செவ்வாய், 26 மே, 2009

பிச்சாவரத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்

பிச்சாவரத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜல்லி மீன்.
மீன் ஓட்டின் கீழ்பாகத்தின் தோற்றம்.


சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சின்னவாய்க்கால் தீவு கடற்கரையில் அரியவகை மீன்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.

ஆமை ஓடு போன்ற மேல்பாகத்தை கொண்ட இந்த மீன்கள் ஜல்லி மீன் வகையைச் சேர்ந்தது என கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

அந்த ஓட்டில் கோலம் போட்டது போன்ற அழகிய தோற்றம் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஓட்டின் உள்புறமும் அழகிய சித்திரம் வரைந்தது போன்று உள்ளது.

"இந்த மீன்கள் கோடைக்காலத்தில் கடற்கரையில் அதிகம் ஒதுங்கும். இவை மருத்துவ குணம் வாய்ந்தவை'' என்று பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளி மாணவி சந்தானலட்சுமி சாதனை!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளி மாணவி சந்தான லட்சுமி 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 277 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.

அதில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவி சந்தான லட்சுமி 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

அதே பள்ளியை சேர்ந்த மாணவி ராஜ மோகனா அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி அருள் செல்வி சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப் பெண்களையும் பெற்றனர்.

தமிழ் பாடத்தில் மாணவி சங்கீதா 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் சந்தானலட்சுமி 96மதிப்பெண்களும், கணிதத்தில் செவ்வந்தி 99 மதிப்பெண்களும் பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளையும் பள்ளியின் முதல்வர் லீலாவதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து கூறினர்.

சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடலூர் மாவட்டத்தில் 71 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 711 பேர் எழுதினார்கள்.

22 ஆயிரத்து 758 பேர் தேர்வு பெற்றனர்.

இது 71.69 சதவீதம். கடந்த ஆண்டைவிட 0.45 கூடுதல் ஆகும்.

கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைபள்ளி மாணவி கலைவாணி 492 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

அதே பள்ளியைச் சேர்ந்த இந்துமதி 491 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், காட்டுமன்னார் கோவில் பி.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்து 489 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் திருப்பாபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

கடலூர் முதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 485 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

பண்ருட்டி புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கோமதி 484 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் 806 பேர் எழுதினார்கள்.

இதில் 787 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர் கணேஷ்குமார் 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அதே பள்ளியை சேர்ந்த முனீஸ்வரன், சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி ஜீவிதா, நெய்வேலி செயின்ட் பால் பள்ளி மாணவர் பாலமுருகன், அதே பள்ளியை சேர்ந்த பிரவின்குமார், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி அனுபாரதி ஆகிய 6 பேரும் தலா 481 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்கள்.

நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி மாணவி ஜனனி, அனுஷா, செரின் சல்மா, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி மாணவி சாந்தி ஆகிய 4 பேரும் தலா 480 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்தார்கள்.

இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி தெரிவித்தார்.