திங்கள், 27 மே, 2024

பரங்கிப்பேட்டையில் சுற்றுச்சூழல் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு வரும் கிரஸண்ட் நழ்வாழ்வு சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு ஓவியப்போட்டி நேற்று (26-05-2024) காலை BMH நினைவு ஷாதி மஹாலில்  நடைபெற்றது. பரங்கிப்பேட்டை தழுவிய இப்போட்டியில் ஏராளமான மாணவமாணவியர் பங்கேற்றனர்.

 

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர்  குலாம் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, செயலாளர் நூர் அலி முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் முஹம்மது வலீத் வரவேற்றார்

 


இந்த ஓவியப்போட்டியில்  முதல் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  வஸீலா இக்பால் அலி, உள்ளிட்ட பரிசு பெற்ற அனைவருக்கும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.. பாண்டியன் பரிசு - பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

பரங்கிப்பேட்டை கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பாக போட்டியில் பங்கேற்ற  மாணவமாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

 விழாவில் கிரஸண்ட் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹசன், தாரிக் உசேன், ஷேக் நெய்னா உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் நன்றி கூறினார்.

 

Image Credit: Raja-6311

செய்தியாளர்: ஹாஸியா

 

வியாழன், 14 மார்ச், 2024

பரங்கிப்பேட்டையில் அரசு விழா அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், ணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, மாவட்ட  சிறுபான்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை கடந்த 12.03.2024 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது








இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,  சார் ஆட்சியர்  ராஷ்மி ராணிதாசில்தார் தனபதிபரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ், கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து.பெருமாள், கடலூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சங்கர்,  செயல் அலுவலர் திருமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷரீப்மாரியப்பன்உட்பட பலர் பங்கேற்றனர்சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (13.01.2023) சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, "பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு பதிவு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே, இந்த கட்டிடத்தையும் புதிதாக கட்டித் தரப்படுமா?" என்று சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துணைக் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, "புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்நிலையில் இந்த அரசு நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்:  ச.வ

புதன், 21 பிப்ரவரி, 2024

இறை அழைப்பை ஏற்ற ஆளுமைகள்!

 


பரங்கிப்பேட்டையில் அண்மையில் மூன்று நபர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று இருக்கிறார்கள். அந்த மூவருமே இந்த சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

N.முஹம்மது ஷஃபி : 17-02-2024
கல்வியின் மேன்மை அறிந்த, கல்வித்துறையில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக, பேராசிரியராக, தலைமையாசிரியராக , ஆசிரியராக, ஆசிரியையாக தங்களின் பங்களிப்பினை நல்கிய குடும்பத்தில் இருந்து ஆசிரியராக பணியாற்றியவர் NMS சார் என்றழைக்கப்பட்ட வேதியியல் ஆசிரியர் N.முஹம்மது ஷஃபி அவர்கள். ஊர் பொதுமக்களால் ஷஃபி வாத்தியார் என்றழைக்கப்பட்டார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பரங்கிப்பேட்டையில் தொடங்கப்படாத அக்காலத்தில், பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தினார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் இன்று வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல பொறுப்பான பதவியில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு வேதியியல் துறை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி, பின்னர் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

G.M.நெய்னா மரைக்காயர் : 20-02-2024
தலைமுறை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் என்றாலும் இப்போதைய சமூக வலைத்தள காலகட்டத்தில் அது மிகவும் அதிகரித்து பெரியவர்களுக்கும் - இளைஞர்கள் / வாலிபர்கள் இடையே நீண்ட தூரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் அதை களையும் விதமாகவும், இளைய சக்திகள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்ற நன்நோக்கிலும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (SSA) கால்பந்தாட்ட கழகத்தினை உருவாக்கி மாநிலம் தழுவிய பல்வேறு அணிகளை கொண்டு அவ்வப்போது போட்டிகளை நடத்தி பரங்கிப்பேட்டையின் அடையாளங்களாக கருதப்பட்டு வரும் வரிசையில் பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து, கால்பந்து விளையாட்டையும் இணைத்தது G.M.நெய்னா மரைக்காயர் அவர்கள்.
மீராப்பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான நெய்னா மரைக்காயர், நோன்பு காலங்களில் குறிப்பாக கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவு தொழுகையில் மீராப்பள்ளி நுழைவாயிலில் நின்று தொழுகைக்கு வருவோரை அத்தர் மணம் பூசி வரவேற்பார்.
இவர் தனது இளமைக்காலத்தில் சாபுர் தைக்கால் என்று அழைக்கப்படும் காட்டாணை தர்காவில் உடற்பயிற்சிக்கு உரிய சாதனங்களை நிறுவி தனது சக வயது நண்பர்களை ஒருங்கிணைத்து உடற்பயிற்சி, குத்துச்சண்டை, கராத்தே போன்றவற்றை கற்றறிவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பதை இன்று அவர் வயது பெரியவர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தபோது அப்போதைய நினைவலைகளை பகிர்ந்தனர்.

A.R.ஷேக் இப்ராஹிம் : 20-02-2024
பரங்கிப்பேட்டையில் தப்லீக் ஜமாஅத்தின் அமீராக அறியப்பட்ட A.R.ஷேக் இப்ராஹிம் அவர்கள் நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இளைஞர்களை - பெரியோர்களை தொழுகையின் பக்கம் அழைப்பவராகவே இருந்தார்.
மீராப்பள்ளி மதரஸா வளர்ச்சி, மீராப்பள்ளி நிர்வாகத்திற்குரிய ஆலோசனைகள் தொடர்பான பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியவர்
எப்போதும் பள்ளிவாசல் உடன் தொடர்பிலிருந்து வந்த இவர் மிக அண்மைக்காலம் வரை தனக்கு கடமையான ஒவ்வொரு நேரத்தொழுகையினையும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதையே வழக்கமாக கொண்டு தொழுகையின் முக்கியத்துவத்தை வயது முதிர்ந்த இக்காலத்தில் தன் செயலால் சமகாலத்தில் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
இறை அழைப்பினை ஏற்ற இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருளட்டும்.
குடும்பத்தினருக்கு MYPNO தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.