வெள்ளி, 8 ஏப்ரல், 2011

சிதம்பரம் தொகுதிக்கு கூடுதல் துணை ராணுவ பாதுகாப்பு தேவை! மா.கம்யூ வேட்பாளர் கோரிக்கை


சிதம்பரம் சட்டசபை தொகுதியை பதட்டமானதாக அறிவித்து கூடுதல் துணை ராணுவ பாதுகாப்பு போட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு மா.கம்யூ., வேட்பாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கடந்த 31ம் தேதி பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் ஓட்டு சேகரிக்கச் சென்ற போது பிரச்னை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துபெருமாள், அவரது தம்பி முடிவண்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கொத்தட்டைக்கு சென்று காண்டீபன், தாமோதரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலையீட்டால் நடவடிக்கை துரிதப்படுத்தாமல் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பதட்டமாகவே உள்ளது.

மேலும் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் வன்முறை சம்பவங்கள் நடத்தி வாக்காளர்களை அச்சுறுத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்து, அடியாள் பலத்துடன் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. எனவே சிதம்பரத்தை பதட்டமான தொகுதியாக அறிவித்து கூடுதலாக துணை ராணுவ பாதுகாப்பு போட வேண்டும். கொத்தட்டை கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துபெருமாள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

தின மலர் செய்தி

வியாழன், 7 ஏப்ரல், 2011

பாலகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்கும் ம.ம.க.!

 பரங்கிப்பேட்டை: அ.தி.மு.க. கூட்டணியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் மா.கம்யூ வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பரங்கிப்பேட்டை நகர மனித நேயமக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
 மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜாகிர் ஹூசைன், நகர செயலாளர் நூருல் பிலாலுதின், த.மு.மு.க. செயலாளர் ஹசன் அலி, பொருளாளர் சையது மரைக்காயர், நகர து.தலைவர் ஹாஜி நூர்அலி மற்றும் ம.ம.க. தொண்டர்களும் கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

புதன், 6 ஏப்ரல், 2011

தி.மு.க.- பா.ம.க. மோதல்: பிரச்சனையை சரிகட்டினார் வேட்பாளர்!

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க, நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், வேட்பாளரே நேரடியாகச் சென்று அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார்.  சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். கடந்த, 1ம் தேதி, கொத்தட்டை கிராமத்தில், ஸ்ரீதர் வாண்டையார் ஓட்டு கேட்க சென்ற போது, தி.மு.க., சேர்மன் முத்து பெருமாள், பா.ம.க., நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவில்லை. இதனால், பா.ம.க.,வைச் சேர்ந்த காண்டீபன், தாமோதரனும் சேர்மன் முத்து பெருமாளை நெட்டித் தள்ளினர். தகவல் அறிந்த முத்து பெருமாளின் தம்பி, பா.ம.க.,வைச் சேர்ந்த முடிவண்ணன், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினருடன் கொத்தட்டைக்குச் சென்று, காண்டீபன், தாமோதரனையும் தாக்கினர்.  இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இப்பிரச்னையால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு இடையே, "ஈகோ' தலை தூக்கியது. மேலும், கொத்தட்டை உட்பட சில இடங்களில் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஓட்டு வங்கி குறையும் சூழல் நிலவியது. உளவுப் பிரிவின் அறிக்கையைத் தொடர்ந்து, வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கொத்தட்டை கிராமத்திற்குச் சென்று காண்டீபன், தாமோதரனை சந்தித்து ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். இதேபோல், அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியாக கவனிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெறச் செய்ய ஆளும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதால், உளவுப் பிரிவு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.