புதன், 25 டிசம்பர், 2024

ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு!

2004-2024

சுனாமி (ஆழிப்பேரலை)  என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் தாக்கியதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு இருந்தாலும், 2004-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சுனாமி என்பது எவ்வளவு பேரழிவு ஏற்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட பெரிய தாக்கத்தையும் கண்டு அறிந்ததில்லையோ அதுபோல் நமக்கும் அது ஒரு செய்தியாகத்  தான் இருந்திருக்கும்.  

(ஒரு பிரபல நாளிதழ் கூட பெயர் தெரியாமல் அடுத்த நாள் 'தமிழகத்தை தாக்கிய டி-சுனாமி' என்று செய்தி வெளியிட்டது )

பாவம் அவர்களுக்கே தெரியவில்லை.

ஆனால் 2004 டிசம்பர் 26 அன்று காலை 8 மணிக்கு மேல் தமிழக கடற்கரையைச் சார்ந்த மக்கள் கண்டுக் கொண்டார்கள்.

மழை வெள்ளத்தால் படிப்படியாகத் தண்ணீர் வந்ததைப் பார்த்திருக்கலாம்.

கடல் தண்ணீர் ஊருக்கு வந்ததைக் கூட சிலசமயம் பார்த்திருக்கலாம்.

ஒரே மூச்சில் சுமார் 30 மீட்டர்(100அடி) வெள்ளம் இரண்டு தென்னை மரம் உயரம் அளவு உயர்ந்து பாரிய அலையாக, அழிவுப் பேரலையாக,

ஆழிப்பேரலையாக ஊருக்கு வந்ததையும் சுமத்ராவிற்கு எந்த விதத் தொடர்புமில்லாத மனிதர்கள் மாண்டதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்தோனேசியா சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலத்தட்டுகள் (டெக்டானிக் பிளேட்கள்-Plate tectonics) அதில் இந்தியத் தட்டும் மியான்மர் தட்டும் கடலுக்கு அடியில் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட நிலநடுக்கமே சுனாமியாக உருவெடுத்து இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள தமிழகம் உட்பட சில நாடுகளை 2004 ஆம் ஆண்டு தாக்கியது. 

அன்று கடலுக்கடியில் 9.1-9.3 ரிக்டர் அளவு பதிவாகிய நிலநடுக்கம் என்பதை கடல் மேற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலாடிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கரை வந்தபிறகு அந்தப் பெரிய அழிவைக் கண்டனர். உறவுகள் மாண்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடற்பரப்பில் ஏற்பட்ட பெரிய அளவு நிலநடுக்கம், நிலத்தில் ஏற்பட்டிருந்தால் 

பல அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

சுனாமி தாக்கிய 14 நாடுகளில் இரண்டே கால் லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து கடலூர் மாவட்டத்தில் மொத்தமாக 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் அந்த எண்ணிக்கையில் தேவனாம்பட்டினம், சாமியார் பேட்டையில் தான் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.


கடலூர்

மெரினா

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன் இழை' கண்ணாடி குவளை குண்டு பல்புவின் தொடக்கம் தான் இன்று எல்.இ.டி என்னும் ஒரு மிகப்பெரிய ஒளிரும் சாதனத்தில் வந்து நிற்கிறோம்.  

இன்றைய நாகரீக உலகத்தில்  வெளிச்சம் உமிழும் நகரத்தை பகலாக உண்டாக்கும் எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அன்று 70-80 க்கும் மத்தியில் (நம் வயது, அனுபவத்தை பொருத்தவரை இதிலிருந்து தான் தொடங்க முடியும்) எந்த விளக்குகளிருந்து நாம் ஒளி பெற்று கடந்து வந்திருக்கிறோம் என்பதை சிறிதாக பார்ப்போமா?

முட்டை விளக்கு


பெயருக்கு ஏற்ற மாதிரி முட்டையின் தோல் போல் இருந்து கைகளிலிருந்து சிறிது தவறி விழுந்தாலும் கண்ணாடி சிம்னி உடைந்து போகும். மாற்று  வாங்குவதற்கு வீட்டில் ஏவி,  அலுப்பு ஏற்பட்டு அதன் பலனாக ஏச்சு,உதை வாங்கி பிறகு அந்த முட்டையை வாங்கிட்டு வருவோம்.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

நானா-க்கள் சொன்ன பிஸ்மில்லா!

கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும்.

இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம் இருந்தாலும், அன்று ரங்கநாதன் தெரு போல கூட்டம் வழிந்து போகும்.

1990-களின் முற்பகுதியில் ஒரு கடல் சனத்தையும் சன்னமாக அடைத்தது அந்த பழைய காலத்து வீடுகள் தான். அது போக மீதியிருந்தால் சனங்கள் அமர அடுத்த வீட்டு மனங்களும் இருந்தது கொடுத்து உதவ.

அக்கம்பக்கத்து வீடுகளில் கல்யாணம் என்றாலும் நம் வீட்டு கல்யாணம் என்பது போல் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை போட்டு ஆனந்தம் அடைந்தோம். மூன்று நாட்கள் அவர்கள் வீட்டில் தான் உணவு உண்டோம். 

அன்று ஒரு திருமணம் என்றாலே திருமணம் நடக்கும் வீடு விடுத்து, அக்கம்பக்கத்து

மூன்று வீடுகளை கலரிக்காக எடுத்து விடுவோம் அவர்களும் சுத்தமாக தயார் செய்து கொடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலிருந்து வாடகை எடுத்த மூனு,நாலு சுருள் பாய்களையும், ஐம்பதுக்கு மேற்பட்ட அலுமினியம் மடா செம்புகளையும் கூடவே ஒரு கொட்றா உப்பையும் எடுத்து வைத்து விடுவோம்.

அன்று இரத்த கொதிப்பு அதிகமில்லா காலம். இன்று அந்த உப்பு வைப்பது வழக்கொழிந்து போனது(க்கு) ஒருவேளை இது தான் காரணமோ?!🤔

இதற்கு முன்பு நடுநிசியில் புறப்பட்ட மாப்பிள்ளை பஜ்ரு நேரத்தில் பொண்ணு வீடு வந்து சேர, பேனியான், கைவீச்சு, சீனி வாடா, நானாஹத்தா, உல்சம்சாதூள் உள்ளிட்ட அனைத்து பனியாரங்களும், அதனுடன் ஹார்லிக்ஸ் பூஸ்டுக்களும் பரிமாறப்படும். 

அன்றைய பெஸ்ட்மேன்கள் என்பவர்கள் ஒருநாள் முதல்வர் மாதிரி (கிட்டத்தட்ட விட்டில் பூச்சி மாதிரியும் என்று கூட மாறு உதாரணம் சொல்லலாம்) வேறு விதத்தில் சொன்னால் மாப்பிள்ளையின் பவுன்சர்கள் மாதிரி

அவர்கள் எது சொன்னாலும் நாம் இனிமையாக தான் பேச வேண்டும் இல்லையெனில் மாப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமண நிக்காஹ் விருந்து என்றாலும், பனி எடுப்பு களரி என்றாலும் அக்கம்பக்க எய்த்த வீடுகளை கொடுக்க தயாராகவே இருப்பார்கள். இது போக கிளை தாவத்தும் அதுக்கு இன்னொரு கிளை தாவத்தும் உண்டு அதற்கு ஒரு வீடே போதுமானது.

இரண்டு மெயின் தாவத்துகளிலும்,

நாட்டை காக்க முப்படைகளும் தயார் என்பது போல், வீட்டை காக்க (தாவத்களில் பரிமாற மூன்று வீடுகளிலும்) ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக அட்டென்சனிலும், தெரிந்தவர்கள் கூடுதலாக ஒரு கொட்றா  இறைச்சி கேட்டால் வரும் அந்த டென்சனிலும் இருப்போம்.

திருமணத்தில் எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதை *'அன்றே கணித்தார் கமல்'* என்பது போல் பத்திரிக்கை கொடுப்பவர் லிஸ்ட் வைத்தே கூறி விடுவார்கள் எத்தனை பேர் வருவார்கள் என்று 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போல் அவ்வளவு துல்லியம் (ஒரு ஃப்ளோவ்'லே வருது மன்னிக்க!)😀

இன்று போல் சோறு, இறைச்சி, தால்ச்சா தட்டிக்கிச்சி என்பதை அன்று பார்த்தது மிகவும் அரிது.

பரிமாற பைடு நபர்கள் *'கேட்டரிங்கை'*  அன்று அப்படி ஒரு வார்த்தையை காதால் 'கேட்டு அறிந்தது' கூட  இல்லை.

அன்று பக்கத்து வூட்டில் பெரிய மாமாவும், எய்(திர்)த்த வூட்டில் சின்னாப்பாவும், பக்கத்து வூட்லே மச்சானும் இருந்து கலரியை கவனித்து கொண்டார்கள். 

திருமணம் நடக்கும் வீட்டிலிருந்து  *"பிஸ்மில்லா"* கூற சிக்னல் வந்ததும், 

மற்ற மூன்று வீடுகளிலும் மாமா,சின்னாப்பா, மச்சான்களும் அதை உள்வாங்கி மற்ற வீடுகளில் *"பிஸ்மில்லா"* என்று கூறி எதிரொலித்தார்கள். இதைதான் பல வீட்டு திருமணங்களில் பல்வேறுபட்ட நானா-க்கள் *பிஸ்மில்லாஹ்* என்று உதிர்த்தார்கள்.

அன்று அனைவரும் ஒருசேர அன்போடு ஒரே நேரத்தில் உண்டு மகிழ்ந்தோம். 

வயிறோடு மனமும் நிறைந்தது.

இன்று கேட்டரிங் சேவை வழியாக பரிமாறப்படுவது உணவு மட்டுமே. பிஸ்மில்லாவும்  இல்லை. அன்பும்,அரவணைப்பும், மகிழ்வும் சுத்தமாக இல்லை.

உணவு உண்ணும் போது பிஸ்மில்லாவை மறந்தால் வயிறு நிறையாது என்பது போல், மனம் நிறையாமல் வீடு விரைகிறோம்.

வியாழன், 12 டிசம்பர், 2024

கார் காலம், கருமுகில் காலம்!

ஆக்கம்: ஊர் நேசன்

அன்று சென்னை,திருச்சி வானொலி நிலையங்கள் தான் வானிலை அறிவிப்புகளை வழங்கி கொண்டிருந்தன.

இன்றைய புத்தி சுயாதீன வானிலை கணிப்பாளார்கள் போல் அன்று இல்லை.

இன்று அடை மழை வருமா?(வந்தாலும் வரலாம்) பள்ளிக்கு இன்று விடுமுறை கிடைக்குமா? என்று முன் அறிப்புகள் பெற்ற கிட்ஸ்கள் நாங்கள் இல்லை..

லேசான தூறல் மிதமான மழையிலும் பள்ளிகள் நடந்தன.



பலமான சிமெண்ட் கூரைகள் பெற்ற பள்ளிகள் அன்று இல்லை. ஓலை கூரைகள் வேய்ந்தும்,ஓடுகள் வேய்ந்தும் நடுவில் திறந்தவெளி பெற்ற மழையை ரசித்துக் கொண்டே படிக்கும் பள்ளிகள் அமைப்புகள் அன்று. ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கூரை விழலாம் சுவர்கள் சாயலாம் என அச்சமில்லா அச்சமும் இருந்தது.

வானொலி நிலையங்களில் 'மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து' போன்ற பாடல்கள் அன்றைய மழைப்பாடல்களாக இருந்தன.

மழை இன்று சில சமயம் (அக்,நவ) பொய்த்தும் போவதும், சில சம சமயம் மாறுகாலத்தில்(ஜூன் ஜுலை) பெய்(ந்)த்து போல், அன்று நவம்பரில் நனையாத பூமி என்பதே இல்லை. குறைந்தபட்சம் மூன்று மாத மும்மாரியை நாம் கண்டிருக்கிறோம். 

ஒவ்வொரு வீட்டு கிணறு நிறைவதே மழையின் இறுதியாக இருக்கும் (அப்படி தான் அன்று நம்ப வைக்கப்பட்டோம்).

அன்று எதிர்வீட்டு நண்பர்களுடன் அவரவர் வீட்டு திண்ணையில் இருந்துக்கொண்டே

மழையை வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு அலாதியான இன்பம். தெருவில் வரும் வெள்ளத்தில் செருப்பு மிதந்தது போவதை பார்ப்பது கூட வேடிக்கையாக இருக்கும். 'டேய் தண்ணி டீ கலர்லே போகுதுடா' என்று கூறி ஆர்ப்பரிப்போம்.

மும்மாரியின் இறுதியில் தெருக்கள் எங்கும் அழுக்கான நீர் வடிந்து துகிலாக காட்சியளிக்கும் பூமியிலிருந்து ஊற்று(ஊத்து)க்கள் பீறிடும் அதைச்சுற்றி மண்ணால் அணைக்கட்டி விளையாடுவோம்.

கோட்டாய் தெரு, சின்னக்கடை காட்டாணை தர்கா அருகில்  மற்றும் கும்மத் பள்ளி தெரு என ஒவ்வொரு

தெருவுக்கும்  ஒரு குரூப் இதே போன்ற விளையாட்டை மழை விட்டதும் (மழலையாக போல்) தொடங்கும்.

இதுவே அந்த வருட மழையின் விடைபெறல்!.

அடுத்து கூதிர் காலம், முன்பனிக்கால அனுபவங்களும் உண்டு, பதிவு பெரிதாகிவிடும்.

முற்றும்.

-

ஊ.நே