இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சற்று முன் சென்ற போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து டிரைவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வேலூர் கலெக்டர் நாகராஜ் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஜெயராம், தீயணைப்புத்துறை வேலூர் சரக துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்


முன்னர் வந்த செய்தி:
வேலூர் மாவட்டம் அவலூர் கிராமத்தில் உள்ளது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இச்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 07.06.2011 அன்று இரவு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் யாரும் தப்பிக்க முடியததால் 27 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

வெள்ளி, 27 மே, 2011

மாணவிகள் அதிரடி..!

இன்று காலை வெளியான 10ம் வகுப்பு தேர்வில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர்.இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும். பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்யது ராபியா பிவீ 479 மதிப்பெண்களும், தீபா 470 மதிப்பெண்களும், நூர் சுல்தானா 463 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவிகள் தீபா, செய்யது ராபியா பீவி ஆகிய இருவரும் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விவரங்கள் இறைவன் நாடினால் விரைவில்.

வியாழன், 19 மே, 2011

I .P.S. அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்


.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்.)  சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த .பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு .டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் .டி.ஜி.பி.,)

 .ஜி.பொன் மாணிக்கவேல் - ரயில்வே டி..ஜி., - (விழுப்புரம் சரக டி..ஜி.,)

 அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட  எஸ்.பி.,).

புதன், 18 மே, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன., மாணவ - மாணவிகளும், பெற்றோர்களும் தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள், வரும் 24ம் தேதி வெளியாகிறது.கடந்த ஆண்டு S.S.L.C. தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின், 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் உங்கள் MYPNO.COM இணையத் தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 மே, 2011

MYPNO.COM -ல் +2 தேர்வு முடிவுகள்

மார்ச் 2 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை காலையில் வெளியிடப்பட உள்ளன. இதற்கான அனைத்துப் பணிகளும் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தன. . இந்தத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர். இதனையொட்டி இறைவன் நாடினால் நமது இணையத்தளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு முடிவுகளும் நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 26 பிப்ரவரி, 2011

விருப்ப மனு தாக்கல்

தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.


முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.  A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 


--
அண்ணா அறிவாலய வளாகத்திலிருந்து mypno.com செய்திக்காக ஹம்துன் அப்பாஸ்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

“மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம்” - கவிக்கோ


தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுர் நகரில் நடைப்பெற்றது , அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த சனிக்கிழமையன்று சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ. அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் S.M..ஹிதாயத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.

பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதின் காரணமாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையினால் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தவ்ஹீத் தலைமையில் அபுல்ஹஸன், தெளலத் அலி, ஹாஜா, ஹம்துன் அப்பாஸ், சாஹுல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை செயலாளருமான மூசா ராஜா, ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்க உரை நிகழ்த்திய டாக்டர் மீர் முர் முஸ்தபா உசேன், மூசா ராஜா IAS , ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி ஆகியோர் பல்வேறு அரிய ஆலோசனைகளையும், துறை சார்ந்த அனுபவங்களையும் வழங்கினார்கள்

கவிக்கோ தனது தலைமையுரையில், “எட்டாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமியர்கள் பல துறைகளில் ஆண்டு வந்தார்கள். விஞ்ஞானம் என்பது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு வழங்கிய பிச்சை. மருத்துவத்துறை நம் சமுதாயத்திற்கு புதியதும் அல்ல, மருத்துவ துறையில் தலைச்சிறந்து விளங்கிய இஸ்லாமிய சமுதாயம் தான் இன்று மிகப்பெரிய நோயாளி சமுதாமாக இருக்கிறது”, என்று ஆதங்கப்பட்ட கவிக்கோ, இறைவன் நாடினால் அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார், தொடர்ந்து பேசுகையில், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது என்றும், அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் 65 உறுப்பினர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பங்களிப்பு காசோலைகளை வழங்கினார்கள். பரங்கிப்பேட்டை சார்பில் 6 காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் தனியார்(கள்) பெயரில் தான் அமைந்திருந்தது. அதில் விதிவிலக்காக ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்ட ஒரே காசோலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு நமது சமுதாய மக்கள் பயனடையும் வகையில் நமது ஜமாஅத்-திற்கு கிடைக்கும். தொடர்ந்து இதுப்போன்ற ஆலோசனை கூட்டங்கள் திருநெல்வேலி, கீழக்கரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைப்பெற இருக்கிறது

கூட்டத்தின் இறுதியில் வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்பால், சாதிக் மற்றும் நீடுர் மதரஸா நிர்வாகிகள், வக்ஃப் வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.