வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தெரு, மர்ஹூம் ஹாஜி முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும், மெய்தீன் அப்துல் காதர், கேப்டன் ஹமீது அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் இவர்களின் சகோதரரும், ஹாஜி (எ) முஹம்மது அப்துல் காதர், செல்லத்தம்பி (எ) அஹமது மெய்தீன் இவர்களின் தந்தையும், அபுல் ஹசன் (சாதலி)யின் மாமனாருமாகிய ஹாஜி. ஷேக் அப்துல் காதர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது

மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் 9ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. 4,161 கள பணியாளர்கள், 681 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் ஒழுங்குமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 1871ம் ஆண்டு முதல் துவங்கி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 908 ஆண்களும், 11 லட்சத்து 34 ஆயிரத்து 487 பெண்களுமாக மொத்தம் 22 லட்சத்து 85 ஆயிரத்து 395 பேர் உள்ளனர்.

தற்போது 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் துவங்கி, 28ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் இப்பணிக்கு 4,161 களப்பணியாளர்களும், 681 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிந்து, மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 5 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக வரும் 6, 7, 8ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு ஏதுவான வரைபடம் தயார் செய்ய உள்ளனர்.

பின்னர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதில் படிவத்தில் உள்ள 29 கேள்விகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவர். அப்போது ஏற்கனவே விடுபட்ட வீடுகளின் விவரங்களையும் சேர்த்து செக்ஷன் 3 படிவத்தில் பூர்த்தி செய்வர்.

28ம் தேதி இரவு பஸ் நிலையம், கோவில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளவர்களின் விவரம் குறித்து கணக்கெடுக்கப்படும். இதன் பிறகு மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மறு ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் மார்ச் 6ம் தேதி அனுப்பப்படும். அதன் பின்னர் மார்ச் 21ம் தேதி மக்கள் தொகை குறித்த முழு விவரம் நாடு முழுவதும் வெளியிடப்படும்.

சேகரிக்கும் விவரங்கள்... :

  1. பெயர்
  2. குடும்பத் தலைவருக்கு உறவுமுறை
  3. இனம்
  4. பிறந்த தேதி
  5. திருமண நிலை
  6. திருமணத்தின் போது வயது,
  7. மதம்
  8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா
  9. மாற்றுத் திறனாளியா
  10. தாய்மொழி
  11. அறிந்த பிறமொழிகள்
  12. எழுத்தறிவு நிலை
  13. கல்வி நிலையம் செல்பவரா
  14. அதிகபட்ச கல்வி
  15. கடந்தாண்டு வேலை செய்தவரா
  16. பொருளாதார நடவடிக்கை வகை
  17. தொழில்
  18. தொழில் (அ) வியாபார நிலை
  19. வேலை செய்பவரின் வகை
  20. பொருளீட்டா நடவடிக்கை
  21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா
  22. பணிக்கு பயணம் செய்யும் முறை
  23. பிறந்த இடம்
  24. கடைசியாக வசித்த இடம்
  25. இடப் பெயர்ச்சிக்கு காரணம்
  26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்
  29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Source: Dinamalar

புதன், 2 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்ட பேரூராட்சிகளில் "கான்கிரீட்" வீடு கணக்கெடுப்பு பணி துவக்கம்

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி துவங்கப்படவுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரையுள்ள 5 ஆண்டு காலங்களில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக, குடிசை வீடுகள் கணக்கு எடுக்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகள் உள்ள குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.

ஒவ்வொரு பேரூராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரின் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ஒவ்வொரு வார்டு வாரியாகவும், வார்டில் உள்ள தெருக்கள் வாரியாகவும் மேற்கொள்ளப்படும்.

இந்த விரைவான கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிசையின் உரிமையாளர், வசிப்பவர்கள் பின்னணியில் குடிசை உள்ளவாறு குடிசையையும் சேர்த்து கணக்கெடுப்பாளர்களால் புகைப்படம் எடுக்கப்படவுள்ளது.

கணக்கெடுக்கும் பேரூராட்சி பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வருகை தரும்போது கணக்கெடுப்பு பணிக்கு தகவல்கள், ஆவணங்களை கொடுத்து கணக்கெடுப்பு முழு அளவில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar - Photo: MYPNO