திங்கள், 11 ஏப்ரல், 2011

பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் ATM வசதி: தி.மு.க கோரிக்கை

பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் A.T.M., வசதி செய்து தர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் A.T.M., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் A.T.M,ற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகரித்து வரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக A.T.M, வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 9 ஏப்ரல், 2011

இறப்புச் செய்தி

வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான Z. கபீர் கான் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 ௦ மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

சிதம்பரம் தொகுதிக்கு கூடுதல் துணை ராணுவ பாதுகாப்பு தேவை! மா.கம்யூ வேட்பாளர் கோரிக்கை


சிதம்பரம் சட்டசபை தொகுதியை பதட்டமானதாக அறிவித்து கூடுதல் துணை ராணுவ பாதுகாப்பு போட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு மா.கம்யூ., வேட்பாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கடந்த 31ம் தேதி பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் ஓட்டு சேகரிக்கச் சென்ற போது பிரச்னை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துபெருமாள், அவரது தம்பி முடிவண்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கொத்தட்டைக்கு சென்று காண்டீபன், தாமோதரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலையீட்டால் நடவடிக்கை துரிதப்படுத்தாமல் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பதட்டமாகவே உள்ளது.

மேலும் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் வன்முறை சம்பவங்கள் நடத்தி வாக்காளர்களை அச்சுறுத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்து, அடியாள் பலத்துடன் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. எனவே சிதம்பரத்தை பதட்டமான தொகுதியாக அறிவித்து கூடுதலாக துணை ராணுவ பாதுகாப்பு போட வேண்டும். கொத்தட்டை கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துபெருமாள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

தின மலர் செய்தி