புதன், 1 ஏப்ரல், 2009

'பிரதமர்' என்பவர் யார்; அவருக்கு என்ன அதிகாரம்?

தேர்தலில் பெரும் பான்மை பெற்ற அரசியல் கட்சி தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். தேர்தலில் ஒரே கட்சி மெஜாரிட்டி பெறவில்லையென்றால் ஜனாதிபதி அழைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜனாதிபதியால் பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். பிரதமரின் பரிந்துரைப்படி மத்திய அமைச்சர்களை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். பிரதமரின் சம்பளத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது. பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாதவரும் பிரதமராக முடியும். ஆனால், 5 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபைக்கு தேர்வு பெற வேண்டும்.

அதிகாரம்:
  • நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுமையையும் பெற்றவர் பிரதமர்.
  • அமைச்சர்களின் இலாகாக்களை பகிர்ந் தளிக்கும் பொறுப்பு இவருக்குண்டு.
  • அமைச்சர்கள் குறித்து சர்ச்சை எழும்போது அவர்களின் ராஜினாமாவை கோரும் அதிகாரம் பிரதமருக்குண்டு.
  • அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பிரதமரே.
  • மத்திய அமைச்சர்களில் அனைவரையும் விட அதிகாரம் கொண்டவர் இவரே.
  • பிற துறை அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.

ஜனாதிபதியுடன் தொடர்பு:

  • அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் இடையே பாலம் போல் விளங்குபவர் பிரதமர்.
  • அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் ஒவ்வொன்றையும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.
  • நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு நபர்களை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு உதவி செய்யும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.
  • பிரதமரின் ஆலோசனைப்படி இரு சபைகளின் கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • பிரதமரின் ஆலோசனைப்படி லோக்சபாவை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
  • அமைச்சரவை ஆலோசனைப்படி நாட்டிலோ, ஒரு மாநிலத்திலோ எமர்ஜன்சியை பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்யலாம்.

மற்ற வங்கி ஏ.டி.எம்.,ல் இனி கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு இனி தயங்க வேண்டியது இல்லை. மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் செய்தால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஒரு பண பரிமாற்றத்துக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால், சாதாரண மற்றும் நடுத்த வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர்.

இதையடுத்து, பண பரிமாற்றத்துக்கு எந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் எந்தவித தயக்கமும் இன்றி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இதன் எதிரொலியாக, சில வங்கிகள் தங்களது ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ஓரியண்டல் வணிக வங்கி நிர்வாக இயக்குனர் சின்கா கூறுகையில், 'நாடு முழுவதும் புதிதாக 60 ஏ.டி.எம்.,களை திறக்க முடிவு செய்துள்ளோம்'என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை வரையறுத்துள்ளதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்' என்றார்.

கலெக்டருக்கு 'நெட்'டிலேயே மனு தரலாம்

பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட கலெக்டர்களிடம் இணையதளம் மூலமாகவே அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குறை தீர்வு மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படுகிறது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பான பதிலும், மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, மனுக்கள் அளிப்பது மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்த மாவட்ட கலெக்டருக்கும் இணையதளம் மூலமே மனுக்களை அனுப்பலாம். அந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை மின்னணு முறையில் பரிசீலிக்கப்படும்.
மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து இணையதளம் மூலமே, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க முடியும். இதற்கான இணையதள வசதி துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in முகவரியில் சென்று, தேசிய தகவல் மைய உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தளத்தில், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.