சனி, 26 மார்ச், 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு!


தமிழக சட்டமன்றதுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல சமுதாய அமைப்புகளும்,இயக்கங்களும் அவரவர் சமுதாய சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில் முஸ்லீம் சமுதாய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து, இதை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்கண்ட கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம். என குறிப்பிடப்பட்டுள்ளதால் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சேலத்தில் நடந்த பொதுக் குழுவில் தி.மு.க குறித்து, ''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது'' எனக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றி இருந்தும், தி.மு.க அவ்வாறு ஏதும் சொல்லாத நிலையிலும் தற்போது தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இறப்புச் செய்தி

சின்னத்தெருவில் மர்ஹும் S.M. அபூபக்கர் அவர்களின் மகளாரும், A.குத்தூஸ் அவர்களின் மனைவியும், ஹாஜா, ஜமால் முஹம்மது, அஷ்ரப் அலி ஆகியோர்களின் சகோதரியும், பைஜல் முஹம்மது, ஹாஜா பக்ருதின், ஷபீக் அஹமது ஆகியோர்களின் தாயாருமான முஹம்மதா பேகம் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வெள்ளி, 25 மார்ச், 2011

பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்


தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் , இன்று காலை 11.30 மணியளவில் பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் - -தி.மு.கழக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த பின்னர் உரையாற்றிய ஸ்ரீதர் வாண்டையார், தான் இத்தொகுதிக்கு புதியவன் அல்ல, 7 தலைமுறைகளாக சிதம்பரம் பகுதியிலேயே வசிக்கிறதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இத்தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களை அவரவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டிய ஸ்ரீதர் வாண்டையார், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளி வாயிலில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், மாவட்ட தி.மு.க பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தி.மு.க.பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜாகமால், M.E.அஷ்ரப் அலி, நகர இளைஞரணி துணை அமைப்பாளார் வேலவன், தவ்ஹீத், ஜாபர், K.H.ஆரிபுல்லாஹ் S.O.S.ஆரிப்,அஜிஜுத்தீன்,அஜீஸ், G.M.கவுஸ், அப்துல் அஹத், அலி முஹம்மது -நாச்சியார்,பொற்செல்வி,முஸ்லிம்லீக் நகர தலைவர் பஷீர் அஹமது, கவுஸ் ஹமீது ராஜா, கியாசுதீன், கலிக்குஜ்ஜமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் முடிவண்ணன், நகர தலைவர் முருகன், சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீது கவுஸ், சேக் அப்துல் காதர், வாப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.