ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஈத் மிலன் விழா! மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!!

ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாயத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் மனிதநேய விழாவும், மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும் மீராப்பள்ளித் தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றன.
 
நிகழ்ச்சியினை M.H. கபீர் அஹமது மதனி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர் K.V.S  ஹபீப் முஹம்மது அவர்களும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் M. அப்துஸ் ஸமது மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K. பால கிருஷ்ணன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
மாற்று மதத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல் பரிசும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன.  வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது .
 
விழாவினை  நிகழ்ச்சி அமைப்பாளர் L. ஹமீது மரைக்காயர்  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.








வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். அமைக்குமா..?!



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளில் ஈடுபடாத ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் ஏ.டி.எம் நிறுவியுள்ளனர். இதில் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். சமீப காலமாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ஏ.டி.எம் சேவை இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வியப்பினையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இது குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பதே பதிலாக கிடைத்தது. தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாமல் கருத்து தெரிவித்த  வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,"வங்கியுடன் இணைந்தவாறு (ON SITE) இயங்கும் வகையில் செயல்படக்கூடிய ஏ.டி.எம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை அமைப்பதற்கான இடப்பற்றாக்குறையின் காரணமாகவே இப்பணியில் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.  

ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வங்கி அலுவலகத்தோடு இணையாமல்  தனியாக (OFF SITE) ஏ.டி.எம்  அமைத்து முன்னோடியாக வழிகாட்டியுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி உடனடியாக ஏ.டி.எம் அமைக்க வேண்டும் என்பதே பரங்கிப்பேட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு அதற்கேற்ப வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்களும்  இந்தியன் வங்கி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.


MYPNO.COM  செய்திக்காக  ஹம்துன் அப்பாஸ்
படங்கள்: ஹஸன் அலி

புதன், 28 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை..!

பரங்கிப்பேட்டை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சத்திரம் அருகே பெத்தாங்குப்பம், கம்பளிமேடு, சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 17 நான்கு சக்கர வாகனங்கள், 45 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய வாகனங்களுடன்  தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையொட்டி இன்று காலை பரங்கிப்பேட்டை குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  முன்னிலை ஆனார்.  பின்னர்  இவ்வழக்கு விசாரணையை 3-9-2013-க்கு ஒத்திவைத்து நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.



முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவதையொட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து பெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்,  நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார், புவனகிரி ஒன்றிய தி.மு.க.செயலாளர் , வி.என்.ஜெயராமன், கிள்ளை ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கோமு, வேலவன், ஆரிபுல்லாஹ்,ஜி.எம்.கவுஸ்,மாயகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் திரண்டதால் பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.