செவ்வாய், 2 டிசம்பர், 2008

புதிய வலைப்பூ அறிமுகம்

பரங்கிப்பேட்டை பற்றிய புதிய வலைப்பூ பரங்கிப்பேட்டை செய்தி மடல் என்கிற பெயரில் ஹம்துன் அப்பாஸ் உருவாக்கி செய்தி சேவையை அளித்து வருகிறார். சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது தாயகம் திரும்பியிருக்கிறார். விடுப்பில் இருக்கும் இவர் ஊரில் தான் கண்ட விசயங்களை புகைப்படங்களுடன் இந்த வலைப்பூவில் பதிவிடும் விசயம் சிறப்பம்சம். இது பற்றி அப்பாஸ் கூறுகையில் ஊரில் (விடுப்பில்) இருக்கும் மிச்ச நாட்கள் வரை ஊரைப் பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை எனது கண்ணோட்டத்தில் அளித்து வருகிறேன். ஆர்வ மிகுதி மற்றும் சேவை எண்ணத்துடன் நான் இதை செய்து வந்தாலும் விடுப்பிற்கு பிறகு ஊரைப் பற்றிய செய்திகள் என்னால் சேகரித்து தரமுடியாவிட்டாலும் வேறு பதிப்புகளை எனது கண்ணோட்டத்தில் பதிவிடுவேன் என்றார்.

இவரது வலைப்பூ முகவரி: http://pnonews.blogspot.com/




இதேபோன்று கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கமும் (CWO) தனது வலைப்பூ ஒன்றை துவங்கியுள்ளது. இதில் CWO-வின் சேவைகள் மற்றும் இதர தகவல்கள், செய்திகள் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் பெய்த கன மழையின் பாதிப்பின்போது CWO மேற்கொண்ட நிவாரணப் பணிகள் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது.

CWO- வின் வலைப்பூ முகவரி: http://crescentpno.blogspot.com/

திங்கள், 1 டிசம்பர், 2008

வடிந்தது மழை நீர்! பரவுமா விஷக்காய்ச்சல்?

பரங்கிப்பேட்டையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் பாதிப்பிற்கு பிறகு இயல்பு நிலை முழுமையாக திரும்பிவருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரும் வடியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடலூர் பகுதிகளில் விஷக்காய்ச்சல் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.


இது பரங்கிப்பேட்டை பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது குறித்து எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. பரங்கிப்பேட்டை பகுதி முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ குழுவும் களத்தில் உள்ளது. எனவே இறையருளால் நமதூர் பகுதியில் நோய் பரவும் ஆபத்து எதுவுமில்லை' என்றார் உறுதியாக.

பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் துவங்கும் என்று முன்பு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று மாலை மாவட்ட கல்வி இயக்கம் திங்கட் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இந்த விடுமுறை நாளையும் தொடர வாய்ப்பு உள்ளது.

உயிர்கொல்லி பாதுகாப்பு தினம்

இன்று டிசம்பர் முதல் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது.
எய்டஸ் என்பது கெட்ட பழக்கமுள்ள யாருக்கோ வரும் நோய் என்று மட்டும் நம்பினால் அது மூடநம்பிக்கை. முறையற்ற உடல் தொடர்புகளினால் மட்டும் இந்த நோய் பரவுவதில்லை. சுத்தப்படுத்தப்படாத பிளேடுகள், ஊசிகள், மூலம் கூட இந்த நோய் பரவும்.

இறைவனின் மாபெரும் சோதனைகளில் ஒன்றான, இன்றைய மருத்துவ முறைகளில் தீர்வே இல்லாததாக கருதப்படும் இந்நோய்க்கு ஒரே மருந்து இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில் மனக்கட்டுப்பாட்டுடன் முறையாக வாழ்வதுதான்.

பரங்கிபேட்டையில் இருந்து சுமார் நாற்பத்தி எட்டு (48) பேர், சென்னை கிண்டியில் உள்ள எய்ட்ஸ் நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்காக சென்று வருகிறார்கள் என்று இங்கே உள்ள மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக கூறியதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

படத்திளுள்ளவரின் விழிகளில் ஏதேனும் தெரிகிறதா?