ஞாயிறு, 10 மே, 2009

ஒருங்கிணைந்த எம்.ஏ., வரலாறு: பல்கலை.,யில் படிக்க வாய்ப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலை., வரலாற்றுத் துறை சார்பில் ஒருங்கிணைந்த (ஐந்து ஆண்டு) முதுகலை வரலாறு (எம்.ஏ.,) படிக்கலாம் என டீன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

கடந்த கல்வியாண்டு முதல் இந்த பாடபிரிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இந்த பாடபிரிவின் மூலம் எம்.ஏ., படிக்கலாம்.

ஐ.ஏ.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பாடபிரிவில் சேரும் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., தொல்லியல் வல்லுநர்கள், ஆவணக் காப்பக காப்பாளர்கள், கல் வெட்டியல் வல்லுனர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சுற்றுலா நிர்வாகம், பத்திரிகையாளர்களாக பணிபுரியும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு 94431 91277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

என தெரிவித்துள்ளார்.

விவசாய படிப்பிற்கு 11ம் தேதி முதல் விண்ணப்பம்!

இளநிலை விவசாயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம் கூறியிருப்பதாவது:

விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து, 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 'பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், புதிய எண் பி.44, 6வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை' என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி: 26263484.

இவ்வாறு, தோட்டக்கலை வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக புகார்! திருமாவளவன் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு!!

பரங்கிப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் நேரம் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பரங்கிப்பேட்டை ஒன்றியமான சின்னூர், புதுப்பேட்டை, கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து திருமாவளவன் வாக்கு சேகரித்ததாக தெரிகிறது.

அதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக பரங்கிப்பேட்டை போலீசார், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.