ஞாயிறு, 31 மே, 2009

'`புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்'! - இன்று உலக புகையிலை இல்லா நாள்!!

உலகம் முழுவதும், இன்று (31-ந் தேதி) புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக புகையிலை இல்லா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும், மே மாதம் 31-ந் தேதியை, உலக `புகையிலை இல்லா நாளாக' அறிவித்து உள்ளது.

பீடி, சிகரெட் புகைப்பவர்கள், புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய் புற்று நோய், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம், மூச்சுக் குழாயின் உள் சுவர்களில் புண் உண்டாகி அதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் முதிர்ந்த நிலை ஆஸ்துமா அல்லது `சிஓபிடி' என்னும் பாதிப்பு ஏற்படும்.

புகை பிடிப்பதற்கும் முதிர்ந்த குணப்படுத்த முடியாத ஆஸ்துமாவின் `சிபிஓடி'க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது.

சமீப காலமாக, வயதானவர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் புகைப்பழக்கத்துக்கும், புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்துக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.

இளம் வயதில் இந்த பழக்கத்துக்கு ஆளவதால், வெகு சீக்கிரத்திலேயே வாய் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு என பல்வேறு நோய்களால் தாக்கப்படுகிறார்கள்.

ரத்தத்தில் `ஆல்பாஒன் ஆன்டிட்ரிப்சின்' குறைந்திருந்தால் புகை பிடிப்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

புகை பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் சிகரெட் அல்லது பீடியின் புகையை உள் இழுத்து விடுவதால் மூச்சுத் திணறல், வீசிங், இளைப்பு போன்ற தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

உடலில் காற்று பரிமாறும் உறுப்பான ஆல்வியோலைல் பாதிப்பு ஏற்படுவதால் `சர்பேக்டன்ட்' என்ற ஒரு முக்கியமான ரசாயனப் பொருள் உற்பத்தி அழிக்கப்படுகிறது.

இளம் வயதில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மூச்சுக்குழாயில் `மேக்ரோபேஜ்' என்ற வெள்ளை அணுக்கள் பாதிப்பு அதிகம் உண்டாகிறது.

ஆங்காங்கு கெடுதல் விளைவிக்கும் `கொல்லாஜன்' என்ற நார்சத்து பரவ ஆரம்பித்து நுரையீரல் வரையில் கெடுகிறது.

இயற்கையில் நுரையீரல் திசு அணுக்கள் இறந்துவிட்டால் அதற்கு சமமாக புதிய திசு அணுக்கள் உண்டாக்கி சீராக வைத்துக்கொள்ளும் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திசுக்கள் அதிகமாக அழியும் நிலை உண்டாகி மரணம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரும், அவற்றின் தீய குணங்களை உணர்ந்து இனியாவது புகைபிடிப்பதில் இருந்தும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கவே இன்று (மே 31) உலக புகையிலை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது வெறும் எழுத்தளவிலும், பேச்சு அளவிலும் இருந்து விடாமல் அதற்கு செயல்வடிவம் கொடுப்போம். புகையிலைக்கு விடைகொடுப்போம்.

மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வுகள் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலான மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜுலை மாதம் நடைபெற உள்ளது.

அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று 5-ந் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இன்டர்நெட் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமும், அரசு கருவூலக சீட்டாகவும் செலுத்த வேண்டும்.

ஜுன் 5-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் மு.மனோகரன் தெரிவித்துள்ளார்.



பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் உள்ள 2,382 காலியிடங்களுக்கு தேர்வு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதிலும் பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் உள்ள 2,382 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 6-ல் எழுத்து தேர்வு நடக்கிறது.

இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பிராந்திய முதன்மை ஆணையர் கே.சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக பிராந்திய பிராவிடன்ட் பண்ட் அலுவலகத்தில், பிராந்திய முதன்மை ஆணையர் கே.சீனிவாசன், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு முழுவதிலும் பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் 4 கோடி தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர்.

இதில், தமிழகத்தில், மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 70 லட்சம் பேர் உள்ளனர்.

தமிழகத்தில் சந்தாதாரர்களிடமிருந்து ஆண்டுதோறும் பல்வேறு வகைகளில் 5 லட்சம் மனுக்கள் வருகின்றன. அவற்றில் 90 சதவீதம், உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.

பிராவிடன்ட் பண்ட் சந்தாதாரர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக, ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்பினோம்.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதிலும் எங்களது அலுவலகங்களில் உள்ள சமூக பாதுகாப்பு உதவியாளர் (மொத்தம்-2382) மற்றும் இளநிலை பொறியாளர் (சிவில்) பணியிடங்களை (மொத்தம் 11) எழுத்து தேர்வு வாயிலாக நிரப்ப திட்டமிட்டுள்ளோம்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு பட்டமும், ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துக்களை கம்ப்யூட்டரில் டைப் செய்பவருமாக இருக்க வேண்டும்.

மற்றபடி, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கம்ப்யூட்டர் பயின்றதற்கான சான்றிதழை வைத்திருந்தால் நலம்.

இளநிலை பொறியாளர் பதவிக்கு, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து, சிவில் அல்லது எலக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும்.

எஸ்டிமேஷன், டிராயிங் மற்றும் டிசைன் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு, பொதுப்பிரிவினருக்கு 8.7.2009 தேதிப்படி, 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

எஸ்.சி-எஸ்.டி.யினருக்கு, 5 ஆண்டு வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

மத்திய அரசு மற்றும் பிராவிடன்ட் பண்ட் அலுவலக தொழிலாளர்களுக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

இளநிலை பொறியாளர் பணியிடத்துக்கும் மேற்கண்ட வயது வரம்பு பொருந்தும்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு எழுத்து தேர்வும், அதன்பிறகு, கம்ப்யூட்டர் தேர்வும் நடத்தப்படும்.

கடந்த ஆண்டில் இந்த பணியில் சேர்ந்த ஒரு பெண், தற்போது 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.

இளநிலை பொறியாளர் பணியிடத்துக்கு எழுத்து தேர்வும், அதன்பிறகு நேர்முக தேர்வும் நடைபெறும்.

மேற்கண்ட இருபிரிவினருக்கும் செப்டம்பர் 6-ந் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவையில் நடைபெறும்.

விண்ணப்பங்களை, தபால் பெட்டி எண்:8463, மண்டபேஷ்வர், போரிவலி (வெஸ்ட்), மும்பை-400103 என்ற முவரிக்கு சாதாரண தபாலில், ஜுலை 8-க்குள் அனுப்ப வேண்டும்.

உறையின் மீது, எந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள், சமுதாயம் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட முறையில் மனுக்கள் அமைந்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ.200-ம், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் ரூ.50-ம் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.