வெள்ளி, 26 ஜூலை, 2013

லயன்ஸ் கிளப் சார்பில் நடைப்பெற்ற இஃப்தார் விருந்து!





பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழச்சியை  தொடர்ந்து பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பும் நடைப்பெற்றது.

இதில், புதிய நிர்வாகிகளாக ஏ.கே.டி. அன்சாரி தலைவராகவும் என். கனேஷ் செயலாளராகவும் ஜி. மனோகரன் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டு பணியேற்றுக் கொண்டனர்.  பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் அரசு பெண்கள் பள்ளிக்கு குடி தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கப்பட்டது. மேலும் பரங்கிபேட்டை பள்ளிகளில்  படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு  கேடயமும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற  துப்புரவு பணியாளர்களுக்கு  ஆடைகள் வழங்கப்பட்டது.

வியாழன், 25 ஜூலை, 2013

ரூ. 10 கோடி செலவிட்டும் பரங்கிப்பேட்டை வெள்ளாற்று முகத்துவாரம் பாழ்!



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் 10 கோடி ரூபாய் செலவில் ஆழப்படுத்தப்பட்ட வெள்ளாற்று முகத்துவாரம், பராமரிப்பின்றி தூர்ந்துபோனதால் 30க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரங்கிப்பேட்டை வத்தக்கரை, வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக பரங்கிப்பேட்டை, முடசல்ஓடை, கிள்ளை, எம்.ஜி.ஆர்., திட்டு,  சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் வெள்ளாற்று முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துபோவதால், பரங்கிப்பேட்டை, கிள்ளை கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த வேண்டும் என, 20 ஆண்டுகளாக 30 கிராம மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடி ரூபாய் மதிப்பில், திட்டமிட்டு ஆறு மாதங்களுக்கு முன் வெள்ளாற்று முகத்துவாரம் ஆழப்படுத்தப்பட்டு,விசைப்படகுகள், பைபர் படகுகள், லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் சென்று வந்தன.
இந்நிலையில், முகத்துவாரம் தற்போது மீண்டும் தூர்ந்துபோனதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளாற்று முகத்துவாரத்தில் நீரோட்டம் அதிகமுள்ள நேரங்களில் அனைத்து வகையான படகுகளிலும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவர். கரைக்குத் திரும்பும்போது முகத்துவாரத்தில் பெரும்பாலான படகுகள் சிக்கிக் கொள்கின்றன. சிக்கிய படகுகளை வேறு படகு மூலம் கயிறு கட்டி மீட்பதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது மணல்மேடுகள் அதிகமாக உருவாகி முகத்துவாரம் முற்றிலுமாக தூர்ந்து போய் விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக விசைப்படகுகள், கட்டுவலை படகுகள் கடலுக்குச் செல்ல முடியாமல், முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை வத்தக்கரை கடற்கரையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி குறைந்துவிட்டது.
தற்போது லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகளில் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். எனவே, வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30 கிராம மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், டிரஜ்ஜர் மூலம் ஆழப்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால்தான் கடந்த ஆறு மாதத்திற்குள் முகத்துவாரம் மீண்டும் தூர்ந்துபோய்விட்டதாகவும், 10 கோடி ரூபாய் பாழாகி விட்டதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். முகத்துவாரத்தை ஆழப்படுத்தியது குறித்து மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சிங்கப்பூரில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!













சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் நேற்று மாலை சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசல் கூட்ட அரங்கில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, ஹமீது கவுஸ் இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ்.முஸ்தபா கமால் அனைவர்களையும் வரவேற்றார். .

பென்கூலன் பள்ளியின் இமாம் அப்துல் கையூம் பாகவி தனது உரையில், “சுயநலத்தை அடியோடு வேரறுத்து, உளத்தூய்மையுடன்  செய்யப்படும் பணிகள் மட்டுமே வெற்றி பெறும், சமுதாய நலன், ஊர் நலனுக்காக இதுப்போன்ற கட்டமைப்புகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “ ஒருங்கிணைப்பு என்பது உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது அல்ல, உள்ளங்களை ஒருங்கிணைப்பதே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற அமர்வில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.ஜியாவுதீன் அஹமது, கடந்த 2002 ஆ,ம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வமைப்பின் கல்வி, மருத்துவம், குர்ஆன் மக்தப் உள்ளிட்ட செயல்பாடுகளை சுருக்கமாக விவரித்தார்.

இறுதியில் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஹெச்.தாரிக் ஹுஸைன் தலைமையில், பொருளாளர் எம்.ஜி.கமாலுத்தீன், எஸ்.ஜியாவுதின் அஹமது, கே.அன்வர் ஹஸன், ஹெச்.அப்துஸ் ஸலாம், ஜி.மரக்கச்சி மரைக்காயர், யூசுப் ரியாஸ், என்.ஹபீபுல்லாஹ், ஐ.ஹபீபுல்லாஹ், எம்.முஹம்மது யாஸிர்,  ஹாஜா பக்ருத்தீன், பி.நூர் அலி அப்பாஸ், ஐ.தாரிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 70 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

படங்கள்: ஹெச்.முனவர் ஹுஸைன்