புதன், 9 ஜனவரி, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.


அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மீராப்பள்ளி மயானம் (கபர்ஸ்தான்) மேம்படுத்துதல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1.75 லட்சம் ஆகும். இத்திட்டம் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிடைக்க பேரூராட்சி தலைவர் திரு. யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி!


நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி!
கடந்த ஆண்டு வரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருந்த இடத்தில் இராஜஸ்தான் அரசு நிதியுதவியுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தயார் நிலையில் உள்ளது. நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் இப்பள்ளி அமையப் பெற்றிருந்தாலும் பாதுகாப்பு சூழல் இல்லாததாகவே உள்ளது.
பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள மதில் சுவர் பழைய நிலையிலேயே குட்டி சுவராகவே உள்ளது. இரு அடுக்குகளாக பள்ளி அமையப் பெற்றிருப்பதால் பள்ளியறைகள் அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகவே அமைந்துள்ளது. முக்கியமாக முஸ்லிம் மாணவிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்புதிய பள்ளிக்கு வகுப்புகள் மாறுவதற்கு முன்பே பள்ளி நிர்வாகம், பேரூராட்சி மன்றம் மற்றும் ஜமாஅத் போன்ற அமைப்புகள் இதனை அக்கறை கொண்டு உடனடியாக அரசின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.

செவ்வாய், 8 ஜனவரி, 2008

பரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.



பரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.
பரங்கிப்பேட்டை-கிள்ளையிடையே அமைந்துள்ள வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைய வேண்டும் பல ஆண்டுகளாக பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்ததின் பலனாக தற்போது திட்டநிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கியும் விட்டது.
இத்திட்டத்தின் பலனாக பாலம் அமையப்பட்டவுடன் இனி பரங்கிப்பேட்டை-சிதம்பரத்திற்கு 14 கி.மீ பயண தொலைவாக சாலைப் பயணம் அமையப்பெறும். இதன் மூலமாக பரங்கிப்பேட்டை, கிள்ளை மக்கள் பயனடைவது மட்டுமின்றி, ஊரின் வர்த்தகமும் முன்னேற்றமடையும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது