புதன், 5 ஜூன், 2013

கால்பந்தாட்ட போட்டி ஏற்பாடுகள் ஜரூர்...!

பரங்கிப்பேட்டை: மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை மறுதினம் பரங்கிப்பேட்டையில் நடைபெற இருக்கின்றது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் செய்து வருகின்றனர்.  நிறைவு நாளான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றுகின்றனர்




செவ்வாய், 4 ஜூன், 2013

பரங்கிப்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

பரங்கிப்பேட்டை: தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.கழக தலைவருமான கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் தமிழகமெங்கும் அக்கட்சியினரால் நேற்று கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தி.மு.கழகம் சார்பில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு பால்-ரொட்டி-பழங்கள் வழங்கப்பட்டது.

நகர தி.மு.க செயலாளர் ஜெ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்  கலந்துக்கொண்டு  பால்-ரொட்டி-பழங்களை வழங்கினார். பின்னர் நான்கு இடங்களில் தி.மு.க கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், நகர அவைத்தலைவர் தங்கவேல்,பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.காஜா கமால், பொற்செல்வி,  ஒன்றிய பிரதிநிதி கோமு, பக்ருத்தீன், சிவபாலன், நாசர், மாயகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.

படம்: ஹமீது கவுஸ்

திங்கள், 3 ஜூன், 2013

புதுச்சேரி அரியாங்குப்பம் பாலம் திறக்கப்பட்டது..!



புதுச்சேரி: புதுவை அரியாங்குப்பம் ஆற்றின் குறுக்கே கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் 1888-ம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. மேலும் பாலத்தின் பழமையை கருத்தில் கொண்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2004-ம் ஆண்டு புதிய பாலம் கட்ட அரசு ஆணை பெறப்பட்டது.

இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணி 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. நிதி நெருக்கடி காரணமாக இடையே இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது புதிய 4 வழி கொண்ட பாலம் மற்றும் இணைப்பு சாலைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தது.

இந்த புதிய பாலம் கட்டுவதற்கு இணைப்பு சாலைக்கு ரூ.6 கோடியே 15 லட்சம் உள்பட ரூ.26 கோடியே 5 லட்சம் செலவானது. பாலத்தின் மொத்த நீளம் 170.75 மீட்டராகும். அகலம் 20.03 மீட்டர். நடைபாதையின் அகலம் 1.86 மீட்டர். பாலத்தின் இரு புறங்களிலும் பழைய சாலைகளுடன் இணைப்பதற்கு வடக்கில் 380 மீட்டருக்கும், தெற்கில் 780 மீட்டருக்கும் இணைப்பு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலத்தை புதுவை மக்களுக்கு அர்பப்ணிக்கும் விழா இன்று காலை நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி போக்குவரத்தை தொடங்கி வைத்தார். சபாநாயகர் சபாபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாட்டன் சாங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் பி.ஆர்.பீனா, பொதுப் பணித்துறை தலைமை என்ஜினீயர் மனோகர், வாரிய தலைவர்கள் சுரேஷ், பாஸ்கரன், ஞானசேகரன், ராஜேஷ், வேல்முருகன், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பக்தவச்சலம், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பொன்.ராஜேந்திரன், குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.