

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கிள்ளைளை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்மட்டபாலம் நேற்று திறக்கப்பட்டது. இத்திறப்புவிழா நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சேர்மன் முத்துபெருமாள், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய பாலத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:இங்கு பாலம் கட்டப்பட்டதன் மூலம் பரங்கிப்பேட்டை, கிள்ளை, பொன்னந்திட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். தமிழகத்தில் புதிய பாலங்கள் கட்டுவது தான் முதல் வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது.இந்த விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வைக் காணவில்லை. ஆனால் அழைப்பிதழில் பெயர் போடவில்லை என சட்டசபையில் பேசுகிறார்கள். பரங்கிப்பேட் டையில் இருந்து கிள்ளைக்கு செல்ல புவனகிரி வழியாக 22 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது 3 கி.மீ., தூரத்தில் கிள்ளைக்கு சென்று விடலாம்.கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடற்கரை கிராமங்கள் வழியாகவே இந்த பாலம் வழியாக பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு 30 நிமிடத்தில் சென்று விடலாம். கடந்த சுனாமியின் போது இந்த பாலம் இருந்திருந்தால் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது.கடலூர் மாவட்டத்தில் 743 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம், சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாலை வசதிகள் உள்ளதால் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் இங்கு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேம்படுவதுடன் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு செல்ல அரசு விரைவு பஸ் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாட்டில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 11 பாலங்கள் உள்ளது.இந்த ஆண்டு ரூ.250 கோடியில் 31 மாவட்டங்களில் 175 பாலங் கள் கட்டப்பட உள்ளது. 374 கோடி செலவில் 337 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைகள் போடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 4 பெரிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கலைஞர் ஆட்சியில் தான் அதிக அளவு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.வரு மானம் உள்ள துறையாக இல் லாமல் செலவு செய்யும் துறை யாக நெடுஞ்சாலை துறை உள்ளது.இந்த ஆண்டு நிதி ரூ.1725 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு 1137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ரூ.600 கோடி நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது என்றார்.
வாழ்த்துரை வழங்கிய பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவருமான முஹமது யூனுஸ், பரங்கிப்பேட்டை வரலாறு குறித்தும் இங்கு இருந்த வாணிபங்களையும் நினைவுபடுத்தியபோது, இங்கு துறைமுகம், இரும்புத் தொழிற்சாலை, ஜவ்வரிசி உற்பத்தி ஆலை, ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர்அலி போர் புரிந்தது ஆகியவைப் பற்றி அமைச்சர்கள் முன்னிலையில் பகிர்ந்துக் கொண்டார். இது இங்கு மீண்டும் கப்பல் துறைமுகத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற கோரிக்கைப் போன்றே இருந்து.
சேர்மன் முத்துப் பெருமாள் பேசும்போது, கடலூரிலிருந்து பிச்சாவரத்திற்கு பரங்கிப்பேட்டை வழியாக இந்த தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதல் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் துணை சேர்மன் செழியன், ஒன்றிய ஆணையர்கள் சந்திரகாசன், சந் தர், செயல் அலுவலர் ஜீஜாபாய், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, தி.மு.க., துணை செயலாளர் ராஜாராமன், நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலையரசன், வினோபா, மாவட்ட பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி கவுன்சிலர்கள் காஜாகமால், அருள்முருகன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், கொத்தட்டை ஊராட்சி தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
23.65 கோடி ருபாய் மதிப்பில் இந்தப்பாலம் பொலிவுடன் வெள்ளாற்றின் குறுக்கே அமையப் பெற்றதற்கு இதன் பிண்ணனியில் கணக்கிலடங்கா உழைப்புகள் மறைந்திருந்தாலும் அவற்றையெல்லாம் இங்கு பட்டியலிடுவது சாத்தியமற்றது.
இருப்பினும், சில நன்றிக்குரியவர்கள் நாம் இங்கு நினைவுகூர்வது அவசியமாகிறது.
1980 களில் கடலூர் நகரத்தில் நடைபெற்ற மாவட்ட மன்றக் குழு கூட்டத்தில் பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்க வெள்ளாற்றில் தொங்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார் அன்றை சட்டமன்ற உறுப்பினர் வி.வி. சுவாமிநாதன்.
அரசியல் கட்சியின் முக்கிய பதவியிலிருந்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வெள்ளாற்றுப் பாலத்திற்கு 1980 களிலிருந்து தொடர்ந்து பல கோரிக்கைகள், கூட்டங்கள், தீர்மானங்கள் என்று குரல் கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இஸட்.ஃபஜ்லுர் ரஹ்மான் (முன்னாள் மாநில பொதுச் செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம், தமிழ்நாடு).
இதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள், கோரிக்கைகள் என்று பல அரசு கதவுகளை தட்டியிருக்கிறார். இப்பாலம் அமையப்பெற 1999 மற்றும் 2000-வது ஆண்டுகளில் கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கமும் கூட்டாக இணைந்து செயல்பட்டுள்ளது.
05-11-2000 அன்று அன்று கிரஸணட் நல்வாழ்வு சங்கமும் கிழக்கு கடற்கரை வாழ் மக்கள் நலச்சங்கமும் இணைந்து, ஒரு முக்கிய கருத்தரங்கத்தினை மஹ்மூதியா ஓரியண்டல் பள்ளியில் நடத்தின. இதில் மதசார்பற்ற ஜனதாதள தலைவர் ஜி.ஏ. வடிவேலு மற்றும் சிதம்பரம் வட்டாச்சியர் எஸ் விஸ்வநாதன் கலந்துக்கெண்டனர். இந்த கருத்தரங்கத்தினை இஸட். பஜ்லுர்ரஹ்மானுடன் அன்றைய கிரஸண்ட் சங்கத் தலைவர் என்.ஹபீபுல்லாவும் ஏற்பாடு செய்ததில் மீடியாக்கள் மற்றும் அதிகார மையங்களின் காதுகளுக்கு எட்டின.
அதன் பின்னர் தொடர்ந்த ஃபாளோ-அப்ஸின் பயனாக 2006 ஆண்டு இறுதியில் பாலம் அமைவது உறுதி என்ற நிலைக்கு வந்தபிறகு ஒரு வழியாக அன்றைய தமிழக அரசினால் பாலம் கட்ட அனுமதி வழங்கப்ட்டது.
சுனாமிக்குப் பிறகு சில மறுமலர்ச்சித் திட்டங்களின் பயனாக மந்தமாக இருந்த திட்டப்பணிகள் உடனே துவங்கப்பட் வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகம் ஒலித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இத்திட்டப்பணி துவங்குவதற்கு எந்த தடையும் ஏற்படவில்லை; பணிகள் இன்னும் சூடு பிடித்தன. முந்தைய ஆட்சிக் காலத்தில் கோரப்பட்ட திட்டமதிப்பீடு மீண்டும் இன்னும் அதிகமாக்கி முறைப்படி துவக்கப்பட்டது.
சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களைத் தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களும் இதற்கு உறுதுணையாக இருந்தது. MYPNO வலைப்பூவிற்கு கொடுத்த செய்தியில் விரைவில் பாலப்பணிகள் துவங்கும் என்றார் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ். அதன்படி, 2008-ல் பணிகள் துவங்கியது. ஆரம்பத்தில் படுஜோராக பணிகள் துவங்கிளாலும் பருவமழை, வெள்ளம் மற்றும் சில காரணங்களால் அவ்வப்போது பணிகள் மந்தமடைந்தது. தற்போது அவற்றுக்கு அப்பாற்பட்டு இன்று அழகு பொலிவுடன் பொதுமக்களின் போக்குவரத்திற்காக தயாரகிவிட்டது.
நன்றிக்குரியவர்கள்:
இஸட். பஸ்லூர்ரஹ்மான், முன்னால் மாநில பொதுச் செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம், தமிழ்நாடுஎம்.எஸ். முஹமது யூனுஸ், பேரூராட்சித் தலைவர், பரங்கிப்பேட்டைசெல்வி ராமஜெயம், சட்டமன்ற உறுப்பினர், புவனகிரி தொகுதிகிழக்குகடற்கரை வாழ் மக்கள் நல்வாழ்வுச் சங்கம், கடலூர்கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கம், பரங்கிப்பேட்டைககன்தீப்சிங் பேடி, முன்னால் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கம்யூனிஸ்ட் கட்சி (இடது மற்றும் வலது)வெ. சாமிநாதன், நெடுஞ்சாலைதுறை அமைச்சர்இவையனைத்தும் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மட்டுமே. இதில் இன்னபிற முக்கியமானவர்களும் விடுபட்டிருக்கலாம். எனில், வாசகர்களாகிய தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் கருத்துக்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் இணைக்கலாம்.