சனி, 7 மே, 2011

பரங்கிப்பேட்டையில் மாலை 4 -6 நல்ல நேரம்!

பரங்கிப்பேட்டை: கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் மண்டையை பிளக்கும் இந்த நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் ஒரு பக்கம் கடையடைப்பு, போராட்டம் என்று நடந்து கொண்டிருக்க பரங்கிப்பேட்டையிலோ மே மாதம் முதல் தேதியிலிருந்து மின்வெட்டே இல்லாத நிலை; 24 மணி நேரமும் தொடர் மின் வினியோகம் இருப்பதை எந்த அதிசயத்தில் சேர்ப்பது என்ற தெரியவில்லை. 

ஒருவேளை பரங்கிப்பேட்டை மின்சார வாரியத்தின் கடுமையான அலட்சியப்போக்கினால் அறிவிக்கப்பட்ட தினசரி மின்வெட்டை மறந்து போய்விட்டார்கள் போலும் என்று விசாரித்தால் விசயமே வேறு.

ஏற்கனவே அறிவிக்கப்ட்டது போன்று, மே மாதம் தினசரி மின் நிறுத்த நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மின்சாரம் இதே நேரத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்ற இதே நேரத்தில் தான் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே, இந்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்வதில் பிரச்சினைகள் இருப்பதினாலும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரத்தை மாற்ற முடியாத காரணத்தினாலும் இந்த மாதம் முழுவதும் பரங்கிப்பேட்டையில் தடையற்ற மின்சார வினியோகம்  இருக்கும்.

ஆனாலும், திருவாளர் பொதுஜனமோ ஏதோ நேத்து வரைக்கும் மறந்துட்டாங்க, இன்னைக்கு எப்படியும் எடுத்துடுவாங்க என்கிற நம்பிக்கையில் தினம் தினம் ஏமாற்றம் கலந்த ஆனந்தத்தில் மின்சார வாரியத்தின் கோடைகால பரிசை பெற்றுக் கொள்ள தவறவில்லை.

பரங்கிப்பேட்டையில் 102...!

தமிழகத்தில் 9 ஊர்களில் வெள்ளிக்கிழமை வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் மதிய வேளைகளில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியுள்ளது. 


வெப்பத்தை சமாளிக்க சாலையோர தர்பூசணி கடைகளையும், இளநீர் கடைகளையும் மக்கள் அதிக அளவு நாடி வருகிறார்கள். மாநிலத்தின் இதர முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):  திருநெல்வேலி, வேலூர் 105, சென்னை, நாகப்பட்டினம், காரைக்கால், பரங்கிப்பேட்டை 102, கடலூர், தஞ்சாவூர் 100, மதுரை, திருச்சி 99, கன்னியாகுமரி 97, தூத்துக்குடி, தருமபுரி 95. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் சனிக்கிழமை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


வெள்ளி, 6 மே, 2011

அட்சய திரிதியையும் வியாபார யுக்திகளும்!

நம் மக்களுக்கு அளவு கடந்த ஆசையில் வரும் மோகத்திற்கு என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை! இதற்க்கு நம் கண் முன்னே பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன! கொஞ்சம் சமீபமாக பார்த்தோமானால் இந்த அட்சய திருதியை! இதை வைத்து ஒரு கூட்டம் மேலும் மேலும் பொருள் சேர்க்க... இன்னொரு பக்கம் கடனாளி ஆகும் நடுத்தர வர்க்கம்!

ஆரம்பகாலம் தொட்டே நம் இன பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம் வளர்ந்துகொண்டேதான் வருகிறது! இதை சரியாக பயன்படுத்திகொண்ட வியாபார உலகம் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே வரும் என்று கொளுத்திப்போட.. அது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகிறது!

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இப்போது ஒரு ஜோதிடர் சொல்லுகிறார்.. அட்சய திருதியை அன்று பிளாட்டினம் வாங்கினால் நல்லது என்று! இது தங்கத்தை விட விலை அதிகம்! அவர் சொல்லுவது அன்றைய தினம் வெண்மை நிறம் கொண்ட பொருள் வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது..இதுதான் அன்றைய நாளின் சிறப்பு! அது ஏன் பாலாக... உப்பாக.. தயிராக இப்படி விலை குறைந்த பொருளாக இருக்கக்கூடாது?.. இதையெல்லாம் விளம்பரப்படுத்தினால் வியாபாரிகளின் நிலைமை என்னாவது? அதனால்தான் முதலாளிகளும் ஊடகங்களும் இதுபோன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து தங்கம் பிளாட்டினத்திர்க்கு மட்டும் வெளிச்சம் போடுகின்றன!
 
பணம் இருப்பவர்கள் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்.. இல்லாதவர்களுக்கு இதைப்பற்றி கவலையும் இல்லை! ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் இதனால் படும் திண்ட்டாட்டம் இருக்கிறதே.. அது சொல்லிமாளாது.. விளம்பரங்கள் எதைசொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல் கொஞ்சம் யோசித்தோமானால் இதில் உள்ள முட்டாள்தனம் நமக்கு புரிபடும்!

டிப்ஸ்: கழுகு