புதுச்சேரி: புதுவை அரியாங்குப்பம் ஆற்றின் குறுக்கே கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் 1888-ம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. மேலும் பாலத்தின் பழமையை கருத்தில் கொண்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2004-ம் ஆண்டு புதிய பாலம் கட்ட அரசு ஆணை பெறப்பட்டது.
இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணி 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. நிதி நெருக்கடி காரணமாக இடையே இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது புதிய 4 வழி கொண்ட பாலம் மற்றும் இணைப்பு சாலைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தது.
இந்த புதிய பாலம் கட்டுவதற்கு இணைப்பு சாலைக்கு ரூ.6 கோடியே 15 லட்சம் உள்பட ரூ.26 கோடியே 5 லட்சம் செலவானது. பாலத்தின் மொத்த நீளம் 170.75 மீட்டராகும். அகலம் 20.03 மீட்டர். நடைபாதையின் அகலம் 1.86 மீட்டர். பாலத்தின் இரு புறங்களிலும் பழைய சாலைகளுடன் இணைப்பதற்கு வடக்கில் 380 மீட்டருக்கும், தெற்கில் 780 மீட்டருக்கும் இணைப்பு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலத்தை புதுவை மக்களுக்கு அர்பப்ணிக்கும் விழா இன்று காலை நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி போக்குவரத்தை தொடங்கி வைத்தார். சபாநாயகர் சபாபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாட்டன் சாங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் பி.ஆர்.பீனா, பொதுப் பணித்துறை தலைமை என்ஜினீயர் மனோகர், வாரிய தலைவர்கள் சுரேஷ், பாஸ்கரன், ஞானசேகரன், ராஜேஷ், வேல்முருகன், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பக்தவச்சலம், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பொன்.ராஜேந்திரன், குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக