ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன் இழை' கண்ணாடி குவளை குண்டு பல்புவின் தொடக்கம் தான் இன்று எல்.இ.டி என்னும் ஒரு மிகப்பெரிய ஒளிரும் சாதனத்தில் வந்து நிற்கிறோம்.  

இன்றைய நாகரீக உலகத்தில்  வெளிச்சம் உமிழும் நகரத்தை பகலாக உண்டாக்கும் எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அன்று 70-80 க்கும் மத்தியில் (நம் வயது, அனுபவத்தை பொருத்தவரை இதிலிருந்து தான் தொடங்க முடியும்) எந்த விளக்குகளிருந்து நாம் ஒளி பெற்று கடந்து வந்திருக்கிறோம் என்பதை சிறிதாக பார்ப்போமா?

முட்டை விளக்கு


பெயருக்கு ஏற்ற மாதிரி முட்டையின் தோல் போல் இருந்து கைகளிலிருந்து சிறிது தவறி விழுந்தாலும் கண்ணாடி சிம்னி உடைந்து போகும். மாற்று  வாங்குவதற்கு வீட்டில் ஏவி,  அலுப்பு ஏற்பட்டு அதன் பலனாக ஏச்சு,உதை வாங்கி பிறகு அந்த முட்டையை வாங்கிட்டு வருவோம். சிம்னி லேசாக உடைந்தால் பேண்டேஜ் போட்டு அது இன்னும் காலம் உழைக்கும். கைக்கு ஏற்ற காம்பாக்ட் விளக்கு மற்றும் மல்டி பர்போஸ்சும் கூட. ஒரு சில வீட்டில் மாடாக்குழியில் 24 மணி நேரமும் எரிந்துக் கொண்டே இருக்கும். ஒரே விளக்கு மஃக்ரிப் தொடக்கத்தில் வீட்டின் வெளிச்சத்திற்காக வைத்துக் கொள்ளலாம் இஷா தாண்டினால் விடி லைட்டாகவும், லைட்டாக(சிறிதாக) வைத்து உறங்க வைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுதில் இஷா முடிந்தால் சாப்பிட்டு தூங்கும் நேரம் தானே..!? இன்று கூட முட்டை விளக்கு இருக்கிறது மாடாக்குழிகள் தான் இல்லை.

கால் விளக்கு


அமுல் ஸ்பிரே பால் டப்பாவிலும் (காத்து மேலே, காத்து கீழே, காத்து சைடுலே.. அந்த 'பால் டப்பா' அல்ல😀) நெய் டின்னிலும் செய்து விற்பார்கள். அந்த சிறிய கொல்லம்பட்டறை சஞ்சீவிராயர் கோவிலிலும்,பெரிய கடை தெருவிலும் இருக்கும். தகரம் கொடுத்தும் செய்வோம், சிலசமயம் ரெடிமேடாகவும் வாங்கி வருவோம். கால் விளக்கு ஒன்றும் அதில் கால் இல்லாத அபூர்வ சகோதரர்கள் 'அப்பு கமல்' மாதிரி ஒரு விளக்கும் வாங்கி வருவோம். இதில் மண்ணெண்ணெய் ஊற்றி பழைய தாவணி, துப்பட்டி துணியை  திரியாக்கி ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் பிரகாசமாகும். இந்த விளக்கின் அப்டேட்டாக எவர்சில்வர், பித்தளையிலும் வந்தது. நம் வீட்டில் பித்தளையில் இருந்தது அதன் கால் உடைந்து பத்த வைப்பதும் பிறகு உடைந்து பத்த வைப்பதும் என  செத்து செத்து விளையாட்டு காட்டும்.

கால் விளக்கில் அனைத்திலும் சிறிதாக மண்ணெண்ணெய் வடிவது ஏன் என்று அன்று, புரியாத புதிராக இருக்கும்.

காண்டா விளக்கு

கடைகளின் காவலன்   கமர்சியல் நாயகன். நாட்டாமையின் மீசை போல பெரிய திரியும் தடித்த உடம்புக் கொண்டு அரை லிட்டர் மண்ணெண்ணெயை தன்னகத்தே தன் உடலில் வைத்திருப்பவன். வியாபார தளங்களில் நிறைவான வெளிச்சத்திற்காக இந்த விளக்கை தான் பயன்படுத்துவார்கள்.  ரோட்டுக்கடைகள் சந்தைகளில் அன்றைய வெளிச்சம் தரும் விளக்கு இதுதான். ஒரு சில மறைவான  உருட்டு சூது கடைகளிலும் இதுதான் இருந்தது.

அரிக்கேன் விளக்கு



விவசாயிகளின் நண்பன் வயல்வெளிக்கு செல்லும் போதும், நெடும் பயணத்திற்கும்  மாட்டு வண்டுகளில் ஓட்டுனர் சீட்டுக்கு கீழே மாட்டி வைத்து இருப்பார்கள். ஹெட்லைட் இடுப்பு லைட்டாக ஜொலிக்கும். இதற்கென பிரேத்யேக ஹூக் அங்கு இருக்கும். வீடுகளிலும் கூட இதன் பயன்பாடு உண்டு. இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வைத்தால் போதும் நாலு சுத்தி தா(ழ்)வாரத்திற்கும் ஒளி கொடுக்கும். 

பெட்ரோமாக்ஸ் விளக்கு


பக்கா கமர்சியல் ஹீரோ. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும் இவரின் ரோல் இல்லாமல் இருக்காது. இதற்கு முன்பு அட்வான்ஸாக சொல்லி வைக்க வேண்டும் பற்றாக்குறையாக இருந்தால் பக்கத்து கடையில் வாங்கி தந்து சமாளிப்பார்கள் 'பெட்ரோமாக்ஸ் லைட்டே  தான் வேணுமா?' என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். 

எதிர்பாராத நடக்கும் மய்யித் வீட்டிலும் இரவு நேரத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குதான் பிரதானமாக இருந்தது. அமைதியாக எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் மத்தியில் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒரு வித சத்தத்துடன் கூடுதலான சூட்டை கக்கி கங்குவாக எரியும். Strips கண்ணாடி துண்டுகளுடன் Vertical தோற்றத்தின் அமைப்பில் உள்ளே முட்டை வலைத்திரி மாண்டலின் இருக்கும். அதை பார்த்தால் 'அது எப்படிண்ணே எரியுது?' என்று தனக்கு தானே கேள்வி வந்து தொலைக்கும் அது எனக்கு மட்டுமா? என்று தெரியவில்லை.

அந்த காலக்கட்டங்களில் மின்சாரம் என்ற ஒன்று இருந்தாலும்

மின் வெட்டு சமயங்களிலும் இன்னும் ஒரு சில மின் இணைப்பு இல்லாத வீட்டிலும் மேலே கண்ட விளக்குகள் பயன்பாட்டில் இருந்தது.

இன்று ஏற்பட்ட விளக்குகளின் புரட்சியாக குண்டு பல்பில் தொடங்கி ட்யூப் லைட், சோடியம் வேப்பர்,மெர்குரி, சி.எஃப்.எல். மற்றும் இன்று எல்.இ.டி. என எட்ட முடியாத இடத்திற்கு வந்து விட்டாலும் அன்று மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தை நுகர்ந்தும் கால் வலி என்றால் அதே மண்ணெண்ணெயை காலில் தேய்த்து 

உறங்கியதும் என்றுமே மறக்க இயலாது.

(இதில் மெழுகுவர்த்தி  ஜனரஞ்சகமாக ஏழை வீட்டிலும், மதிப்பு கூட்டப்பட்டு செல்வந்தர்கள் வீட்டிலும் என அனைத்து மக்களின் வீட்டிலும் அன்றும், இன்றும் என்றும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதை சேர்க்கவில்லை.)

-

ஊ.நே

வெள்ளி, 13 டிசம்பர், 2024

நானா-க்கள் சொன்ன பிஸ்மில்லா!

கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும்.

இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம் இருந்தாலும், அன்று ரங்கநாதன் தெரு போல கூட்டம் வழிந்து போகும்.

1990-களின் முற்பகுதியில் ஒரு கடல் சனத்தையும் சன்னமாக அடைத்தது அந்த பழைய காலத்து வீடுகள் தான். அது போக மீதியிருந்தால் சனங்கள் அமர அடுத்த வீட்டு மனங்களும் இருந்தது கொடுத்து உதவ.

அக்கம்பக்கத்து வீடுகளில் கல்யாணம் என்றாலும் நம் வீட்டு கல்யாணம் என்பது போல் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை போட்டு ஆனந்தம் அடைந்தோம். மூன்று நாட்கள் அவர்கள் வீட்டில் தான் உணவு உண்டோம். 

அன்று ஒரு திருமணம் என்றாலே திருமணம் நடக்கும் வீடு விடுத்து, அக்கம்பக்கத்து

மூன்று வீடுகளை கலரிக்காக எடுத்து விடுவோம் அவர்களும் சுத்தமாக தயார் செய்து கொடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலிருந்து வாடகை எடுத்த மூனு,நாலு சுருள் பாய்களையும், ஐம்பதுக்கு மேற்பட்ட அலுமினியம் மடா செம்புகளையும் கூடவே ஒரு கொட்றா உப்பையும் எடுத்து வைத்து விடுவோம்.

அன்று இரத்த கொதிப்பு அதிகமில்லா காலம். இன்று அந்த உப்பு வைப்பது வழக்கொழிந்து போனது(க்கு) ஒருவேளை இது தான் காரணமோ?!🤔

இதற்கு முன்பு நடுநிசியில் புறப்பட்ட மாப்பிள்ளை பஜ்ரு நேரத்தில் பொண்ணு வீடு வந்து சேர, பேனியான், கைவீச்சு, சீனி வாடா, நானாஹத்தா, உல்சம்சாதூள் உள்ளிட்ட அனைத்து பனியாரங்களும், அதனுடன் ஹார்லிக்ஸ் பூஸ்டுக்களும் பரிமாறப்படும். 

அன்றைய பெஸ்ட்மேன்கள் என்பவர்கள் ஒருநாள் முதல்வர் மாதிரி (கிட்டத்தட்ட விட்டில் பூச்சி மாதிரியும் என்று கூட மாறு உதாரணம் சொல்லலாம்) வேறு விதத்தில் சொன்னால் மாப்பிள்ளையின் பவுன்சர்கள் மாதிரி

அவர்கள் எது சொன்னாலும் நாம் இனிமையாக தான் பேச வேண்டும் இல்லையெனில் மாப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமண நிக்காஹ் விருந்து என்றாலும், பனி எடுப்பு களரி என்றாலும் அக்கம்பக்க எய்த்த வீடுகளை கொடுக்க தயாராகவே இருப்பார்கள். இது போக கிளை தாவத்தும் அதுக்கு இன்னொரு கிளை தாவத்தும் உண்டு அதற்கு ஒரு வீடே போதுமானது.

இரண்டு மெயின் தாவத்துகளிலும்,

நாட்டை காக்க முப்படைகளும் தயார் என்பது போல், வீட்டை காக்க (தாவத்களில் பரிமாற மூன்று வீடுகளிலும்) ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக அட்டென்சனிலும், தெரிந்தவர்கள் கூடுதலாக ஒரு கொட்றா  இறைச்சி கேட்டால் வரும் அந்த டென்சனிலும் இருப்போம்.

திருமணத்தில் எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதை *'அன்றே கணித்தார் கமல்'* என்பது போல் பத்திரிக்கை கொடுப்பவர் லிஸ்ட் வைத்தே கூறி விடுவார்கள் எத்தனை பேர் வருவார்கள் என்று 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போல் அவ்வளவு துல்லியம் (ஒரு ஃப்ளோவ்'லே வருது மன்னிக்க!)😀

இன்று போல் சோறு, இறைச்சி, தால்ச்சா தட்டிக்கிச்சி என்பதை அன்று பார்த்தது மிகவும் அரிது.

பரிமாற பைடு நபர்கள் *'கேட்டரிங்கை'*  அன்று அப்படி ஒரு வார்த்தையை காதால் 'கேட்டு அறிந்தது' கூட  இல்லை.

அன்று பக்கத்து வூட்டில் பெரிய மாமாவும், எய்(திர்)த்த வூட்டில் சின்னாப்பாவும், பக்கத்து வூட்லே மச்சானும் இருந்து கலரியை கவனித்து கொண்டார்கள். 

திருமணம் நடக்கும் வீட்டிலிருந்து  *"பிஸ்மில்லா"* கூற சிக்னல் வந்ததும், 

மற்ற மூன்று வீடுகளிலும் மாமா,சின்னாப்பா, மச்சான்களும் அதை உள்வாங்கி மற்ற வீடுகளில் *"பிஸ்மில்லா"* என்று கூறி எதிரொலித்தார்கள். இதைதான் பல வீட்டு திருமணங்களில் பல்வேறுபட்ட நானா-க்கள் *பிஸ்மில்லாஹ்* என்று உதிர்த்தார்கள்.

அன்று அனைவரும் ஒருசேர அன்போடு ஒரே நேரத்தில் உண்டு மகிழ்ந்தோம். 

வயிறோடு மனமும் நிறைந்தது.

இன்று கேட்டரிங் சேவை வழியாக பரிமாறப்படுவது உணவு மட்டுமே. பிஸ்மில்லாவும்  இல்லை. அன்பும்,அரவணைப்பும், மகிழ்வும் சுத்தமாக இல்லை.

உணவு உண்ணும் போது பிஸ்மில்லாவை மறந்தால் வயிறு நிறையாது என்பது போல், மனம் நிறையாமல் வீடு விரைகிறோம்.

வியாழன், 12 டிசம்பர், 2024

கார் காலம், கருமுகில் காலம்!

ஆக்கம்: ஊர் நேசன்

அன்று சென்னை,திருச்சி வானொலி நிலையங்கள் தான் வானிலை அறிவிப்புகளை வழங்கி கொண்டிருந்தன.

இன்றைய புத்தி சுயாதீன வானிலை கணிப்பாளார்கள் போல் அன்று இல்லை.

இன்று அடை மழை வருமா?(வந்தாலும் வரலாம்) பள்ளிக்கு இன்று விடுமுறை கிடைக்குமா? என்று முன் அறிப்புகள் பெற்ற கிட்ஸ்கள் நாங்கள் இல்லை..

லேசான தூறல் மிதமான மழையிலும் பள்ளிகள் நடந்தன.



பலமான சிமெண்ட் கூரைகள் பெற்ற பள்ளிகள் அன்று இல்லை. ஓலை கூரைகள் வேய்ந்தும்,ஓடுகள் வேய்ந்தும் நடுவில் திறந்தவெளி பெற்ற மழையை ரசித்துக் கொண்டே படிக்கும் பள்ளிகள் அமைப்புகள் அன்று. ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கூரை விழலாம் சுவர்கள் சாயலாம் என அச்சமில்லா அச்சமும் இருந்தது.

வானொலி நிலையங்களில் 'மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து' போன்ற பாடல்கள் அன்றைய மழைப்பாடல்களாக இருந்தன.

மழை இன்று சில சமயம் (அக்,நவ) பொய்த்தும் போவதும், சில சம சமயம் மாறுகாலத்தில்(ஜூன் ஜுலை) பெய்(ந்)த்து போல், அன்று நவம்பரில் நனையாத பூமி என்பதே இல்லை. குறைந்தபட்சம் மூன்று மாத மும்மாரியை நாம் கண்டிருக்கிறோம். 

ஒவ்வொரு வீட்டு கிணறு நிறைவதே மழையின் இறுதியாக இருக்கும் (அப்படி தான் அன்று நம்ப வைக்கப்பட்டோம்).

அன்று எதிர்வீட்டு நண்பர்களுடன் அவரவர் வீட்டு திண்ணையில் இருந்துக்கொண்டே

மழையை வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு அலாதியான இன்பம். தெருவில் வரும் வெள்ளத்தில் செருப்பு மிதந்தது போவதை பார்ப்பது கூட வேடிக்கையாக இருக்கும். 'டேய் தண்ணி டீ கலர்லே போகுதுடா' என்று கூறி ஆர்ப்பரிப்போம்.

மும்மாரியின் இறுதியில் தெருக்கள் எங்கும் அழுக்கான நீர் வடிந்து துகிலாக காட்சியளிக்கும் பூமியிலிருந்து ஊற்று(ஊத்து)க்கள் பீறிடும் அதைச்சுற்றி மண்ணால் அணைக்கட்டி விளையாடுவோம்.

கோட்டாய் தெரு, சின்னக்கடை காட்டாணை தர்கா அருகில்  மற்றும் கும்மத் பள்ளி தெரு என ஒவ்வொரு

தெருவுக்கும்  ஒரு குரூப் இதே போன்ற விளையாட்டை மழை விட்டதும் (மழலையாக போல்) தொடங்கும்.

இதுவே அந்த வருட மழையின் விடைபெறல்!.

அடுத்து கூதிர் காலம், முன்பனிக்கால அனுபவங்களும் உண்டு, பதிவு பெரிதாகிவிடும்.

முற்றும்.

-

ஊ.நே

வியாழன், 20 ஜூன், 2024

சூறைக்காற்று - சூரரைப் போற்று..!

பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18-ஜூன்-2024) மாலை சூறைக்காற்றும், மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19-ஜூன்-2024) மாலை சுமார் 7 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய தூறலான மழை பெய்தது, இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் பல இடங்களில் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுசில தெருக்களில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது,  பரங்கிப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டும், தாழ்வாக தொங்கிய வகையிலும் இருந்தது. ஒரு இடத்தில் மின்சாரக் கம்பம் இரு பகுதியாக முறிந்து காணப்பட்டது.

 


பலத்த சூறைக்காற்றின் காரணமாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு பரங்கிப்பேட்டை நகரம் இருளில் மூழ்கியது, கும்மத்பள்ளி தெரு, தீத்தா முதலியார் தெரு, கடற்கார பாவா சந்து, ஜுன்னத் மியான் தெரு, அண்ணா நகர்,  உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் முற்றிலும் வீழ்ந்த மரங்களையும், கிளைகளையும் இளைஞர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.  

 


பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முட்களை அகற்றி பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது போன்ற அறம் சார்ந்த விஷயங்களை வாழ்வியலில் ஒரு அங்கமாக ஆக்கி கொள்ள வேண்டுமென்ற இஸ்லாமிய நெறிமுறைகளுற்கேற்ப பல்வேறு தெருக்களில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்திய இளைஞர்களின் சமுதாய பங்களிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

 


இருளில் மூழ்கிய பரங்கிப்பேட்டையை மீட்டெடுக்க நகரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மின்சார இணைப்புகளை சரிபார்த்து பல பகுதிகளுக்கு இரவே மின்சார விநியோகம் செய்திட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பரங்கிப்பேட்டை அலுவலர்கள்ஊழியர்கள் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

படங்கள்:  நன்றி - பரங்கிப்பேட்டை வாட்ஸப் குழுமங்கள்




திங்கள், 27 மே, 2024

பரங்கிப்பேட்டையில் சுற்றுச்சூழல் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு வரும் கிரஸண்ட் நழ்வாழ்வு சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு ஓவியப்போட்டி நேற்று (26-05-2024) காலை BMH நினைவு ஷாதி மஹாலில்  நடைபெற்றது. பரங்கிப்பேட்டை தழுவிய இப்போட்டியில் ஏராளமான மாணவமாணவியர் பங்கேற்றனர்.

 

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர்  குலாம் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, செயலாளர் நூர் அலி முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் முஹம்மது வலீத் வரவேற்றார்

 


இந்த ஓவியப்போட்டியில்  முதல் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  வஸீலா இக்பால் அலி, உள்ளிட்ட பரிசு பெற்ற அனைவருக்கும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.. பாண்டியன் பரிசு - பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

பரங்கிப்பேட்டை கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பாக போட்டியில் பங்கேற்ற  மாணவமாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

 விழாவில் கிரஸண்ட் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹசன், தாரிக் உசேன், ஷேக் நெய்னா உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் நன்றி கூறினார்.

 

Image Credit: Raja-6311

செய்தியாளர்: ஹாஸியா

 

வியாழன், 14 மார்ச், 2024

பரங்கிப்பேட்டையில் அரசு விழா அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், ணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, மாவட்ட  சிறுபான்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை கடந்த 12.03.2024 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது








இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,  சார் ஆட்சியர்  ராஷ்மி ராணிதாசில்தார் தனபதிபரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ், கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து.பெருமாள், கடலூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சங்கர்,  செயல் அலுவலர் திருமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷரீப்மாரியப்பன்உட்பட பலர் பங்கேற்றனர்சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (13.01.2023) சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, "பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு பதிவு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே, இந்த கட்டிடத்தையும் புதிதாக கட்டித் தரப்படுமா?" என்று சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துணைக் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, "புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்நிலையில் இந்த அரசு நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்:  ச.வ

புதன், 21 பிப்ரவரி, 2024

இறை அழைப்பை ஏற்ற ஆளுமைகள்!

 


பரங்கிப்பேட்டையில் அண்மையில் மூன்று நபர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று இருக்கிறார்கள். அந்த மூவருமே இந்த சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

N.முஹம்மது ஷஃபி : 17-02-2024
கல்வியின் மேன்மை அறிந்த, கல்வித்துறையில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக, பேராசிரியராக, தலைமையாசிரியராக , ஆசிரியராக, ஆசிரியையாக தங்களின் பங்களிப்பினை நல்கிய குடும்பத்தில் இருந்து ஆசிரியராக பணியாற்றியவர் NMS சார் என்றழைக்கப்பட்ட வேதியியல் ஆசிரியர் N.முஹம்மது ஷஃபி அவர்கள். ஊர் பொதுமக்களால் ஷஃபி வாத்தியார் என்றழைக்கப்பட்டார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பரங்கிப்பேட்டையில் தொடங்கப்படாத அக்காலத்தில், பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தினார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் இன்று வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல பொறுப்பான பதவியில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு வேதியியல் துறை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி, பின்னர் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

G.M.நெய்னா மரைக்காயர் : 20-02-2024
தலைமுறை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் என்றாலும் இப்போதைய சமூக வலைத்தள காலகட்டத்தில் அது மிகவும் அதிகரித்து பெரியவர்களுக்கும் - இளைஞர்கள் / வாலிபர்கள் இடையே நீண்ட தூரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் அதை களையும் விதமாகவும், இளைய சக்திகள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்ற நன்நோக்கிலும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (SSA) கால்பந்தாட்ட கழகத்தினை உருவாக்கி மாநிலம் தழுவிய பல்வேறு அணிகளை கொண்டு அவ்வப்போது போட்டிகளை நடத்தி பரங்கிப்பேட்டையின் அடையாளங்களாக கருதப்பட்டு வரும் வரிசையில் பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து, கால்பந்து விளையாட்டையும் இணைத்தது G.M.நெய்னா மரைக்காயர் அவர்கள்.
மீராப்பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான நெய்னா மரைக்காயர், நோன்பு காலங்களில் குறிப்பாக கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவு தொழுகையில் மீராப்பள்ளி நுழைவாயிலில் நின்று தொழுகைக்கு வருவோரை அத்தர் மணம் பூசி வரவேற்பார்.
இவர் தனது இளமைக்காலத்தில் சாபுர் தைக்கால் என்று அழைக்கப்படும் காட்டாணை தர்காவில் உடற்பயிற்சிக்கு உரிய சாதனங்களை நிறுவி தனது சக வயது நண்பர்களை ஒருங்கிணைத்து உடற்பயிற்சி, குத்துச்சண்டை, கராத்தே போன்றவற்றை கற்றறிவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பதை இன்று அவர் வயது பெரியவர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தபோது அப்போதைய நினைவலைகளை பகிர்ந்தனர்.

A.R.ஷேக் இப்ராஹிம் : 20-02-2024
பரங்கிப்பேட்டையில் தப்லீக் ஜமாஅத்தின் அமீராக அறியப்பட்ட A.R.ஷேக் இப்ராஹிம் அவர்கள் நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இளைஞர்களை - பெரியோர்களை தொழுகையின் பக்கம் அழைப்பவராகவே இருந்தார்.
மீராப்பள்ளி மதரஸா வளர்ச்சி, மீராப்பள்ளி நிர்வாகத்திற்குரிய ஆலோசனைகள் தொடர்பான பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியவர்
எப்போதும் பள்ளிவாசல் உடன் தொடர்பிலிருந்து வந்த இவர் மிக அண்மைக்காலம் வரை தனக்கு கடமையான ஒவ்வொரு நேரத்தொழுகையினையும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதையே வழக்கமாக கொண்டு தொழுகையின் முக்கியத்துவத்தை வயது முதிர்ந்த இக்காலத்தில் தன் செயலால் சமகாலத்தில் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
இறை அழைப்பினை ஏற்ற இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருளட்டும்.
குடும்பத்தினருக்கு MYPNO தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...