மீராப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீராப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி குளத்தின் மேற்கு கரை சரிவு

பரங்கிப்பேட்டை:

கடந்த ஆண்டு மழையின்போது மீராப்பள்ளி குளத்தின் மேற்கு கரையில் ஏற்பட்ட சரிவு தற்போது இன்னும் அதிகரித்து மோசமான நிலையில் உள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இது கரையை ஒட்டியிருக்கும் நடைபாதையும் சரியும் அபாயம் உள்ளது.

எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்பே இதை மீராப்பள்ளி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இல்லையெனில் சேதம் இன்னும் அதிகமாகவே ஆகும்.

சனி, 26 ஏப்ரல், 2008

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம், மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

ஞாயிறு, 30 மார்ச், 2008

மெருகேறும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி



காலசூழல்களுக்கேற்பவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் சுற்று முழுவதும் தரமான இரும்பு கிரில் கேட்கள் அமைக்க ஜும்ஆவில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் அழகிய முறையில் அமைக்கவும் பட்டது. தற்போது மஸ்ஜிதின் முன்புறம் மழை / வெயில் கருதி சிமெண்ட் ஷீட் கொண்டு சிறிது தூரம் கூரை அமைக்கப்பட்டுள்ளது. பெருநாள் போன்ற மக்கள் அதிகம் கூடும் தினங்களில் இது மிகவும் வசதியாக அமையும். மீராப்பள்ளி சம்பந்தப்பட்ட வளர்ச்சி பணிகள குறை கூறும் அபத்த போக்கு முன்பு சிலரிடம் காணப்பட்டது. இறையில்லத்தை பரிபாலனம் செய்வது, எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவற்றை விஸ்தீரணம் செய்வது போன்றவை இயல்பாகவே மஸ்ஜித் நிர்வாகத்தின் பணிகளாகும். பேரூராட்சியின் மயான மேம்பாடு திட்டத்தினை பயன்படுத்தி கபுருஸ்தானை ஒழுங்கமைத்தது, பெரும்பாலும் எங்குமே இந்தளவு உருப்படியாக காணக்கிடைக்காத குளத்தினை பராமரித்து வருவது போன்ற பாராட்டத்தக்க விஷயங்கள நிர்வாகம் தொடர்ந்து செய்துதான் வருகிறது. அதனை பாராட்டாமல் இருந்தாலும் சரி, குறை சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், இப்படி வளர்ச்சி பணிகள முன்னெடுத்து செல்லும் மீராப்பள்ளியை குறை சொல்பவர்கள், பல பத்து வருடங்களாக இருந்தது போலவே இருந்து வரும் சில பள்ளிகள் குறித்து ஏன் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லை பேசுவதில்லை என்பது புரியாத புதிர்தான்.

திங்கள், 24 மார்ச், 2008

மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு


பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்

சனி, 1 மார்ச், 2008

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் பொதுக்குழு கூட்டம்.

நேற்று வெள்ளிக் கிழமை (ஜூம்ஆ) தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் நிர்வாகிகள் பங்கேற்று பேசி கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்கள்.

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி பரிபாலன சபையின் சட்டதிட்டங்கள் 1957-ல் ஏற்படுத்தப்பட்டது, தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரணத்தினாலும், வஃக்பு வாரியத்தில் அதனை பதிவு செய்யப்படாத காரணத்தினாலும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய ஆலோசனைப்படி நமது மீராப்பள்ளி மற்றும் அல்மதரஸத்துல் மஹ்மூதியா நிர்வாகத்திற்காக நிர்வாக செயல் திட்டங்கள், சட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு தங்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
பொதுமக்களாகிய தாங்கள் இவற்றை பார்வை செய்து சட்ட வரைவுகளில் ஏதேனம் திருத்தங்கள் செய்யவேண்டுமென்றால் தங்களது அரிய ஆலோசனைகளை இச்சட்ட வரைவு வெளியிட்ட 15-தினங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சனி, 16 பிப்ரவரி, 2008

'சமரசம் உலாவும் மயானத்தில்' இடஒதுக்கீடு?

Image source: MobileCam (poorQuality)
'சமரசம் உலாவும் இடமே' என்று சமத்துவத்திற்கு உதாரணமாக எல்லா காலத்திலும்-இனத்திலும் எடுத்துக் காட்டப்படுவது மயானங்கள் தான். எல்லோருக்குமே, யார் எவர் என்ற பாகுபாடின்றி ஆறடி மண்ணே அங்கு இருப்பிடமாகிறது.
நமதூர் பரங்கிப்பேட்டையின் மீராப்பள்ளி மயான பூமி சீரமைப்பிற்காக அண்ணா மறுமலர்சி திட்டத்தின்படி சுமார் 1.75 இலட்சம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி. ஒரு பள்ளிவாசல் மயான சீரமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதுவே முதலமுறை. (இதற்கு முன்னர் கோவில்கள், தேவாலயங்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது). நிதி ஒதுக்கியது மட்டுமல்லாமல் மளமளவென சீரமைப்பு வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.


புதிய சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டு, மின் விளக்கு கம்பங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டு, சுற்று சுவர்களும் மேடு பள்ள சீரமைப்புகளும் முழுவேகத்தில் நடைபெறுகின்றன. இந்த வேகத்தில் நிழல் தந்த மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டது வருத்தத்திற்குரியது தான். ஆனால் மயான சீரமைப்புக்கு மரங்களையும் சாய்க்கப்பட்டேயாக வேண்டும் என்றிருக்கும் நிலையில் ஆட்சேபத்திற்கு வழியில்லை தான். அதே சமயம், ஆங்காங்கே சில 'குடும்ப' கோரிகள் என்ற பெயரில் மய்யித்துக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் - அதுவும் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றது. அவற்றையும் நிரவி சமன் செய்தால் நன்றாக இருக்குமே என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

திங்கள், 28 ஜனவரி, 2008

தடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்

தடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளியின் கபரஸ்தான் மேம்படுத்துதல் மற்றும் மின்விளக்குகள் அமைத்தல் என்கிற திட்டப்பணி தொடங்கியதுப்பற்றி ஜனவரி 8 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தோம். அதன்பிற்கு ஆரம்ப பணி சிலரின் சூழ்ச்சியால் தடைப்பட்டு நின்றது. இந்த தடையை ஏற்படுத்த நினைத்தவர்கள் கோர்ட் வரை சென்று ஸ்டே கேட்டு மனு செய்திருந்தனர். ஆனால் அந்த ஸ்டே மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக தற்போது இத்திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படம்: காஜியார் தெரு, காஜியார் சந்தின் கேட்லிருந்து பாதை போடும் பணி

புதன், 9 ஜனவரி, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.


அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மீராப்பள்ளி மயானம் (கபர்ஸ்தான்) மேம்படுத்துதல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1.75 லட்சம் ஆகும். இத்திட்டம் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிடைக்க பேரூராட்சி தலைவர் திரு. யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செவ்வாய், 8 ஜனவரி, 2008

மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

ஊரில் கடந்த வாரம் வரை பெய்த பருவமழை காரமாக மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு குளத்தில் குளிக்க நிறைய பேர் வருகின்றனர்.

நீச்சல் தெரிந்த சிறுவர்கள் தங்களின் திறமையை காண்பிக்க மீராப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தின்மீதேறி டைவ் ஷாட் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துவதால் வழக்கம்போல் ஒரு சில நிர்வாகிகளின் குரல் அவ்வப்போது வலுக்கும். அதையெல்லாம் நம்ம பசங்க கண்டுகொள்வார்களா என்ன?