வியாழன், 20 ஜூன், 2024

சூறைக்காற்று - சூரரைப் போற்று..!

பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18-ஜூன்-2024) மாலை சூறைக்காற்றும், மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19-ஜூன்-2024) மாலை சுமார் 7 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய தூறலான மழை பெய்தது, இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் பல இடங்களில் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுசில தெருக்களில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது,  பரங்கிப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டும், தாழ்வாக தொங்கிய வகையிலும் இருந்தது. ஒரு இடத்தில் மின்சாரக் கம்பம் இரு பகுதியாக முறிந்து காணப்பட்டது.

 


பலத்த சூறைக்காற்றின் காரணமாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு பரங்கிப்பேட்டை நகரம் இருளில் மூழ்கியது, கும்மத்பள்ளி தெரு, தீத்தா முதலியார் தெரு, கடற்கார பாவா சந்து, ஜுன்னத் மியான் தெரு, அண்ணா நகர்,  உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் முற்றிலும் வீழ்ந்த மரங்களையும், கிளைகளையும் இளைஞர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.  

 


பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முட்களை அகற்றி பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது போன்ற அறம் சார்ந்த விஷயங்களை வாழ்வியலில் ஒரு அங்கமாக ஆக்கி கொள்ள வேண்டுமென்ற இஸ்லாமிய நெறிமுறைகளுற்கேற்ப பல்வேறு தெருக்களில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்திய இளைஞர்களின் சமுதாய பங்களிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

 


இருளில் மூழ்கிய பரங்கிப்பேட்டையை மீட்டெடுக்க நகரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மின்சார இணைப்புகளை சரிபார்த்து பல பகுதிகளுக்கு இரவே மின்சார விநியோகம் செய்திட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பரங்கிப்பேட்டை அலுவலர்கள்ஊழியர்கள் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

படங்கள்:  நன்றி - பரங்கிப்பேட்டை வாட்ஸப் குழுமங்கள்




திங்கள், 27 மே, 2024

பரங்கிப்பேட்டையில் சுற்றுச்சூழல் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு வரும் கிரஸண்ட் நழ்வாழ்வு சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு ஓவியப்போட்டி நேற்று (26-05-2024) காலை BMH நினைவு ஷாதி மஹாலில்  நடைபெற்றது. பரங்கிப்பேட்டை தழுவிய இப்போட்டியில் ஏராளமான மாணவமாணவியர் பங்கேற்றனர்.

 

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர்  குலாம் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, செயலாளர் நூர் அலி முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் முஹம்மது வலீத் வரவேற்றார்

 


இந்த ஓவியப்போட்டியில்  முதல் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  வஸீலா இக்பால் அலி, உள்ளிட்ட பரிசு பெற்ற அனைவருக்கும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.. பாண்டியன் பரிசு - பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

பரங்கிப்பேட்டை கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பாக போட்டியில் பங்கேற்ற  மாணவமாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

 விழாவில் கிரஸண்ட் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹசன், தாரிக் உசேன், ஷேக் நெய்னா உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் நன்றி கூறினார்.

 

Image Credit: Raja-6311

செய்தியாளர்: ஹாஸியா