விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மே, 2009

+1 & +2 வகுப்பில் சேரப்போகிறீர்களா? இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனித நேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித நேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.

அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'`புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்'! - இன்று உலக புகையிலை இல்லா நாள்!!

உலகம் முழுவதும், இன்று (31-ந் தேதி) புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக புகையிலை இல்லா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும், மே மாதம் 31-ந் தேதியை, உலக `புகையிலை இல்லா நாளாக' அறிவித்து உள்ளது.

பீடி, சிகரெட் புகைப்பவர்கள், புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய் புற்று நோய், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம், மூச்சுக் குழாயின் உள் சுவர்களில் புண் உண்டாகி அதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் முதிர்ந்த நிலை ஆஸ்துமா அல்லது `சிஓபிடி' என்னும் பாதிப்பு ஏற்படும்.

புகை பிடிப்பதற்கும் முதிர்ந்த குணப்படுத்த முடியாத ஆஸ்துமாவின் `சிபிஓடி'க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது.

சமீப காலமாக, வயதானவர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் புகைப்பழக்கத்துக்கும், புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்துக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.

இளம் வயதில் இந்த பழக்கத்துக்கு ஆளவதால், வெகு சீக்கிரத்திலேயே வாய் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு என பல்வேறு நோய்களால் தாக்கப்படுகிறார்கள்.

ரத்தத்தில் `ஆல்பாஒன் ஆன்டிட்ரிப்சின்' குறைந்திருந்தால் புகை பிடிப்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

புகை பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் சிகரெட் அல்லது பீடியின் புகையை உள் இழுத்து விடுவதால் மூச்சுத் திணறல், வீசிங், இளைப்பு போன்ற தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

உடலில் காற்று பரிமாறும் உறுப்பான ஆல்வியோலைல் பாதிப்பு ஏற்படுவதால் `சர்பேக்டன்ட்' என்ற ஒரு முக்கியமான ரசாயனப் பொருள் உற்பத்தி அழிக்கப்படுகிறது.

இளம் வயதில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மூச்சுக்குழாயில் `மேக்ரோபேஜ்' என்ற வெள்ளை அணுக்கள் பாதிப்பு அதிகம் உண்டாகிறது.

ஆங்காங்கு கெடுதல் விளைவிக்கும் `கொல்லாஜன்' என்ற நார்சத்து பரவ ஆரம்பித்து நுரையீரல் வரையில் கெடுகிறது.

இயற்கையில் நுரையீரல் திசு அணுக்கள் இறந்துவிட்டால் அதற்கு சமமாக புதிய திசு அணுக்கள் உண்டாக்கி சீராக வைத்துக்கொள்ளும் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திசுக்கள் அதிகமாக அழியும் நிலை உண்டாகி மரணம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரும், அவற்றின் தீய குணங்களை உணர்ந்து இனியாவது புகைபிடிப்பதில் இருந்தும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கவே இன்று (மே 31) உலக புகையிலை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது வெறும் எழுத்தளவிலும், பேச்சு அளவிலும் இருந்து விடாமல் அதற்கு செயல்வடிவம் கொடுப்போம். புகையிலைக்கு விடைகொடுப்போம்.

வியாழன், 7 மே, 2009

ஓட்டு போட விழிப்புணர்வு தேர்தல் கமிஷன் போஸ்டர்!

ஓட்டு போட தூண்டும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் போஸ்டர் அச்சடித்துள்ளது.

தேர்தலில் மக்கள் ஓட்டு போடுவது குறைந்து வருகிறது. வாக்காளர்கள் அனைவரையும் ஓட்டு போட தூண்டும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

'வாக்காளர்களே' என்ற தலைப்பில் பெண் ஒருவர் ஓட்டு போட்டு விட்டு மகிழ்ச்சியுடன் விரலில் மை வைக்கப்பட்டுள்ளதை காட்டுவது போன்ற படத்துடன் கூடிய பெரிய போஸ்டரை தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.

இவை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் ஒட்டப்படவுள்ள போஸ்டரில் கூறியுள்ளதாவது:

  • வாக்காளர்களே வாக்களிப்பது ஒரு புனிதமான உரிமை.

  • நம் தாய்நாட்டிற்கு செலுத்த வேண்டிய ஒரு கடமை.

  • உங்கள் வாக்கு ரகசியமாக இருக்கும்.

  • எந்தவித இடையூறும் இன்றி நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை மத்திய பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர்,

  • எனவே தயக்கமின்றி வாக்களியுங்கள்.

  • ஓட்டுச்சாவடியில் நுழைந்த பின் ஓட்டு போட விரும்பாவிட்டால், 1961ம் ஆண்டு தேர்தல் நடத்தும் விதி 49 Oவின் படி படிவம் 17(A)ல் பதிவு செய்ய வேண்டும்.

  • ஓட்டுச்சாவடியில் உள்ள இந்த படிவத்தை கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

சிதம்பரம் பகுதியில் 2 ஆயிரம் பேர் மனநல நோயால் பாதிப்பு - மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் தகவல்

சிதம்பரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனநல நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் கூறினார்.

விழிப்புணர்வு நாள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் உலக மனநல குறை விழிப்புணர்வு நாள் நடந்தது. மொழியியல் கழக துணை தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். முனைவர் லலிதா ராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சிக்கு மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக அளவில் 6 கோடியே 70 லட்சம் பேர் மன வளர்ச்சி குன்றிய நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மன நலம் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோய் இருப்பது அவர்களுக்கோ, அவர்களின் பெற்றோருக்கோ தெரிவதில்லை. இதனை போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பெறுவது அவசியம். மனநல மருத்துவர், மொழியியல் ஆய்வாளர், உளவியலாளர் ஆகிய 3 பேரும் ஒருங்கிணைந்து இதனை போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் கூறினார்.

பயிற்சி அவசியம்

நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக மன நல மருத்துவப்பிரிவு தலைவர் காந்திபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், மனநல குறைபாட்டை நீக்க குழந்தை மருத்துவர், மனநல மருத்துவர் ஆகியோரின் பங்கு முக்கியம். இந்த நோய்க்கு மருந்தை விட விழிப்புணர்வு பயிற்சியே சிறப்பானது என்றார்.

இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சுதா நன்றி கூறினார்.

செவ்வாய், 31 மார்ச், 2009

ஓட்டு போட விருப்பமில்லையா...?படிவம் 49(o)வை பயன்படுத்தலாம்

ஓட்டுப் போட விருப்பமில்லாத வாக்காளர்கள், தங்களது ஓட்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க படிவம் 49(o) பயன்படுத்தலாம்.

லோக்சபா தேர்தலில் தகுதியுடைய அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் முக்கியமானது 49(o) படிவம்.

தங்களது தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியோ அல்லது நம்பிக்கையோ இல்லையெனில், ஓட்டுச் சாவடிக்குச் சென்று தங்களது ஓட்டுகளை மற்றவர்கள் போடாதவண்ணம் மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டுச் சாவடி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

இந்த படிவத்தை எப்படி, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சதவிகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது.

ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49(ஓ). வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

ஆனால் 49ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும் போது தவறாமல் 49ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

இயக்கம் தொடக்கம்:

'ஓ போடு பிரசார இயக்கம் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்கு சென்னை வடபழநி நூறடி சாலையில் தொடங்கியது.

'ஓ போடு. ஒட்டு போடு. எந்த வாக்காளரயும் பிடிக்காட்டி 49ஓ போடு. ஓட்டு போட தவறாதே' என்ற வாசகங்கள் அச்சிட்ட பனியன்களை அணிந்து கொண்டு, 49ஓவை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் வண்டிகளில் கொடுத்தபோது பல பொதுமக்கள், தங்கள் ஊரில் இன்னும் கொஞ்சம் பேரிடம் தரவேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.

ஓட்டு இயந்திரத்தில் 49ஓவை சேர்க்கச் சொல்லி வழக்குசென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞரும் 'தீம்தரிகிட' இதழின் சந்தாதாரருமான சத்தியசந்திரன், சென்னை உயர் நீதி மன்றத்தில் 49 ஓவை ஓட்டு இயந்திரத்திலேயே சேர்க்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடுத்த வழக்கு ஏப்ரல் 7 அன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 திங்கட்கிழமைக்குள் பதில் தரும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தேர்தலுக்கு மெஷினில் 49ஓவை சேர்க்க முடியுமா? நீதிமன்றம் உத்தரவிட்டால், தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் முடியும்.

இன்னமும் வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடங்கவில்லை. வேட்பு மனு பரிசீலனைகள் முடிந்தபிறகுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகிறது. அதன் பின்னர்தான் வேட்பாளர்கள் பெயர்களையும் சின்னத்தையும், ஒவ்வொரு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் ஏற்றுகிறார்கள். அப்போது கூடவே பட்டியலின் கடைசிப் பெயராக 49ஓவையும் ஏற்ற முடியும். இதற்கு தனி கணிணி செயல் ஆணை எதுவும் தயாரிக்கத் தேவையில்லை.

எங்கள் ஊருக்கு ஓ போடு பிரசாரம் வருமா?

49-ஓ போடு பிரசாரத்தை எங்கள் ஊரில் ஓ போடு இயக்கம் ஏற்பாடு செய்து நடத்துமா என்று பலர் கேட்டுள்ளனர். ஓ போடு இயக்கம் எல்லா ஊர்களிலும் கிளைகளும் அமைப்புகளும் உள்ள அரசியல் கட்சி போன்ற அமைப்பு அல்ல. தவிர இந்த பிரசாரத்தை வேறு யாரோ எங்கிருந்தும் வந்து நடத்தித் தரவேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் தங்களுக்கு இருக்கும் வசதியைக் கொண்டு தாங்களே செய்யலாம்.

ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க அதிகபட்ச செலவு 200 ரூபாய்தான். ஈ மெயில், எஸ்.எம்.எஸ் போன்றவற்றின் மூலமும் பரப்பலாம். பேருந்து, ரயில் பயணம், அலுவலகம், கடைத் தெரு, கல்யாண வீடு என்று எங்கெல்லாம் சக மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் 49ஓ பற்றி கருத்து பரிமாறலாம்.

இதையெல்லாம் செய்த பின்னர் முக்கியமாக, மே 8 அன்று தவறாமல் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டு போட வேண்டும். மேற்கண்ட எதையும் செய்ய அதிக செலவோ, கடும் உழைப்போ, அதிக நேரமோ ஆகப்போவதில்லை. ஓ போடுங்க.

நன்றி: http://keetru.com/ohpodu/index.php

சனி, 13 டிசம்பர், 2008

சிந்தனைக்கு: சிறுதுளி பெருவெள்ளம்.


சிறுதுளி தானே என்று அலட்சியமாகக் கருதி நமது வாழ்வியல் ஆதாரங்களான நீர், மின்சாரம்ஆகியவற்றின் சிற்றளவுகளை வீணடிப்பதால் ஏற்படும் இழப்பு குறித்த விழிப்புணர்வு - நமது முன்னாள் குடியரசுத்தலைவர் பார்வையில்....கணினியை முன்வைத்து.

(பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் சொடுக்குங்கள்)