திங்கள், 8 டிசம்பர், 2008

டிசம்பர் ஆறு.

டிசம்பர் ஆறு.

பாபரி மஸ்ஜித் கொடியவர்களால் இடிக்கப்பட்ட தினம். அந்த கொடுமையான நிகழ்வு குறித்த தங்களது எதிர்ப்பையும், அதை மீண்டும் மீட்கும் முஸ்லிம்களது வேட்கயினையும் பரங்கிபேட்டையின் இஸ்லாமிய அமைப்புக்கள் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பரங்கிபேட்டைஇலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் விருதாச்சலத்தில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்திலும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் இது போன்ற நிகழ்வுகளில் மௌனமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் ஜமாத்துல் உலமா பேரவையினர் பாபரி மஸ்ஜித் நினைவு சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இதில் மௌலான மௌலவி ஹாஜா முயனுதீன் மிஸ்பாஹி, மவ்லானா லியாகத் அலி மன்பயீ, மவ்லவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பல உலமாக்கள் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் பற்றிய அடிப்படை தகவல்கள், முழுமையான வரலாறு, தற்போதைய நிலை, நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய பல விளக்கங்களை அளித்தனர்.

மார்க்க சடங்கு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி மக்களின் மற்ற பிரச்சனைகளை கண்டுக்கொள்ளதவர்கள் என்று மற்ற கொள்கை சகோதரர்களால் பொதுவாக கூறப்படும் உலமா பெருமக்களின் இந்த பொருள் பொதிந்த சரியான முன்னெடுப்பு மனதிற்கு இதம் தருவதாக மக்கள் கருதுவதை காண முடிந்தது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

புதுப்பள்ளி நிர்வாகத்தில் புதிய மாற்றம் வருமா?

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்தவித நிர்வாக மாற்றத்தையும் கண்டிராத புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு வரும் 19-ந்தேதி தேர்தல் என்று வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் தேர்தலில் கீழ்கண்டவர்களை புதிய நிர்வாகம் அமையப்படவேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முத்தவல்லியாக..... கும்மத்பள்ளி நஜீர் அஹமது
செயலாளராக ......... A. அப்துல் மாலிக்
பொருளாளராக........ அப்துல் காதிர் உமரி

19-ந்தேதி இவர்களை கொண்டு புதிய நிர்வாகம் அமையுமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.

சனி, 6 டிசம்பர், 2008

ஆட்டிறைச்சி கடும் விலை உயர்வு


இந்திய சந்தையில் விலையேற்றத்திற்கு பெயர் போன பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சின்னகடை மார்க்கெட்டில் இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதினால் ஆட்டு கிடாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் போக்குவரத்து சற்று தடைபட்டதும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.